(Reading time: 10 - 20 minutes)

சிறுகதைத் தொடர் - ஆகாய வீதியில் நான் - 02. நானும் கடலும்  - ரேவதிசிவா

Aagaya veethiyil naan

யாரை முதலில் பார்க்கலாம் அப்படினு நினைக்கும் பொழுதே ஞாபகத்திற்கு வந்தது கடல்தான். அதுவும் சிறு வயதில் இருந்தே பார்த்து வருவதால் அதன்மீதுள்ள ஈடுபாடு அதிகம்.

இப்புவி அதிக அளவில் நீராலானது என்பது நமக்கு தெரியும். இந்த 71% நீரானது தன்னுள் 96.5% உப்பு நீரையும்  மீதமுள்ள 3.5% நன்நீரையும் கொண்டுள்ளது.

அட , இன்னைக்கு ஏன் இவ்வளவு சோகமா இருக்க? உன்கிட்ட எப்பவுமே இருக்கும் உற்சாகம் இன்னைக்கு இல்லையே? என்று நான் கேட்க, இவ்வளவு நாளாக அவரைப் பார்க்க வராததினால், என்னோட நண்பரானவர் என் மேல அதிக நீரை அடித்து தன் கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டார்.

இதுக்கெல்லாம் நாம அலட்டிக்குவோமா, உடனே தாஜா பண்ண தயாராயிட்டேன்.

என்னப்பா நீ, உன்னப் பார்க்கனும் ஆசையா, எவ்வளவு கஷ்டப்பட்டு அம்மாகிட்ட அனுமதி கேட்டு வந்திருக்கனு தெரியுமா? நீ இப்படி கோபிக்கிறனு நான் வருத்தப்பட, நம்ம நண்பர் மலையிறங்கிட்டாரு.

மற்றவர்கள் மாதிரியே நாங்களும் பல விஷயங்களப் பேச ஆரம்பிச்சோம். முதல்ல நீ சொல்லு, ஏன் சோகமா இருக்க? என்று மறுபடியும் நான் கேட்டேன்.

என்னத்தப்பா சொல்லறது! உங்க மனிதர்கள் இருக்கிறாங்களே, என்னப் பார்க்க வரும் பொழுது என்னை இரசிப்பதோடு விட்டுவிட்டால் பரவாயில்லையே! ஆனால் அவங்க எனக்கு அவாங்களோடக் குப்பைகளைத் தந்துட்டுப் போறாங்க. என்ன நம்பி எத்தனை உயிர்கள் இருக்குனு உனக்கே தெரியும். அப்படியிருக்க , இவங்களோட செயல் என்னை ரொம்ப கோபப்படுத்துகிறது. ஏற்கனவே என் கோபத்தால் (ஆழிப் பேரலை) பல உயிரினங்கள் அழிந்ததால , இப்ப நான் அமைதியா இருக்கிறேன். ஆனால், எவ்வளவு நாள்கள் என்னோட  கோபத்தக் கட்டுப்படுத்த முடியுமுனு எனக்கே தெரியலை. இவங்கிட்ட நீயாவது சொல்லு, எப்படி நீங்க உறவினரப் பார்க்கப்போகும் பொழுது அவங்களுக்குப் பிடிக்காத கொடுக்கமாட்டிங்களோ, அதேமாதிரி என்கிட்ட குப்பைகளைப் போட வேண்டாமென்று, நான் உங்களுக்கு எவ்வளவு பயன்களைத் தருகிறேன் அதற்காகவேணும் இதனை செய்ய சொல் , என்றார் என் நண்பர்.

உம். நீ சொல்வது சரிதான்பா! எனக்குப் புரியுது, எம்மக்களுக்குப் புரிந்தும் அலட்சியப்படுத்தறாங்க. என்ன செய்ய!

உன்னோட பிள்ளைகள் எல்லாரும் எப்படி இருக்காங்க?என்று அவரிடம் கேட்டேன் நான்.

அவங்களையும்தான் உன் மக்கள் பிடிச்சிட்டுப் போறாங்க. மீனவ நண்பர்கள் பரவாயில்லைப்பா! அவங்க, தங்களின் வாழ்வாதாரமாக என்னையே நம்பிக் கொண்டு இருப்பவர்கள். ஆனா!சிலர் இருக்காங்க பாரு, பணப்பேராசைக்கொண்டு அரிய கடல் உயிரினங்களைப் பிடித்துகிட்டுப் போறாங்க. இம்மாதிரியான மனிதர்களை என்ன செய்வதென்று, நீயே சொல்? என்று நண்பர் என்னிடம் கேள்வி கேட்டார்.

நான் என் நண்பரிடம், கண்டிப்பாக அவர்களுக்குத் தண்டனைக் கொடுக்க வேண்டும் என்று கூறினேன்.

என் நண்பனின் நிலையை மாற்ற முடியாமல் போனாலும், நான் பார்க்கும் இச்சிறுப்பொழுதிலும் வருத்தமாக இருப்பது, எனக்கு மனவேதனை தர பேச்சை மாற்ற ஆரம்பித்தேன்.

சரி, உன் காதல் கதை எப்படிப் போகுது? என்று நான் கேட்க, என் நண்பர் இப்பொழுது மகிழ்ச்சியில் சற்று அதிகமாகவே என் மேல் நீரை வாரி இறைத்தார்.(இன்பத்தில் நாம் உணர்ச்சிகளைத்,  துன்பத்தைவிட சற்று அதிகமாகவே வெளிப்படுத்துவோம். ஏனெனில், நம் துன்பத்திற்கான காரணங்களை நம்மால் எளிதில் வெளிப்படுத்த இயலாது. என் நண்பர் மட்டுமென்ன விதிவிலக்கா?)

அதெல்லாம் நன்றாகத்தான் போகுது, ஆனால் ஒவ்வொரு முறையும் தாய் வீட்டிலிருந்து வரும்பொழுது அழுதுகொண்டே வருகிறாள். அதுதான் சற்று எரிச்சலாக இருக்கும் என்று நண்பர் கூறினார்.

அவரின் பதில் கேட்டு எனக்கு சிறிது சினமே வந்துவிட்டது, பின் என்ன இவரும் இப்படி கூறினால்! கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு, நீ ஏன் இப்படி ஆண்கள் எங்கள் இனத்தில் கூறுவதைப்போல் கூறுகிறீர். நீர் இங்கு திவ்யமாக இருந்த இடத்தை விட்டு நகாராமல் இருக்க, உன் துணைவியோ(நதி) தன் சொந்தங்களைப் பிரிந்து உன்னையே முதன்மையாகக் கொண்டு  உன்னிடம் வருகிறார், அவ்வன்பைப் புரியாமல் பேசுகிறீரே? என்று சற்று கோபமாக உரைத்தேன்.

என் நண்பரின் நிலையை பார்க்க வேண்டுமே? பயந்து சற்று பின்னோக்கி சென்றுவிட்டார்.சிறுப்பிள்ளையின் செயலைப் போல் இருந்த என் நண்பரின் செய்கையால் , என் மனம் கனிந்துவிட்டது.

அவரைப் பார்த்து புன்னகையுடன் அழைக்க , இம்முறை அதிக மகிழ்ச்சியால் , முழுவதுமாகவே நீரால் அனைத்துக்கொண்டார்.மனதில் தாயிடம் சமாதானமாகும் குழந்தையைப்போல் இருந்தது அவரது செய்கை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.