(Reading time: 22 - 43 minutes)

2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..!! - சித்ரா.வெ.

This is entry #150 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - சித்ரா.வெ.

Trust and Love

கையில் இருந்த கடிதத்தை பிரித்துப் படிப்பதற்குள் கைகள் நடுங்கின தாமோதரனுக்கு... மெல்ல அந்த நடுக்கத்தோடு அதை பிரித்துப் பார்த்த போது...

அன்புள்ள அப்பாவிற்கு,

என்ற முதல் வரியை படிக்கும்போதே நெஞ்சில் சுருக்கென்று வலி வந்துபோனது...

நேற்று இரவு மகளை கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டார்... இரவு படுக்க போகும் முன்னர் தான் அதை உணர்ந்திருந்தார்.. காலை எழுந்ததுமே பேசிய வாரத்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், அவளிடம் ஆறுதலாக பேச வேண்டும்.. அவளின் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்று நினைத்து உறங்கப் போனார்..

காலையில் எழுந்ததும் நேராக அவர் மகளை தேடி அவள் அறைக்குச் செல்ல, அவளுக்கு பதில் அவளின் கடிதம் தான் அங்கு இருந்தது...

அப்பா... ஏற்கனவே உங்களுக்கு அம்மாவால் அவப் பெயர்.. இதில் நான் வேறு உங்களுக்கு அவப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்திட்டேன்... ஆனால் நான் எந்த தப்பும் செய்யவில்லை அப்பா.. இதெல்லாம் அந்த ஆனந்தோட வேலை... இதெல்லாம் பொய்... இதை அத்தை, மாமா நம்பவில்லை... ஆனால் நீங்களாவது நம்புவீர்கள் என்று நினைத்தேன்... ஆனால் நீங்களும் இதை நம்பவில்லை... என் அப்பாவே என்னை நம்பவில்லை...

எத்தனையோ பேர், ஏன் தாத்தா, பாட்டியே கூட நீயும் உன்னோட அம்மா போல தான இருப்பாய் என்று சொல்லும்போது வருத்தமாக தான் இருக்கும்... ஆனால் இன்னைக்கு நீங்களே அப்படி சொல்லும்போது என்னோட உயிரே போனது போல் இருக்குப்பா...

நீங்களே என்னை நம்பாத போது, ரஞ்சித் என்னை நம்புவாரா என்று சந்தேகமாக இருக்குப்பா... அவரும் என்னை தப்பானவள் என்று சொல்லிவிட்டாள் அதற்கு பிறகு நான் வாழ்வதில் அர்த்தமே இல்லை.. அவரோட புறக்கணிப்பை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது... அத்தை, மாமா சொன்னதை ரஞ்சித் நம்பிவிட்டால், அதன்பிறகு எனக்கு வாழ்க்கையே இல்லைப்பா.. அதனால் தான் நான் வீட்டை விட்டுப் போகிறேன்...  கண்டிப்பா நான் உயிரோடு தான் இருப்பேன் அப்பா... நான் உயிரோடு இருக்க வேண்டிய அவசியம் உள்ளது... நான் செய்யாத, செய்ததாக சொன்ன தப்புக்கும், இப்போ உங்களை விட்டு பிரிந்த இந்த தப்புக்கும் என்னை நீங்களும், ரஞ்சித்தும் மன்னித்துவிடுங்கள்...

இப்படிக்கு,

உங்கள் அன்பு மகள் காவ்யா.

கடிதத்தை படிக்கும் வரை விட்டுவிட்டு வந்த வலி, இப்போது விடாமல். வலித்தது... ட்ராயிரில் இருந்து மாத்திரை ஒன்றை எடுத்துப் போட்டவர், மெல்ல சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார்...

