(Reading time: 22 - 43 minutes)

ஸ்வரியின் பழைய  காதல் உறுத்தலாக இருந்தால், இந்த திருமணத்தை தாமோதரன் நிறுத்தியிருக்க வேண்டும்.... இல்லை அவளின் பழைய காதல் விஷயத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவளுடன் சந்தோஷமான இல்லற வாழ்க்கை நடத்தியிருக்க வேண்டும்... இல்லை அவளிடம் மனம் விட்டு பேசியாவது இருக்க வேண்டும்... இப்படி எதையும் செய்யாமல் ஒருவித குழப்பத்தோடு செய்த திருமணம் எப்படி சந்தோஷமாக இருக்கும்...

ஒரு பக்கம் மனைவியிடம் அன்பையும், காதலையும் பொழிந்தாலும்... ஒரு பக்கம் தன்னை குத்திய அந்த நெருஞ்சி முள்ளால் ஈஸ்வரியை குத்தி காயப்படுத்தி கொண்டிருந்தார்...

அடிக்கடி அவளின் பழைய காதல் பற்றியும், காதலனை பற்றியும் கேட்பார்... அவன் அழகு எப்படி, என்ன நிறம், காதலிக்கும் போது எங்கெல்லாம் சென்றீர்கள்... இப்படி எந்த நேரம் என்ன கேள்வியை தமோதரன் கேட்பார் என்று தெரியாமல் ஒரு நரக வாழ்க்கையை ஈஸ்வரி வாழ்ந்துக் கொண்டிருந்தார்...

எந்த உறவை நம்பி புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாளோ அவன் தான் அவளை பேச்சால் சித்ரவதை செய்துக் கொண்டிருந்தான் என்றால், கூட இருந்த மற்ற உறவுகளும் அவளுக்கு அங்கு துணையாய் இல்லை...

இன்னொருவனை காதலித்து அவனுடன் வீட்டை விட்டு ஓடிப் போனவள் என்று தெரிந்ததால், மாமனார், மாமியார் அவளை மனதுக்கு பிடித்த மருமகளாய் நடத்தவில்லை... இதிலும் தாமோதரன் மற்றவர்கள் பார்வைக்கு நல்ல கணவராகவே நடந்துக் கொண்டதால், மனைவியிடம் தன் மகன் இப்படி உருகுகிறானே என்ற கோபத்தையும் ஈஸ்வரியிடமே காண்பித்தார் அவளின் மாமியார்.

ஈஸ்வரியை பெற்றவர்களும், நீ செய்த காரியத்துக்கு உனக்கு நம்ம சொத்தை வித்து சீர் செஞ்சாச்சு... இனி உன்னோட தங்கைகளுக்கு பார்க்கனும்... எதுவா இருந்தாலும் அந்த வீட்டிலேயே வாழப் பாரு.. என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்... இப்படி எந்த பக்கமும் ஆதரவில்லாமல் நிம்மதியின்றி இருந்தாள் ஈஸ்வரி... இந்த நேரத்தில் கணவன் காட்டிய காதலின் பரிசாக காவ்யா பிறந்தாள்.

தனக்கு மகள் பிறந்ததில் ஆனந்தமடைந்தார் தாமோதரன்...  தன்னுடைய மனைவி மேல் அவருக்கு சந்தேகம் என்று இல்லை... தன்னைப் போல் தன் மனைவியும் தன்னை காதலிக்கவில்லை... ஏதோ திருமணம் நடந்துவிட்டது என்பதால் தான் வாழ்கிறாள்... தன் காதல் கைகூடவில்லையே என்ற வருத்தம் அவளுக்கு இருக்கிறது... அதனால் தான் அவள் சோகமாகவே இருக்கிறாள் என்று நினைத்து தன் வார்த்தைகளால் அவளை காயப்படுத்திக் கொண்டிருக்கிறாரே தவிர, தான் நடந்துக் கொள்ளும் முறை தான் அவளுக்கு மனமாற்றத்தை கொண்டு வரும் என்பதை அவர் அறியவில்லை.

