(Reading time: 4 - 7 minutes)

சிறுகதைத் தொடர் - ஆகாய வீதியில் நான் - 01. ஒரு அறிமுகம் - ரேவதிசிவா

Aagaya veethiyil naan

னிதன் மற்ற உயிர்களிடமிருந்து வேறுபடுவதற்கு நாம் சொல்லும் ஒரே காரணம், அவனின் பகுத்தறிவுதான். சிந்திக்கும் திறன் என்றும் சொல்லலாம். சிந்தனை- ஒரு அழகிய வார்த்தை. ஏன் அழகு? என்பதைப் பிறகு பார்க்கலாம். நாம் செய்யும் செயல்களின் பின்விளைவுகள், அதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் என அனைத்திற்கும் வித்தாக இருப்பது நம் சிந்தனை. தீய சிந்தனைகளைக் கொண்டவன் தீயவனாகவும், நற்சிந்தனைகளைக் கொண்டவன் நல்லவனாகவும் இருக்கிறான். சிந்தனையாளர்களை நாம் மதிக்கிறோம், அவர்களின் மூலம் நம் வாழ்க்கையை சிறப்பாகவும் அமைத்துக் கொள்கிறோம். இந்த சிந்தனை மனிதனுடைய வாழ்வில் ஆடும் ஆட்டம் இருக்கிறதே! சில நேரங்களில் அழகாகவும்  சில நேரங்களில் அபாயகரமானதாகவும் இருக்கும். நான் உங்களிடம், சிந்தனை! என்னுள் ஆட்டுவைக்கும் அழகான ஆட்டத்தைப் பகிர போகிறேன். அந்த ஆட்டம் உங்களுக்கும் அழகாக இருக்கிறதா ? என்பதை நீங்கள்தான் கூற வேண்டும்.

 சிந்தனை என்னும் சொல்லை நினைத்தாலே, பள்ளியில் படித்த ஒரு கதைதான் எனக்கு எப்பொழுதும் ஞாபகம் வரும். எனக்கு நினைவில் உள்ள சிறுப்பகுதியை உங்களிடம் பகிருகிறேன். பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும் பொழுது ஒரு நாள், நகுலன் நீர் அருந்துவதற்காகவும் தன் சகோதரர்களுக்கு நீர் கொண்டு வருவதற்காகவும் காட்டின் மையத்தில் இருக்கும் ஒரு நீர்நிலையை அடைகிறான். அவன் நீரைத் தொட்டவுடன் ஒரு பூதம் தோன்றுகிறது. அது அவனிடம், தான் கேட்கும் கேள்விகளுக்குச்  சரியான பதில்களைத் தந்தால் நீர் எடுக்கலாம், இல்லையெனில் உயிர் போகும் என்று சொல்ல, நகுலனும் உடன்படுகிறான். பதில் தெரியாமல் உயிரைவிட, அவனைத் தேடி வரும் ஒவ்வொரு சகோதரர்களும் அவனைப் போலவே உயிரை விடுகின்றனர். நிறைவாக தருமர் வந்து,  அதனுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில்களைக்கூறி தன் சகோதரர்களை மீட்டு கொள்கிறார். இதில் பூதம் தருமரிடம் பல கேள்விகள் கேட்கும், ஆனால் எனக்கு இப்பொழுதுவரை நினைவில் உள்ளது ஒரு கேள்விதான்.(சிறு வயதில் நம்மை ஈர்க்கும் எதுவும், நமக்கு எப்பொழுதும் நினைவில் இருக்கும் என்பது இயல்புதானே!)

பூதத்தின் கேள்வி இதுதான்- உலகிலேயே  மிகவும் வேகமாகப் பயணிக்கக்கூடியது ஒன்று இருக்குமெனில், அது என்ன?

தருமரின் பதில்-மனிதனின் சிந்தனை.

எனோ எனக்கு இக்கேள்வி அவ்வயதில் மிகவும் பிடித்துவிட்டது,நிச்சயமாக அப்பொழுது பொருளுணர்ந்து பிடித்துத்திருக்க வாய்ப்பில்லை. பிறகு மிகவும் பிடித்துவிட்டது அதன் பொருளினால்.

உண்மை. நம் சிந்தனைக்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. சிந்தனையை அழகு என்று குறிப்பிட்டேன் அல்லவா? நற்சிந்தனை உள்ளத்தையும் உயிர்களையும் அழகாக மாற்றுகிறதுதான், ஆனால் இங்கு வேறொன்றைக் கூறப் போகிறேன். ஆம். அதன் பெயர் கற்பனை.கற்பனை அழகுதானே! கற்பனை சக்தி இல்லை என்றால் நம்மால் எதையும் அழகாக நோக்க முடியுமா? நாம் படைக்கும் எந்த ஒரு படைப்பாக இருக்கட்டும், அது எந்த துறையைச் சார்ந்ததாக வேண்டுமானாலும் இருக்கட்டும் கற்பனை இல்லை என்றால், அதில் சுவை இருக்குமா? உண்மையில் இந்த கற்பனை சக்தியால்தான் உலகில் பல கண்டுபிடிப்புகள் தோன்றின. எப்படி சக்தியை பலர் ஆக்கத்திற்கும் சிலர் அழிவுக்கும் பயன்படுத்துகின்றனரோ, அதுபோல்தான் கற்பனையும் பயன்படுகின்றனர்.

இந்தக் கற்பனையை ஒருவகையில் சிந்தனையின் குழந்தை என்றுகூட சொல்லலாம்.பெற்றோர்  எப்படி வளர்க்கிறார்களோ அதன்படிதானே பிள்ளைகள் வளர்வர், அதுபோல்தான் சிந்தனை சரியாய் இருக்குமெனில், அங்கு அழகிய கற்பனை தோன்றும், அடுத்தவருக்கும் பலனையும் தரும்.

என்னுடைய கற்பனையில் தோன்றிய சில நிகழ்வுகளை  [நகைச்சுவையாகவும்(?) அதே சமயத்தில் சிறிது பயனுள்ளதாகவும்(!)] உங்களிடம் ஒரு கதைப் போல் கூறப்போகிறேன்.(அங்கங்கு என்னுடைய நிஜமும் வரும்)

இக்கற்பனைக் குழந்தைதான் ஆகாய வீதியில் பயணிக்கப் போகிறது, அது எந்த இடத்தில் வேண்டுமானாலும் தரை இறங்கலாம், யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம், அதனுடைய அனுபவங்கள் உங்களுக்கு ஒரு கதையாக...

Aagaya veethiyil naan

{kunena_discuss:1106}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.