(Reading time: 17 - 33 minutes)

தோழனின் பின்னால் சென்றாலும் அவன் மனமும் உயிரும் அவளுடனே நின்றுவிட்டன அவனுக்கு.  சஹஸ்ரா, அவன் வாழ்வின் இனியதொரு தொடக்கம் அவள்; எதிர்பார்த்திடாத முடிவும் அவளே.  ஆம்.  என்று அவள் பிரிந்து சென்றாளோ, அப்போதே அவனது வாழ்க்கை நின்றுவிட்டது.  இப்போது இருப்பவன் அந்த மகிழ் அல்லான்.

மகிழ் வேந்தன்…  அவன் பெயரை அவனே உச்சரித்துப் பார்த்தான்.  அவன் வாழ்வில் மகிழ்ச்சி துளியும் இல்லை இப்போது.  அவனை வேந்தனாக்கி, தான் ராணியாக அவன் இதயதேசத்தில் கோலோச்சியவள் என்றோ அவனை விட்டுப்போனாள் பரமஏழையாக. 

கடல் கடந்து, பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் அவன் வந்ததே துரத்தும் அவள் நினைவுகளில் இருந்து விடுபட தானே?  நினைவுகள் எப்போதும் ஒன்று போல் தான் இருக்கின்றன.  ஆனால், நம் மனம் தான் அதனை வேறுபடுத்திப் பார்க்கிறது.  இதுவே அவனது சஹியுடன் அவன் இருக்கும்போது நினைத்திருந்தால், அவனுக்கு அது சுகமான உணர்வைத் தந்திருக்கும்.  இப்போதோ, அது அவனுக்கு ஆறிக்கொண்டு வரும் வடுவை மேலும் கீறுவதுபோல ரணமாய் வலித்தது.

சஹஸ்ராவுக்கும் இதே நிலையே.  அவனைக் கண்ட நொடிமுதல் அவனிடம் தஞ்சமடைந்துவிட அவளது கால்கள் பரபரத்தன.  ‘இத்தனை நாள் அவனைப் பிரித்து வைத்து துன்புறுத்தியதற்காக அவன் மடியில் சாய்ந்து மன்னிப்புகள் கோடி கேட்க வேண்டும்.  இனி உன்னை என்றும் பிரிய மாட்டேன் என்று உரைத்திட வேண்டும்’ என்று அவள் உடம்பில் ஒவ்வொரு அனுவும் துடித்தது.  அவ்வாறெல்லாம் உடனே செயல்படுத்தினால் அது சஹஸ்ரா அல்லவே.

ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம், “நாற்காலியின் ஒரு ஓரத்தில் நான் அமர்ந்திருக்க, மறு ஓரத்தில் அவள் அமர்ந்திருந்தாள்.  எங்கள் இருவருக்கும் நடுவில் நாகரீகம் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தது” என்று.  இங்கோ, நேசம் நூறடி தள்ளி நிற்க, இருவருக்கும் நடுவில் அகங்காரம் பாய் விரித்தே படுத்திருந்தது.  இருவரது இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தையும் பார்வையாளனாய் இருந்து ரசிக்கத் தொடங்கியது விதி.

இதற்கு முன், இருவரும் யார்?  ஏன் இவ்வாறு இருக்கின்றனர்?  அறிந்துகொள்ள வாருங்கள், சென்னை 2013.

ன் இருசக்கர வண்டியை வீட்டின் முன் நிறுத்தி பூட்டிவிட்டு, கல்லூரிப் பையை வாகாக சுழற்றியபடி,“அம்மா…. இன்னைக்கு நம்ம அண்ணாச்சி கடைக்கு போகனும்னு சொ…” என்று கூறியவாறு படி ஏறியவளின் சொல் அத்தோடு நின்றது, வரவேற்பறையில் அமர்ந்திருந்த தம்பதியரைக் கண்டு.

“வாடாம்மா… இவங்க யாருன்னு தெரியுதா?  சுபா அத்தையும் சாம்பு மாமாவும்” என்று அறிமுகப்படுத்தினார் சஹஸ்ராவின் தாய்.  யார் என்று தன் மூளையை அலசி சிறிது நேரத்தில் கண்டுபிடித்துவிட்டாள் அவள்.  சஹஸ்ராவின் தாய் வசுமதியின் பள்ளித் தோழியும் அவரது கணவனும்.  ஏற்கனவே அறிமுகம் இருந்ததால் சஹஸ்ராவுக்கு அவர்களுடன் பேசுவது கடினமாக இல்லை அவளுக்கு.  இறுதியாக இருவரும் கிளம்பும்போது அனுப்ப மனமே இல்லாத அளவுக்கு ஒன்றிப்போனாள் அவர்களுடன்.

“கூடிய சீக்கிரமே நாம் திரும்பவும் சந்திக்கனும்” என்று வசுமதி கூறியபோது, “நிச்சயமா… அதுவும் வெகு விரைவில்” என்று பதிலளித்தார் சுபாவும், சஹஸ்ராவை பூடகமாக பார்த்துக்கொண்டே.

அதன் அர்த்தம் இரு வாரத்தில் தெரியவந்தது, குடும்பத்துடன் தன் மகன் மகிழ் வேந்தனுக்கு சஹஸ்ராவைப் பெண்கேட்டு வந்தபோது.  அப்போதுதான் முதன்முதலில் சந்தித்தனர் இருவரும்.

அவளைக் கண்டமாத்திரத்திலேயே மகிழனின் மனம் அவன் விருப்பம் இல்லாமலேயே அவளிடம் சென்று தஞ்சமடைந்தது.  இத்தனை வருடம் தான் காத்திருந்தது இவளுக்காகவே என அறிந்துகொண்ட மகிழ்ச்சியில் இனிய கீதம் இசைக்க ஆரம்பித்தது அவன் இதயம்.  தன்னுள் வசிக்க வருபவளுக்கு அளித்த வரவேற்போ என்னவோ?

இதுவரை எங்கிருந்தாய்….

இதயம் உன்னைக் கேட்கிறதே

பெண்ணே எங்கே ஒளிந்திருந்தாய்

என்னுள் எப்படி நுழைந்துகொண்டாய்???

சஹஸ்ராவுக்கும் மகிழனைக் கண்டதிலிருந்து இதயத்துடிப்பு இருநூற்றைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது.  அவன் விருப்பத்தை அறிய அவள் ஆவலாய் காத்திருக்க, அவன் விழிகள் பேசிய மொழியிலேயே தெரிந்தது அவனது சம்மதம்.  அந்த நொடி, அவள் இதயத்துள் இடி, மின்னலுடன் கூடிய கண மழை..

உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்

உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்

உன்னை உனக்கே தெரியலையா

இன்னும் என்னைப் புரியலையா???

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.