(Reading time: 17 - 33 minutes)

வனுக்கு அதனைத் தந்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துப் பருகியவளுக்கு அவனுடன் பேசப் பேச அந்நியத்தன்மை விலகிப் போவதைக் கண்டாள்.  வெகுவிரைவில் இருவரும் தங்குதடையின்றி உரையாட ஆரம்பித்தனர், அவன் அந்த தலைப்பை எடுக்காதவரையில்.  அதிர்ச்சி, குழப்பம், இன்பம் என ஒருங்கே தாக்கின அவளை.

மறுநாள் சஹஸ்ரா அந்த உலகப்புகழ் பெற்ற பூங்காவில் நடந்து கொண்டிருந்தாள்.  அவளுக்கு அன்று இரவு நடந்ததே அவள் எண்ணத்தில் ரீங்காரமிட்டது.  மகிழ் இன்னமும் தன்னை நினைத்திருக்கிறானா?  மேத் வந்து சொன்னபோது நம்பமுடியவில்லை அவளால்.  ஏன், இன்னமும் கூட.

மேத் சஹஸ்ராவும் மகிழும் கணவன் மனைவி என அறிந்து கொண்டது மகிழின் கடவுச்சீட்டை வைத்து.  அதில் இருந்த துனைவி என்ற இடத்தில் அவளது பெயரே நிரப்பப் பட்டிருந்தது.  சஹஸ்ராவினதிலும் அப்படியே.  இருவருக்கும் அதனை மாற்றவில்லை போலும்.  அதுவே இருவரையும் காட்டிக்கொடுத்தது.  எதர்ச்சையாக சஹஸ்ராவினதைப் பார்த்த மேத், அதில் மகிழின் பெயர் இருக்கவே, மகிழோடதை எடுத்துப் பார்க்கும்போது அறிந்துகொண்டான்.

இவை முழுவதையும் கூறிவிட்டு, மேத் கேட்டது அவளது நினைவை ஆக்கிரமித்தது.  அவர்களைப் பற்றி முழுவதும் இல்லாவிட்டாலும் மேலோட்டமாக தாங்கள் பிரிந்த காரணத்தக் கூறினாள் சஹஸ்ரா.  அதன்பின் மேத் கேட்ட “திருமணத்திற்குப் பின் காதல் காணாமல் போகுமா?” என்ற கேள்வியிலேயே அவளது மனம் சுழன்றது.

மேத் கேட்ட கேள்வியையே தனக்குள்ளே கேட்டு நடந்து கொண்டிருந்தாள்.  அவள் வந்து சேர்ந்தது, அந்த பூங்காவிலே இருக்கும் பனிச் சருக்கு மைதானம்.  எதுவுமே செய்யவோ, யோசிக்கவோ தோன்றாமல் அங்கு விளையாடுபவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஒரு தாய் தன் எட்டு வயது மகனை வலுக்கட்டாயமாக மைதானைத்திலிருந்து வெளியே அழைத்து வந்ததைப் பார்த்தபோது அவளுக்கு மகிழின் நினைவு தான் வந்தது.

மகியும் இப்படி தான்.  அவனுக்கு பனிச் சருக்கு விளையாட அவனுக்கு மிகவும் பிடிக்கும்.  அவர்கள் ஒருமுறை சிம்லா சென்றபோது, கடைசி தடவை என்று கூறியே கிட்டத்தட்ட இருபது முறை அவனது கடைசி தடம் என்று கூவிச் செல்ல, சஹிதான் அவனை ஏறத்தாழ கடத்தி வரவேண்டியதாயிற்று.  மகியைப் பற்றி நினைத்தாலே அவளை அறியாமலே ஒரு உற்சாகம் பிறக்கும் அவளுக்கு.

தன் மனமே தன்னைக் கேட்காமல் அவன் வசம் செல்வது கண்டு தனக்கு அவன் மேல் வராத கோபத்தை இழுத்துவைத்துக் கொண்டாள்.  ஆனால், அதுவும் இவளிடம் சொல்லாமலேயே விண்கலம் ஏறி வேற்று கிரகம் பறந்தது, அவளது மகியைக் கண்டவுடன்.

அவனை நினைத்துக்கொண்டே மெல்ல அடியெடுத்து நடக்க ஆரம்பித்தவள் கண்ணில் அருகிலிருந்த ஒரு மரத்தில் சாய்ந்திருந்த மகிழ் தென்பட்டான்.  அவனா? என்று சந்தேகத்துடன் மீண்டும் ஒருமுறை கண்களைத் தேய்த்துவிட்டுப் பார்த்தாள் சஹஸ்ரா.

“என் மகியே தான்”  அவள் உள்மனம் ஓலமிட, அவனது பார்வையைத் தொடர்ந்தது அவள் பார்வையும்.  ஒரு காதல் ஜோடி அவர்கள் அன்று சிம்லாவில் செய்தது போலவே செல்லமாக சண்டையிட்டுக்கொண்டிருக்க, மகிழின் தற்போதைய நினைவில் அவள் உள்ளாள் என்ற நினைவே தித்தித்தது அவளுக்கு.

இத்தனை வருடங்களாக அவளது நாவில் இருந்து வெளிவரக்கூடாதென்று தடை செய்திருந்தவை வெளிவந்தன.  “என் மகி” என்று மெதுவாக அழைத்தாள்.

மனம் இருக்கிறதே, அது மிகவும் சுதந்திரமானது.  அதன் வேகத்தை அளக்க ஒளியாண்டுகள் கூட போதாது.  ஒரு நொடி .ஒரு இடத்தில் இருக்கும்.  மறுநொடி, வேறு எங்கோ, சம்பந்தமே இல்லாத இடத்தில் இருக்கும்.  இதனால்தான் மனம் ஒரு குரங்கு என்றனரோ? சஹியின் மனமும் என்றுமே அவள் சொல் கேட்டதில்லை.

“அவனை நினைக்காதே” என்றாள்.  “நினைப்பேன்” என்று ஒரு கணம்கூட அவனை மறக்காமல் இருந்து அவளுக்கும் அவனை நியாபகப்படுத்தியது.  அதோடு யுத்தம் செய்து தோற்றுப்போனாள் சஹி.

வெற்றிபெறும் எண்ணம் இருந்து போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம்.  அந்த எண்ணம் துளியும் இல்லை சஹிக்கு.  தோற்பதிலும் இருக்கும் சுகத்தை உணர்வது காதலில் மட்டுமே முடியும்.  அந்த சுகத்தையும், அதோடு சேர்ந்து துக்கத்தையும் ஒருசேர அனுபவித்தாள் சஹஸ்ரா.

அப்போதே இப்படியென்றால், சஹியும் இளகியிருந்த நேரம் சஹியின் மனத்தைப் பற்றி கேட்கவா வேண்டும்?  கொம்பு சீவிய ஜல்லிக்கட்டு மாடென சீறியது மகிழை நோக்கி.  சரியாக அதே நேரம் மகிழும் திரும்ப, தன் வேகத்தைக் குறைத்து பசுவாக மாறி, அதன் உள்ளம் கவர்ந்த அந்த கண்ணனிடமே அடைக்கலம் சேர்ந்தது.

ஏதோ தோன்ற திரும்பிய மகிழின் பார்வையில் விழுந்தாள் சஹஸ்ரா.  “சஹி” என அழைத்தான் அவன்.  அவன் கண்களில் கண்ட எல்லையற்ற காதல் அவளை அசைத்துப் பார்த்தது.  அவள் விழிகளில் இருந்த தாங்க முடியாத சோகம் அவனைக் கொன்று போட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.