(Reading time: 11 - 22 minutes)

"த பாத்தா பாவமா இருக்குடா, அது அவ்ளோல தாங்காது."

"பாவமா இருக்குனா, உண்மைய சொல்லிரு"

"என்னடா சொல்ற?"

"சொல்லிட்டு அழு, அழற மாதிரி நடி. ஒரு மாசம் அப்டியே இரு."

"அப்டி பண்ணா என்ன ஆகும்"

"பொண்ணு கண்ல தண்ணிய பாத்துட்டா, எந்த ஒரு ஆம்பளயும் மன்னிச்சுருவான். அவள மனப்பூர்வமா நம்ப ஆரம்பிச்சுருவான். அப்பறம், நானே போய், நம்மல பத்தி அவன்ட சொன்னாலும் நம்பமாட்டான்"

"அப்டியா?"

"இன்னைக்கு ட்ரை பண்ணு"

"ஓ.கே. அரவிந்த்"னு போன கட் பண்ணினேன்.

வீட்டு வேல எல்லாத்தையும் பாத்து முடிச்சுட்டு,  தூங்கலாம்னு அகிலன் ரூமுக்கு போனேன். அவன் எழுதி வச்சுட்டு போன கத என் கண்ணுல தென்பட்டுச்சு, உக்காந்து படிக்க ஆரம்பிச்சேன்.

ரு வழியா 6 மணிக்கே, பொண்ணு வீட்டுக்கு வந்துவிட்டோம். இத்தருணத்திற்காக தான் நான் பிறந்ததிலிருந்து காத்துக்கொண்டிருந்தது போல எனக்குள் ஒரு குதூகலம். அவளை பார்க்க மிகுந்த ஆவலுடன் உட்காந்திருந்தேன். அப்போ தான் ஒருத்தன் கேட்டான், " மாப்ள என்ன பண்றீங்க?"

"ரெனால்ட் கார் கம்பெனி ல வேல பாக்குறேன்"

"எவ்ளோ சம்பளம் வாங்குறீங்க?"

என் அம்மா குறுக்கிட்டு, "அதுலா கை நெறைய சம்பளம் வாங்குறான். நீங்க பொண்ணு ரெடியாகிடாளானு கேளுங்க" என்றாள்.

என் அம்மா காதுகிட்ட போய், "யாருமா இவன், மொதல்ல அவனுக்கு, மிக்சர், சுவிட்டுனு எதாவது சாப்ட குடுங்க. அப்போதான் அமைதியா இருப்பான்."

"டேய். அமைதியா பேசுடா, கேட்ற போகுது"

"பொண்ணு இன்னும் 5 நிமிஷத்தில ரெடியாய்டுவா, நீங்க இத சாப்டுங்க"னு மிக்சர் குடுத்தாங்க. அப்போ இன்னும் அரைமணி நேரம் ஆகும்னு தெரிஞ்சுகிட்டேன்.

நான் தயாலன். வயது 33. சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை சுமந்தவன். ஆம். என்னுடைய அப்பா 23 வருடங்களாக பக்கவாதத்தால் படுத்த படுக்கையில் இருக்கிறார். எங்களால் முடிந்த வரை அவருக்கு வைத்தியம் பார்த்தோம். எந்த பயனும் இல்லை. என் அப்பாவும் அம்மாவும் காதல் திருமணம் புரிந்தவர்கள். அம்மா இந்து, அப்பா முஸ்லீம். அம்மாவை திருமணம் செய்ய, அப்பா இந்துவாக மதம் மாறினார். இருவர் வீட்டிலும் எதிர்ப்பு, இன்று வரை யாரும் வந்து பேசியது இல்லை. என் தாய்மாமா தனபாலைத்தவிர.

என் உலகமே, என் அம்மா, தங்கைமட்டும் தான். அவர்களுக்காக பத்து வயதில் படிப்பை துறந்து, கார் வொர்க் ஷாப்பில் வேலைக்கு சேர்ந்தேன். இன்று வரை உழைத்துக்கொண்டிருக்கிறேன். என் தங்கை, அம்மாவின் சந்தோஷத்திற்காகவே இதுவரை வாழ்ந்திருக்கிறேன். எனக்கென்று பெரிதாக எந்த ஒரு ஆசையையும் நான் மனதில் வளர்த்தது இல்லை. ஒன்றே ஒன்றை தவிர. என் வருங்கால மனைவியை பற்றிய ஆசை தான் அது.

சிறு வயதில் இருந்தே, என் நெஞ்சை அரிக்கும் கனவு, ஏக்கம், ஆசை எல்லாம் வருங்கால மனைவியைப் பற்றியதுதான். அவளுடன் சேர்ந்து, எப்படியெல்லாம் வாழலாம் என்று பலநாள் நான் கற்பனையில் மிதந்துள்ளேன். அதே கற்பனையில் தான் இப்போது, அவளை பார்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

அபிநயா கையில் காபி எடுத்து வந்தாள். பச்சை கலர் புடவையில் அவள், இயற்கை அன்னையின் குழந்தையை போல் இருந்தாள். அவள் முகத்தை பார்க்கும் அனைவருக்கும் அமைதி கிடைக்கும் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும். அப்படி ஒரு சாந்தமான முகம் அவளுக்கு. நான் அவளை பார்க்கும்போதெல்லாம், ஒரு தெய்வீக உணர்வு எனக்குள் தோன்றும். எனது பாரம் அனைத்தும் இறங்கி நான் மிதப்பது போல ஒரு நிலைக்கு அது என்னை அழைத்துசெல்லும்.

அவள் என் அருகில் வர வர, என் இதயம் பட பட படவென்று  அடித்தது. அவள் அழகில் நான் வெட்கப்பட்டு தலை குனிந்தேன். என்னெதிரே அவள் வந்து, தலை குனிந்து நின்றாள். அந்த ஒரு நிமிடம், என்னுள் ஓர் ஆழ்ந்த அமைதி. அவளது மூச்சுக்காற்று என்மீது பட்டதும், இந்த உலகையே மறந்தேன். மொட்டு பிரிந்து பூவாக மலர்வதைப்போல, அவள் உதடு மெல்ல பிரிந்து, புல்லாங்குழலின் இசை போல அவளது குரல், என்னை மீட்டு சுய நினைவிற்கு கொண்டுவந்தது. நான் காபியை எடுத்தவுடன். தண்ணீரில் ஆடும் தாமரைப்பூவை போல அவள் தலையை லேசாக ஆட்ட, அவள் கன்னத்தில் முத்தமிட்டு சென்றது அவளது காதணி.

அவள் நடந்து செல்லும் போது, அவளது ஒவ்வொரு அசைவையும் ரசித்தேன். என் அம்மாவிடம் அவளை பிடித்திருக்கு என்று சொன்னது மட்டும் தான் எனக்கு ஞாபகமிருக்கிறது. அதன் பின் யார், என்ன பேசினார்கள் என்று எதுவுமே எனக்கு கேட்கவில்லை. கொஞ்ச நேரம் வெட்கப்படுவது, கொஞ்ச நேரம் அவளை ரசிப்பது, கொஞ்ச நேரம் வெட்கப்படுவது, கொஞ்ச நேரம் அவளை ரசிப்பது, இதையே தான் செய்துகொண்டிருந்தேன். அவளது வீட்டில் இருந்து வருவதற்கு மனமே இல்லை. இருந்தாலும், வேறு வழியில்லாமல் என் சொந்தங்களோடு வீட்டிற்கு வந்தேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.