(Reading time: 19 - 37 minutes)

புஸ்தகம் படிக்கிறேன்பா”

“என்ன புக்”

“ஹெலன் கெல்லர் பத்தி”

“என்னமா திடீல்னு இப்படியெல்லாம் படிக்கிற எப்பவும் விஷ்ணு சகஸ்ரணாமும் கந்த சஷ்டி கவசம்தான படிப்ப” அந்த நிலையிலும் கிண்டலாக கேட்டான்

“என்னமோ  படிக்கணும்னு தோணிச்சு” அவர் கையில் எந்த புத்தகமும் இல்லை

“சரி சரி படிங்கம்மா”

“நீ ஹெலன் கெல்லர் பத்தி என்னடா நினைக்கற?”

“உண்மையில கிரேட்மா அவங்களுக்கு கண்ணு தெரியாது. அவங்களால பேசவும் கேட்கவும்கூட முடியாது. அப்படியிருந்தும் அவங்க சளைக்காம எவ்வளோ சாதிச்சாங்க . . இன்னைக்குகூட நாம அவங்கள பத்தி பேசறோம்னா பாருங்களேன்”

“ஆமாடா வாழ்க்கையில யாருக்கும் எப்ப வேணா எதுவும் நடக்கலாம் இல்லையா?”

“உண்மைதான்மா”

“சரி ஒரு பேச்சுக்கு சொல்றேன் . ..இப்ப உனக்கு  பார்வையே தெரியாம போனா என்னடா பண்ணுவ?” மனம் எரிமலையாய் வெடித்தது

கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தான் பிறகு “சமாளிக்க வேண்டியதுதான் என்ன செய்யமுடியும்”

“சமாளிப்பையா கண்ணா?”

ஏனோ அவனால் பதில் பேச முடியவில்லை அம்மா ஏன் இப்படியெல்லாம் கேட்கிறாள் என்று அவன்  மூளை கேள்வி கேட்டது “ம்ம்ம்” என சத்தம் மட்டும் பதிலாக வந்தது.

“ராகவா இனிமே உனக்கு கண்ணு தெரியவே தெரியாதுடா . . . பின் மண்டையில அடிப்பட்டதுல கண்ணுக்கு போற நரம்பு  . . .” சொல்லியேவிட்டாள் மேல பேச முடியாமல் வாய்விட்டு அழுதாள். ராகவனோ அழவோ பேசவோ முடியாமல் அதிர்ச்சியில் ஸ்தம்பித்திருந்தான்.

அம்மா அவனை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள். டாக்டர் தானே சொல்வதாக கூற தன் மகனை இதற்கு தானே தயார்படுத்தி கூறுகிறேன் என சொல்லிவிட்டாள். “ராகவா மனச திடப்படுத்திகோடா நான் இருக்கேன் உனக்கு பயப்படாத”

ராகவனுக்கு என்ன பதில் சொல்வதென்றோ செய்வதென்றோ தெரியவில்லை. அழுகை வந்தது. கண்ணீர் வெளி வராமல் கண்கட்டுக்குள்ளேயே தேங்கியது. கண்ணீர் இதமான சூடாக இருப்பதுபோல தோன்றியது. இந்த கசப்பை அவன் முழுங்கியே ஆக வேண்டும். இனி தன் எதிர்காலம் எப்படி இருக்குமோ என நினைத்துப் பார்க்க கூட பயமாக இருந்தது.

சிறு வயதில் “அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது” என்ற தனக்கு பிடித்த பாடலை பார்த்து கமல் என்னம்மா பார்வையற்றவரா  நடிச்சிருக்கார். கண்ணு தெரியாதவங்களுக்கு எப்படி இருக்கும்? எல்லாமே கருப்பா இருக்குமா? என்று யோசித்திருக்கிறான். அதற்கு இன்று அவனுக்கு விடை கிடைத்தது.

தான் கலங்கி போனால் அம்மாவை தேற்ற முடியாது என தன்னை சமாளித்துக் கொண்டான். கண்கட்டு பிரித்துவிட்டனர். அவனுக்கோ இனிமே கட்டு இருந்தா என்ன இல்லைனா என்ன? எல்லாம் ஒன்றுதான் என தோன்றியது. வீட்டிற்கு வந்தபின் தன் அறையிலேயே முடங்கி கிடந்தான். தன் கட்டிலில் இருந்து அறைகதவு வரை நடப்பதே பெரிய விஷயமாகியது. நாற்காலி இடறி விழுந்தான். கதவிலும் சுவற்றிலும் முட்டிக் கொண்டான்.

ருபத்தி நாலுமணி நேரமும் அம்மா அவன்கூடவே இருந்தாள். பச்சிளம் குழந்தையை பார்த்துக் கொள்வதுபோல பார்த்துக் கொண்டாள். என்ன இருந்தாலும் வளர்ந்த ஆண் மகனை தாய் ஓரளவுதான் பார்த்துக் கொள்ள முடியும். முதலில் எல்லாமே அவனுக்கு கஷ்டமாக இருந்தது. இப்படி இருப்பதற்கு செத்துவிடலாம் என்றாகிவிட்டது. உறவினர்கள் வந்து பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். அவரவர் வேலை அவரவர்களுக்கு.

ராகவனுக்கு காவல்துறை மூலம் உதவித் தொகை கிடைத்தது. தனக்கு மிகவும் பிடித்தமான பைக்கை கடைசியாக ஒருமுறை தடவி பார்த்துவிட்டு உறவினருக்கு மனமின்றி கொடுத்துவிட்டான். தன் வாழ்க்கையில் இனி  அம்மாவின் முகத்தை பார்க்கவே முடியாது என்பது வேதனையை அதிகரித்தது. அடுத்தாக கிரிக்கெட் மற்றும் தோனி இவ்விரண்டையும் பாரத்து ரசிக்க முடியாது. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் எத்தனை பிடித்தமான ஒன்று. தன் அறை முழுவதும் தோனி படங்கள் ஓட்டி வைத்திருப்பவன். மனம் கனத்தது.

சரஸ்வதிக்கு தன் மகன் போலீஸ் உடுப்பில் கம்பீரமாக டக் டக்கென நடப்பவன் இன்று தட்டுதடுமாறி நடப்பதையும் எப்போதும் சிரித்து பேசுபவன் ஒண்டிஒடுங்கி அறைக்குள் மௌனமாக அழுவதையும் காண சகிக்கவில்லை.

“ராகவா கண்ணு இல்லன என்னடா? காது இருக்குல . . .உனை சுத்தி நடக்கிற விஷயங்களா உன்னிப்பா கேளு . . . இனிமே நீ காதாலதான் பாக்கணும்” என அவன் மனதை திசைதிருப்பினாள்.

“சரிம்மா டிரை பண்றேன்”

“காலையில் பறவைகளின் கீச் கீச் . . . இளையராஜாவின் பாடல்களில் மெல்லிய பிண்ணனி இசை . . .குழாயில் இருந்து சொட்டு சொட்டாக விழும் நீர் . .  அம்மாவின் காலடி சப்தம் இப்படி பல ஒசைகள் அவன் காதில் விழுந்தது. இத்தனை நாட்களாக ஏன் இதனை கவனிக்கவில்லை என வியந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.