(Reading time: 22 - 44 minutes)

ன் மனதில் நிம்மி கற்பனை செய்துகொண்டிருக்க புஷ்பா அறைக்குள் வந்து, “என்னம்மா இப்போ உக்காந்துகிட்டே தூங்குறியா..போய் முதல்ல தலைக்குக்குளிச்சுட்டு வாடா...சேலை எடுத்து வெச்சிருக்கேன் அத கட்டிட்டு சீக்கிரம் வா ..” அம்மா விரட்டினார்....

“அம்மா சேலையா..?” என்று அலறியவள், “நான் என்ன தினமும் அதையா கட்டுறேன்? எல்லாம் சுடிதார்லயே பார்த்துட்டுப்போகட்டும்....” என்று எரிச்சலுடன் கத்தினாள். அதற்குள் நிம்மியின் சொந்தங்கள் வீட்டிற்கு வர, நிம்மியைத் தயார் செய்யும் பொறுப்பை அவள் பெரியம்மா மகள் சுசிலாவிடம் விட்டுச்சென்றார் அம்மா.

“நான் பட்டுச்சேலை கட்டிக்கொள்ள மாட்டேன், இவ்வளவு பூ வைத்துக்கொள்ள மாட்டேன், இவ்வளவு நகை அணிந்துகொள்ள மாட்டேன்” என்று விவாதித்துக்கொண்டிருந்த நிம்மியை ஒருவழியாக சமாளித்து பெண் பார்ப்பதற்கு தயாராக்கிவிட்டாள் சுசிலா.

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாச்சு ...எல்லாத்தையும் தயார் செய்து வைங்க....” என்று ஒருவர் கூற அதைக் கேட்டமாத்திரத்தில் பதறியது நிம்மியின் நெஞ்சம்.

சுமார் இருபது பேர் கொண்ட கும்பல் பெண்பார்க்க வந்திருந்தது. மாப்பிள்ளை வீட்டாரை நன்கு உபசரித்துக்கொண்டிருந்தனர் நிர்மலா வீட்டினர். ஆகாஷின் முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பில்லை..சிறிது நேரம் கழித்து “மறுமகளைப் பார்க்கலாமா...? என்று ஆகாஷின் அம்மா கேட்க, “இதோ அழைச்சுட்டு வரேன்...” என்று புஷ்பாவின் குரலும் நிர்மலாவிற்குக் கேட்டது. “நானும் வரேன்” என்று செண்பாவும் புஷ்பாவுடன் சென்றார்.

“நிர்மலா... நான்தான் ஆகாஷின் அம்மா ..” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் செண்பா. அவரைப் பார்த்தமத்திரத்தில் நிம்மிக்குப் பிடித்துவிட்டது. இருவரும் “ வா போகலாம்” என்று நிம்மியை அழைத்துச் செல்ல அவளும் தலையைக் கீழே குனிந்தவாறே உடன் சென்றாள்.

நிம்மியின் அருகே வந்த சுசிலா, “அதோ அங்கே பச்சை நிற உடையில் இருக்கிறாரே அவர்தான் மாப்பிள்ளை..நன்றாகப் பார்த்துக்கொள்..” என்றார். நிம்மியும் சற்றே முகத்தை நிமிர்த்திப் பார்க்க, அதிர்ந்தே போனாள். காலையில் கடையில் பார்த்த அதே சிடுமூஞ்சி..” ச்சீ....இவனை ஒரு நொடி பார்த்தபோதே அவனுடன் ஒத்துப்போகவில்லையே...இவனுடன் எப்படி நம் வாழ்வைப் பகிர்ந்துகொள்வது..? சான்ஸ்சே இல்ல...எப்படியும் அவனுடன் தனியே பேசும் சந்தர்ப்பம் கொடுப்பார்கள்.. அப்போது, வேறு ஒருவரை காதலிப்பதாக பொய்யோ இல்லை இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்ற உண்மையையோ சொல்லிவிடலாம் “ என்று யோசனை செய்திருந்தாள்.

