(Reading time: 17 - 33 minutes)

ங்கே தோன்றிய இடி மேடையில் மத்தளமாக, மின்னல் அவள் புன்னகையில் குடிகொள்ள, மழை அட்சதையாக, ஒரு சுபயோக நன்னாளில், செல்வி, சஹஸ்ரா திருமூர்த்தி திருமதி. சஹஸ்ரா மகிழ் வேந்தன் ஆனாள்.  இருவருமே அந்த திருமணத்தைக் காதல் திருமணமாக்கிக் கொண்டனர்.  முகநூல், கைப்பேசி முதலிய காதலை வாழவைக்கும் சாதனங்களுக்கும் தாங்கள் சந்தித்த இடங்களுக்கும் மனமாற நன்றியும் கூறினார்கள்.

எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம்

எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்

காதல் மாறுமா?  இல்லவே இல்லை.  அந்தக் காதலை சுமக்கும் மனிதர்கள் மாறுகின்றனர், அல்லது சூழ்நிலையால் மாற்றப்படுகின்றனர்.  காதலிக்கும்போது ஒருவருக்கு காதலனாக/காதலியாக இருப்பவர், மணமானதற்குப் பின் அவருக்கு கணவன்/மனைவியாகின்றார்.  இதன்மூலம் கூடுதல் பொறுப்புகள் அவரை வந்தடைகின்றன.  தனித்தனியாக இருக்கும் காதல் வாழ்வும் எதிர்கால வாழ்வும் ஒன்றுடன் ஒன்று சேரும்போது காதல் தான் வகித்த முதலிடத்தை விட்டுக்கொடுக்கிறது, அவர்கள் காதலிலும் வாழ்விலும் வெல்ல.

அதற்காக அவர்களுக்குள் காதலே இல்லையென்று ஆகிவிடுமா?  காதல் இருக்கிறது, அதை விட அதிகமாய் கடமை இருக்கிறது.  இதனைப் புரிந்துகொள்பவர்கள் வாழ்க்கை சுகமான ஓடையென சென்று கடலில் கலந்துவிடுகிறது.  அவ்வாறு இல்லாதவர்களது வாழ்வு வறண்டுவிடுகிறது.  “திருமணத்திற்குப் பின் எல்லாம் மாறிப் போயிற்று” என்று பிதற்றுபவர்கள் இவ்வுண்மையை அறியாதவர்கள்.

இருவரும் திருமணத்திற்கு முன் தங்களுக்கு கிடைத்த முக்கியத்துவம் எல்லாம் தற்போதும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.  ஆனால், அதே முக்கியத்துவத்தை அடுத்தவர்களுக்கும் தரவேண்டியதன் அவசியத்தை மறந்துவிட்டனர்.  அது கிட்டாதபோது சிறு வெற்றிடம் ஏற்பட்டது அவர்களது வாழ்வில்.  அவ்விடம் வெறுமையாக மாற, அது விரைவில் கோபமாக மாறி ஒருவரை ஒருவர் வெறுக்க வைத்தது.

 “முன்புபோல் நீ இல்லை” என்று ஒருவர்மீது ஒருவர் குற்றஞ்சாட்டி இடைவெளியை அதிகரித்து, ஒருகட்டத்தில் பிரிந்தும் போயினர்.  அவர்களை இணைக்க இருவரது பெற்றோரும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீண்தான்.

ருவரும் பிரிந்து மூன்று வருடங்களாகிவிட்டது.  இப்போதுதான் சந்திக்கின்றனர்.  இந்த இடைவெளியில் இருவருக்குமே ஒன்று நன்கு புரிந்துபோனது.  சேர்ந்திருந்தபோது இருந்த துன்பம் அதன்பிறகு இருமடங்கல்ல, பலமடங்காகிவிட்டது.  அதன்பின் இருவரும் தவித்த தவிப்பில் ‘ஏன்தான் பிரிந்தோமோ?  நாம் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போயிருக்கலாம்’ என்றே தோன்றிவிட்டிருந்தது.  ஆனால் அதெல்லாம் இருவரும் பார்க்கும்வரை மட்டுமே.

