(Reading time: 19 - 37 minutes)

"நான் மஹத்ரு"

"இந்த மூஞ்சிக்கு பேரை பாத்தியா" என ஒருவன் கமெண்ட் அடிக்க ஆசிரியர் அவனை முறைத்தார்.

"நான் வெங்காயப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவன்.பன்னிரெண்டாம் வகுப்பில் என் மாவட்டத்தில் முதல் மாணவனாக வந்தேன்.என் கிராமத்திலிருந்து கல்லூரி படிப்பிற்க்காக வெளியே வந்த முதல் மாணவன் நான் தான்.எனக்கு படித்து கை நிறைய சம்பாதித்து என் ஊருக்காக இலவச பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்பதே என் லட்சியம்" என ஆங்கிலத்தில் கூற அவனின் ஆங்கில உச்சரிப்பை பார்த்து அனைவரும் வாயை பிளந்தனர். இயல்பாகவே எதையும் கற்று கொள்ளும் ஆர்வம் இருந்த காரணத்தால் ஆங்கிலமும் எளிதாக அவன் வசமானது.

"நான் மஹாகன்யா.பன்னிரெண்டாம் வகுப்பில் கணினி அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்து படித்தேன்.என்னுடைய லட்சியம் உணவில்லாமல் இவ்வுலகில் யாருமே வாழ கூடாது என்பதே.'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழிப்போம்' என்று சொன்ன பாரதி வழியில் நடந்து இவ்வுலகில் மாற்றத்தை காண விரும்புகிறேன்" என சொல்ல அனைவருமே அவர்களை அறியாமல் கை தட்டினர்.

முதல் நாளைப்போல் சில நாட்கள்  எந்த பிரச்சனையும் இல்லாமல் கழிய, சீனியர்ஸ் பிரெஷர்ஸ் பார்ட்டிக்கு அழைப்பு விடுத்தனர்.

பிரெஷர்ஸ் பார்ட்டியில் மஹாகன்யாவை சீனியர்ஸ் நடனம் ஆட சொல்ல பள்ளியிலிருந்தே நடனத்தில் பங்கேற்றதால் அருமையாக ஆடினாள்.அவளை தேவதையாகவே கொண்டாடும் ஆண்கள் அவளின் நடனத்தால் அவர்கள் இதயத்தை தொலைத்தனர். ஆண்கள் போட்டிப் போட்டு கொண்டு போய் அவளிடம் வந்து அவள் நடனத்தை புகழ்ந்தனர். மஹத்ருவிற்கும் ஆசை தான்.அவளை கண்டது முதல் வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தாலும், எங்கே தான் போய் பேசினால் அவள் முகத்தில் அடித்தபடி எதாவது கூறிவிட்டால் தன்னால் தாங்க இயலாது என அந்த ஆசையை விட்டு விட்டான்.

அடுத்து மஹத்ரு முறை சீனியர்ஸ் அவனை ஒருமுறை ஏற இறங்க பார்த்து மூன்றாம் பிறை படத்தில் கமல் செய்வது போல் ஆட்ற ராமா ஆட்ற என செய்ய சொல்ல, அவனுக்கும் வேறு வழி இல்லாததால் அதை செய்ய மொத்த அரங்கமும் அவனை எள்ளி நகையாடி நகைத்தது.இன்னொரு சீனியர் அவனை 16 வயதினிலே சப்பாணி கமல் மாதிரி நடக்க சொல்ல அதையும் செய்தான். உள்ளுக்குள் வலி எழுந்தாலும் இத்தனை பேரை சிரிக்க வைத்த பாக்கியம் தனக்கு கிடைத்ததாகவும் மற்றும் இது அவன் திறமையை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பாகவுமே எண்ணினான். இதனால் இத்தனை கேலி கிண்டல்களுக்கு நடுவிலும் அவனால் சாதாரணமாக நடமாட முடிந்தது.

மஹத்ரு மஹாகன்யா லேப்பில் ஒரே பேட்ச்.ஆனால் இத்தனை நாளில் மற்றவர்களால் மனதுக்குள் உருவாகியிருந்த தாழ்வு மனப்பான்மை அவனை தேவைக்கு மேல் ஒரு வார்த்தை கூட மஹாகன்யாவுடன் பேச விடவில்லை. மனதில் பட்டதை ஒளிவு மறைவில்லாமல் பேசுவது அவளின் குணம். எங்கே அவள் அவனிடம் பேசி, அதனால் எதுவும் பிரச்சனை ஆகி விடக்கூடாதென்று மஹாகன்யாவும் பேச முயற்சிக்க மாட்டாள்.

முதல் செமெஸ்டரில் கல்லூரியிலே முதல் மாணவனாக வந்தான் மஹத்ரு. அவனை பார்த்து அதிசயப் பட்டார்களே தவிர, இன்னும் அவன் தோற்றம் அப்படியே இருந்த காரணத்தால் அவனிடம் நட்பு பாராட்ட யாரும் முன்வரவில்லை.

காலங்கள் உருண்டோட கடைசி வருட ப் படிப்பில் இருந்தனர். காலங்கள் மாறினாலும் மாற்றம் ஒன்று மட்டும் மாறாதது அல்ல நாங்களும்தான் என மஹத்ருவுடன் உரிமையுடன் சண்டையிட,சாப்பாட்டை பகிர்ந்து கொள்ள,துவளும் நேரத்தில் தோள் கொடுக்க  என அவனின் வெற்றி,தோல்வி அனைத்திலும் கை கொடுக்கும் நண்பனாக இருக்க யாருக்கும் மனம் வரவில்லை.

கடைசி வருடம், கடைசி கல்வி சுற்றுலா என அனைவரும் உற்சாகமாக பெங்களூர்,மைசூரை சுற்ற கிளம்பினர்.மஹத்ருவிற்கும் செல்ல வேண்டும் ஆசைதான். இன்னும் அவனுக்கு நண்பர்கள் என்று யாரும் அமையவில்லை அதனால் அங்கே போனாலும் தனியாக இருக்க வேண்டி வரும். அதற்கு விடுதியிலேயே இருந்து விடலாம் என தான் நினைத்தான். ஆனால் அவர்கள் கல்லூரி ஆசிரியர் அவனை அப்படியிருக்க விடவில்லை.எனவே அவனுடைய மனமும் மஹாகன்யாவுடன் செல்லும் கடைசி சுற்றுலா, இதில் வாய்ப்பு கிடைத்தால் காதலை சொல்லிவிட எண்ணி உற்சாகமாக சுற்றுலா செல்ல தயாரானான்.

கல்விச் சுற்றுலா கிளம்பும் நாளும் வந்தது.சுற்றுலா செல்ல பேருந்திற்கு வந்தான் மஹத்ரு.அவன் வகுப்பு மாணவன் ஒருவன் அவனைப் பார்த்து "இந்தப் பழம் எங்கடா நம்ம கூட வருது?"என மற்றொரு மாணவனிடம் கேட்க "சத்தமா பேசாத.ஜேபி சார் தான் அவனை வர வைச்சது" என்றான். "என்னது" என அதிர்ச்சியாகக் கேட்டு, பின் அவனே "விடு எண்டெர்டைன்மெண்ட்க்கு யூஸ் ஆகும்" என மற்றவர்களிடம் கிண்டலாக கூறினான்.இவை அனைத்தும் மஹத்ரு காதில் தெளிவாக விழுந்தது.இத்தனை வருடங்களில் பழக்கப்பட்ட ஒன்று என்பதால் முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் பேருந்தில் அமர்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.