தே சமயம் ஆகாஷிற்கு நிர்மலாவைப் பார்த்தமாத்திரத்தில் எரிச்சல் மண்டியது. அவன் அவளை நித்யாவுடன் ஒப்பிட்டுப்பார்க்கவில்லை..அப்படிப் பார்ப்பதற்கு நிர்மலாவின் குணநலன்கள் ஏதும் அவனுக்குத் தெரியாதே... ஆனால், “நித்யா இருந்த இடத்தில் நிர்மலாவா...” நினைக்கும் போதே வலியுடன் கூடிய எரிச்சல் அவனிடத்தில். “ இப்படி ஒரு ராட்சசியை நான் மணந்துகொள்ள மாட்டேன்..” தன் மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டான் அவன்.

இவ்வாறாக இருவரும் சிந்திக்க, அவர்களது பெற்றோர் நேர் எதிராக யோசனை செய்து, இறுதியில் திருமணத்தை ஒரே வாரத்தில் நடத்த முடிவு செய்தனர். ஆகாஷ் – நிர்மலா இதைத் துளியும் எதிர்பார்க்கவே இல்லை. இவ்வளவு நாட்கள் வாழ்வில் நிம்மதியும், சுதந்திரமும் கொடுத்த இறைவன் இன்று நரகத்தைப் பரிசாகத் தந்ததாக நிர்மலா நினைக்க, மறுபுறம், அன்று வரை நித்யாவைப் பிரிந்த சோகத்தில் இருந்த அவனை மேலும் கஷ்டப்படுத்தி ரசிக்கிறான் இறைவன் என்று ஆகாஷ்  நினைக்க, இருவரும் தங்கள் விதியை நினைத்து நொந்துகொண்டனர். ஆகாஷ் வீட்டார் நிர்மலா வீட்டாரிடமிருந்து விடைபெற்று வீடு திரும்பினர்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை..

முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே..

ஆகாஷ் தனது பெற்றோரிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. நிர்மலாவோ நேரெதிராக இந்தத் திருமணத்தை எப்படியாவது நிறுத்தியேத்தீர வேண்டும் என்று பெற்றோரிடம் சண்டைபோட்டுக்கொண்டிருந்தாள். அவர்கள் நிம்மியை சமாதானம் செய்து எப்படியாவது இத்திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்து தோற்றுத்தான் போயிருந்தனர்.

இறுதியில், ”இதுதான் உன் வாழ்க்கை.. இதை நீ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்..” என்று அவள் பெற்றோர் மிக உறுதியாகக் கூறினர். “எந்த ஜென்மத்துல என்ன பாவம் செய்தேனோ இப்போ நல்லா அனுபவிக்கிறேன்” என்று தனக்குள் நொந்து நொந்து அழுதாள் நிம்மி. “இனி என் வாழ்வு என் கையில் இல்லை ,இந்த நரகத்தை ஏற்கத்தான் வேண்டும் போல”, என்று வருந்தினாள்.

திருமணத்திற்கு நாட்கள் நெருங்கிக்கொண்டிருந்தது. இருவரின் மனப்போராட்டத்தை எவரும் சட்டைசெய்யவில்லை. மண்டபத்திற்குக் கிளம்பும் நாளும் வந்தது. தான் இத்தனை நாள் மகிழ்வுடன் துள்ளித்திரிந்த வீட்டைவிட்டு, தன் பெற்றோரை விட்டுப் பிரியும் அந்த நொடியை நினைத்து, தனக்காகக் காத்திருக்கும் அந்த புது வாழ்வு எப்படி அமையுமோ என்று நினைத்து மனம் துடித்தது நிர்மலாவிற்கு. ஏதாவது மேஜிக் நடந்து அனைத்தும் கனவென மாறாதா..? என்ற ஆசை அவளுக்குள்ளே. மனமுழுக்க பாரத்துடன் மண்டபம் வந்தடைந்தாள் நிர்மலா. அன்று மாலை நிச்சயதார்த்தம்..அனைத்து ஏற்ப்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.