சிலர் இவ்வாறே இருக்கின்றனர்.  ஒருவருக்கு தாம் செய்ததை நினைத்து பெரிதும் வருந்துவர்.  ஆனால், அவரைக் காண நேரும்போது எங்கே இருந்து தான் அந்த எண்ணம் வருமோ தெரியாது.  ‘நான் ஏன் முதலில் பேச வேண்டும்.  அவருக்குத் தேவையென்றால் அவரே வரட்டும்’ என்று நினைப்பர்.  அதே நினைப்பு இருவருக்குமே இப்போது வந்துவிட்டது.  இருவரும் மற்றவர் தன்னிடம் வந்து பேசட்டும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்க ஆரம்பித்தனர்.

யார் யாரோ போலும் நாம் இங்கே

நம்முள் பூத்த காதல் எங்கே

ன்று சஹஸ்ரா அவளது வாகனத்தை எடுத்து வரவில்லை.  காலை அவளை அழைத்துவந்த தோழியும் ஒரு வேலையாக சீக்கிரமே சென்றுவிட, தனியாகவே செல்ல முடிவெடுத்து அலுவலத்திலிருந்து வெளியேறினாள் சஹி.

அப்போது, அவளை உரசியவாறு வந்து நின்றது நான்கு சக்கர வாகனம் ஒன்று.  கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தவளிடம், “வீட்டுக்கா போறீங்க?” என்று கேட்டபடியே உள்ளிருந்து இறங்கினான் மேத்யூ.  மேத்யூ அவர்களுடன் அலுவலகத்தில் பணிபுரிபவன்.

“ஆமாம்” என்று பதில் உரைத்துவிட்டு அவனைத் தாண்டி செல்ல நினைத்தவளை தடுத்தது அவன் குரல்.

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், நான் அந்த வழியே தான் செல்கிறேன்.  உங்களை வீட்டில் விட்டுவிடுகிறேன்” என்றான்.

மறுக்க நினைத்து அவனைப் பார்த்தவளின் விழியில் விழுந்தான் மகிழ்.  மேத்யூவை தன் பார்வையாலேயே துவைத்துக்கொண்டிருந்தான்.  அவன் கண்களில் பொறாமை வெறி.  பாவம் மேத்.  மகிழுக்கு முதுகு காட்டி நின்றிருந்ததால் இவை எதையும் அறியவில்லை.

அந்த கணம் முடிவு செய்தாள் சஹஸ்ரா.  “வருகிறேன்” என்று கூறி, மகிழின் முறைப்பைப் பொருட்படுத்தாமல் மேத் திறந்த கதவின் வழியே உள்ளே சென்றமர்ந்தாள்.

மேத்யூவும் அமர்ந்துகொள்ள, விரைந்தது வாகனம், சஹஸ்ராவின் வீட்டை நோக்கி.  அதனை அனல் கக்கும் விழிகளுடன் பார்த்திருந்தான் மகிழ்.

அரைமணி நேரம் கழித்து, கையைப் பிசைந்தபடி வீட்டில் அமர்ந்திருந்தாள் சஹஸ்ரா.  இறங்க்கிவிட்டவுடன் சென்று விடுவான் என்று நினைத்தவன் உரிமையுடன் வீட்டில் அமர்ந்து குடிக்க ஏதேனும் கொடு என்கிறான்.  “இவனை என்ன தான் செய்வது?  ஐயோ, மகியை வெறுப்பேற்றவென்று இவனிடம் மாட்டிக்கொண்டோமே.  இவனை எப்படி வெளியேற்றுவது?  மெர் எப்போ வருவான்னும் தெரியலையே” என்று நினைத்துக்கொண்டே மேத்யூவிற்கு சூடாக தேனீர் கலக்கி எடுத்து வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.