போக போக எல்லாம் சரியாகிவிடும் என்று ஈஸ்வரி காத்திருக்க, அது நடக்கும் என்பதில் நம்பிக்கை இல்லாமல் போனது... தலை வாழை இலையில் ஆயிரம் வகை பதார்த்தங்களோடு உணவு பரிமாறி, அதில் கொஞ்சம் எச்சிலை வைத்தது போல் இருந்தது தன் கணவனின் அன்பு... எல்லோரோடும் இருக்கும் போது அன்புக் காட்டும் கணவன் தனிமையில் இவளின் பழைய காதலை பற்றி கேட்கும்போது உடனே இறப்பு நேராதா.. என்பது போல் இருக்கும் அவளின் நிலைமை...

அதன்விளைவு தன் மனநிலையை எடுத்து சொல்லி ஒரு நீண்ட கடிதத்தில், உங்களின் இந்த பேச்சுக்கள் என்னை கஷ்டப்படுத்துகிறது... நான் வீட்டை விட்டுப் போகிறேன், அதற்காக நான் யாரோடும் சென்றுவிட்டதாக நினைக்க வேண்டாம்... எப்போது உங்களை மணந்தேனோ அன்றிலிருந்து மனதாலும், உடலாலும் உண்மையானவளாக தான் இருக்கிறேன்... நான் நிம்மதிக்காகவே வீட்டை விட்டு செல்கிறேன்... நம் மகளை என்னைவிட நீங்களே நன்றாக பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன் என்று எழுதியிருந்தாள்...

அந்த கடிதத்தை படித்த தாமோதரனுக்கு தவறு தன் பக்கம் தான் என்று புத்தியில் உரைத்திருந்தாலும், மனதளவிலோ அவளுக்கு என்மீது காதலே இல்லை... அதனால் தான் என்னை விட்டு சென்றுவிட்டாள்... உண்மையாக இருந்து என்ன..?? என்னை பிடிக்காமல் தானே இருந்திருக்கிறாள்... என்னை விட்டு செல்வது தான் அவளுக்கு நிம்மதியென்றால், அப்படியே இருக்கட்டும்... என்று முடிவெடுத்து தன் மனைவியை தேடும் முயற்சியில் அவர் ஈடுபடவில்லை...

அந்த கடிதத்தை படித்த தாமோதரனின் பெற்றோர்களோ... இதெல்லாம் ஒரு சாக்கு... அவள் வேறு யாரோடோ தான் சென்றுவிட்டாள், என்று கதை கட்டிவிட்டனர்... அதற்கும் அவர் அமைதியாகவே இருந்தார்...

மனைவி பிரிந்தாலும், மகளுக்காக அவர் வாழ நினைத்தார்... ஆனால் அவரின் பெற்றோர்கள் அவருக்கு வேறு திருமணம் செய்ய நினைத்தனர்... அவர் வேண்டாமென்று பிடிவாதம் பிடிக்கவே, இவளால் தானே என் மகன் இப்படி இருக்கிறான் என்று காவ்யாவிடம் தங்களின் வெறுப்பை காட்ட ஆரம்பித்தனர்... இவர் செய்ததெல்லாம் சரியா..?? தவறா..?? என்று தெரியவில்லையென்றாலும், மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்வு... அதனாலேயே மகள் மட்டுமே இனி தனது வாழ்க்கை என்றிருந்துவிட்டார்...

அவளுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதில் மிக அக்கறையாக இருந்தார்... ஆனால் ஓடிப் போன அம்மா என்ற மனைவியின் முகவரி தன் மகளோடு ஒட்டிக் கொண்டது... இப்படியிருக்க, இன்றோ தன் வாழ்க்கையே பாதிக்கபடுவது போல் நடந்துக் கொண்டிருக்கிறாளே என்பதால் தான் கோபத்தில் பேசிவிட்டார்..

ஆனால் இப்படி ஒரு முடிவை மகள் எடுத்துவிட்டாளே... மாப்பிள்ளைக்கு என்ன பதில் சொல்வார் இவர்... முதலில் நடந்த சம்பவம் குறித்து தன் மகளைப் பற்றி அவர் நினைப்பு என்னவாக இருக்கும்... அவரும் அவளை தப்பாக சொல்வாரா..?? எதுவும் புரியவில்லை... இருந்தும் மகள் வீட்டை விட்டு சென்றதை பறறி அவரிடம் கூற வேண்டும்... அவரின் முடிவு என்னவாக இருந்தாலும், எனக்கு என் மகள் வேண்டும் என்ற முடிவோடு நாற்காலியை விட்டு எழுந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.