(Reading time: 15 - 30 minutes)

நீ சும்மாவேதான் இருக்க.. ஏன்க்கா.. நீயும் வேலைக்குப் போயி எனக்கு ஏதாவது வாங்கிதருவனு பாத்தா.. ம்ம்ஹீம்ம் நடக்கவே நடக்காது போல.. நானே இன்னும் ஒரு வருஷத்துல வேலைக்கு போய்டுவேன்.. நீ சும்மா சும்மா சென்னைக்கு போற காசையும் ரெசியூம் ப்ரிண்ட்அவுட் எடுக்குற காசையும் சேர்த்து வச்சாலே உருப்புடியா ஏதாவது பண்ணலாம்..’ என்று பேசிக்கொண்டே சென்றவன் தன் அக்காவின் முகமாறுதலை கவனிக்கவில்லை.

எப்போதும் சண்டைக்குனா ரெடியா இருப்பா இன்னைக்கு என்ன பதிலே பேசல என்று எண்ணிக்கொண்டே மேட்ச்சில் இருந்த கண்களைத் திருப்பி அவளை பார்த்தவன் அதிர்ந்துவிட்டான். ஜீவாஅழுதுக்கொண்டிருந்தாள்.

ஜீவாவிற்கு அழுவது பிடிக்காது. யார் முன்னும் அழக்கூடாது என்று எண்ணுபவள். ஆனால் இன்று அவள் அழவும் ‘அக்கா நா வெளாட்டுக்குதானே சொன்னேன்..’ என்றவனிடம் ‘ஆமாடா நா சும்மாவேதான் இருக்கேன்.. கடைசிவர வேலைக்கு போகபோறதே இல்ல.. தண்டசோறுதான் சாப்புடுறேன்..சொல்லு இன்னும் என்னலாம் சொல்லனுமோ சொல்லு’ என்று கத்தித் தீர்த்துவிட்டாள்.

‘பெத்தது ரெண்டு.. ஆனா எப்பப் பாரு சண்ட.. என்னடா இங்க சத்தம்..’ என்றபடி சமையலறையில் இருந்து வந்த சித்ரா மகள் அழுவதைக் கண்டவுடன் ’ஜீவா.. என்னாச்சுமா..? ஏன் அழற..?’ என்று பரிவாய் கேட்டவரிடம் ‘ஒண்ணுமில்லமா’ என்று கண்ணைத்துடைத்துக் கொண்டுக் கொல்லைப்புறம் சென்றுவிட்டாள்.

மகனிடம் நடந்ததைக் கேட்டறிந்தவர், ‘சரி நீ போ.. அவள கொஞ்சம் தனியா விடு’ என்று அவனிடம் கூறியவர் ‘என் பொண்ணுக்கு ஒரு நல்ல வழிய காட்டிடு முருகா’ என்ற வேண்டுதலோடு அவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.

இவையனைத்தையும் கேட்ட பாலா, ‘ இப்ப எங்கடா உங்க அக்கா?’ என்றான். ‘கிணத்துக்கட்டயில உக்காந்திருக்கா’ என்ற செல்வாவின் பதிலைத் தொடர்ந்து அங்கு சென்றான்.

‘ஏய் பச்சமிளகா ! என்ன ஃபீலிங்க்ஸ் ஆஃப் இந்தியாவா ?, என்று கிண்டலாக கேட்டவனுக்கு ஒரு முறைப்பே பதிலானது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவள் அருகிலேயே உட்கார்ந்தான் பாலா.

‘என்ன பச்சமிளகானு கூப்புடாதனு எத்தன தடவ சொல்லுறது’ என்றாள் கோபமாக. ‘ஹை ! பாருடா ! உனக்கு தான் பச்சமிளகா மேல லவ்வோ லவ்வு அதுவும் நாலு வயசுல இருந்து..’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே சிரித்துவிட்டாள் ஜீவா.

அது என்ன பச்சமிளகா?

ப்போது ஜீவாவுக்கு நான்கு வயது இருக்கும். ஒரு நாள் வாசலில் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு சோகமாக அமர்ந்திருந்தாள்.

தன் தையற்கடையில் இருந்து வீட்டிற்கு வந்த ஜீவாவின் தாத்தா சீனிவாசன் பேத்தியைக் கண்டதும் ‘என்னடா பாப்பா சோகமா இருக்கீங்க?’ என்று கேட்டதுதான் தாமதம் ‘ஆங் ஆங்’ என்று தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள்.

உடனே பேத்தியைத் தூக்கி மடியில் இருத்திக்கொண்டவர், ‘அச்சச்சோ அழக்கூடாது பாப்பா’ என்றபடி தன் தோளில் கிடந்த துண்டினால் கண்களைத் துடைத்துவிட்டவர், ‘அம்மா அடிச்சுட்டாங்களா பாப்பாவா?’ என்றார். அதற்கு இல்லை என்று இடவலமாய் தலையை ஆட்டியவள் அழுகையை நிறுத்தவில்லை.

அதற்குள் சத்தம்கேட்டு வாசலுக்கு வந்த சித்ரா, ‘வாங்க மாமா, கொல்லைப்பக்கம் உங்க பேத்தி பண்ணிவச்சுருக்க வேலைய வந்து பாருங்க, சமைக்க வச்சிருந்த பச்சமிளகா எல்லாம் எடுத்துப்போய்  பிச்சுப்போட்டு தண்ணிய ஊத்தி வச்சுருக்கா.. கேட்டா செடி வைக்கிறாளாம்.. மிளகா கண்ணுல பட்டுருந்தா என்னாவுறது.. அதுக்கு திட்டிட்டேனுதான் இப்ப அழுதுட்டு இருக்கா’ என்றார்.

‘இல்ல’ என்று அழுகையினூடே கூறிய ஜீவா, ‘அம்மா செடி மொளைக்காதுனு சொல்லிச்சு’ என்று மேலும் கூறிவிட்டு அழுகையைத் தொடர்ந்தாள். ‘சரி சரி அழாதீங்க.. பாப்பா நல்லப்புள்ள தானே.. அழக்கூடாது.. பச்சயா விதை போட்டா செடி மொளைக்காதுடா பாப்பா காயவச்சுப் போட்டாதான் மொளைக்கும்’ என்று தாத்தா சொன்னவுடன் எழுந்து கொல்லைப்புறம் ஓடிவிட்டாள், ‘வா தாத்தா வா.. நாம காயவைக்கலாம் வா’ என்று கூறிக்கொண்டே.

‘இந்த மிளகா வேணாம் பாப்பா.. நாம வேற மிளகா எடுத்து காயவைக்கலாம்’ என்று தாத்தா சொன்னதைத் தொடர்ந்து தினமும் மிளகாய் காயவைத்த தட்டை எடுத்துக்கொண்டு ‘தாத்தா மிளகா காய்ஞ்சுட்டா காய்ஞ்சுட்டா !!’ என்றும் அந்த விதையைப் போட்டு ஓரிரு செடிகள் முளைத்தபின் ‘மிளகா வருமா தாத்தா !!’ என்றும் கேட்டு கேட்டு ஒருவழியாய் ஒரு செடியில் இருந்து சிறிதாய் மிளகாய் ஒன்று காய்த்ததைத் தொடர்ந்து வீட்டிற்கு வருவோர் போவோர் அனைவரிடமும் ‘ ஹே ! எங்க வீட்ல மிளகா மொளச்சுருக்கே !’ என்று சொல்லிச்சொல்லி ஜீவாவிற்கு ஒரே குதூகலம்தான். இதுதான் பச்சமிளகா என்ற ஜீவாவின் பட்டபெயருக்கு காரணம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.