சொல்லியிருக்கக் கூடாது... தானே தன் மகளை இப்படி சொல்லியிருக்கக் கூடாது... யார் வேண்டுமானாலும் தன் மனைவியைப் பற்றியும், அதைக் குறித்து தன் மகளைப் பற்றியும் தவறாக பேசலாம்... ஆனால் தன் மனைவி எந்த தவறும் செய்யவில்லை என்பது இவருக்கு மட்டும் தான் தெரியும்... தன் மனைவி வீட்டை விட்டு சென்றதற்கு தான் மட்டுமே காரணம் என்பதும் அவருக்கு தெரியும்... இன்று தன் மகளையும் அதே காரியத்தை செய்ய தூண்டிய இவரது செயலை என்னவென்று சொல்வது... தன் பேச்சால் காயப்படுத்திவிட்டு, பிறகு தவறு என்று யோசிப்பதால் என்ன பிரயோஜனம்...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை அவர் முதலே அறிந்திருக்கவில்லையே... தன் மனைவிக்கு செய்த தீங்கு, தன் மகளையும் பாதிக்கும் என்பதை அப்போது புரிந்துக் கொள்ளவில்லையே...

தாமோதரனுக்கும், ஈஸ்வரிக்கும் நடந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது... ஈஸ்வரியை பெண் பார்க்கச் சென்ற முதல் பார்வையிலேயே தாமோதரனுக்கு அவளை மிகவும் பிடித்துவிட்டது... இப்போது போல் திருமணத்திற்கு முன் சந்தித்து பேசுவது அப்போது எளிதல்ல... அப்படியே சந்திக்க நினைத்தாலும் பெண்ணுடைய வீட்டிற்குச் சென்று அவளை பார்க்க வேண்டும்...

ஆனால் அதைக் கூட தாமோதரன் செய்யவில்லை... மனைவியாக வரப் போகிறவளிடம் முழு காதலையும் தர காத்திருந்தார்... திருமண நாளை எதிர்பார்த்திருந்தார்... கனவிலேயே அவளுடன் வாழ ஆரம்பித்துவிட்டார்... இப்படி ஒவ்வொரு நாளும் ஈஸ்வரிக்காக அவர் உருகிக் கொண்டிருந்த போதுதான், அந்த அதிர்ச்சியான செய்தி அவருடைய காதுக்கு எட்டியது...

அவர்களின் உறவுக்காரர் ஒருவர் ஊர்ப் பயணம் சென்றுவிட்டு திரும்பிவந்தவர் தான் இந்த விஷயத்தை கூறினார்... ஈஸ்வரி யாரையோ காதலித்ததாகவும், இரு வீட்டிலும் அதற்கு எதிர்ப்பு வந்ததால், வீட்டை விட்டு அவள் சென்றதாகவும், ஆனால் காதலித்த அந்த பையன் திடிரென்று பெற்றவர்கள் பேச்சைக் கேட்டு வராமல் வீட்டோடு இருந்துவிட்டதாகவும், வீட்டில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டான் என்றும், அதனால் தான் ஈஸ்வரிக்கும் வேறு மாப்பிள்ளை பாரக்க முடிவு செய்தார்கள்... அந்த பெண்ணையா தாமோதரனுக்கு கட்ட போகிறீர்கள் என்று கேட்டார்.

இதைக் கேட்ட தாமோதரனின் பெற்றோருக்கு அதிர்ச்சி... உடனே கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று தாமோதரனின் அன்னை கூறினார்... அவரின் தந்தை தான் வேறு சிலரிடமும் விசாரித்துப் பார்க்கலாம் என்றார்... அப்படி விசாரித்துப் பார்த்ததில் அந்த உறவுக்காரர் சொன்னதை தான் அவர்களும் கூறினார்கள்...

கல்யாணத்துக்கு எல்லாம் செலவும் செய்ய ஆரம்பித்து, கல்யாண வேலையெல்லாம் தொடங்கிய பின் இந்த கல்யாணத்தை நிறுத்தினால் நஷ்டம் என்று சொன்ன தாமோதரனின் தந்தை, ஈஸ்வரியின் வீட்டிற்குச் சென்று உங்கள் பெண்ணை பற்றி கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா..?? என்றுக் கேட்டார்... அவர்களும் உண்மையை ஒத்துக் கொண்டதும், ஏற்கனவே கொடுக்க இருந்த வரதட்சணையோடு இன்னும் அதிகமாக கொடுத்தால், இந்த திருமணம் நடக்குமென்று பேரம் பேசினார். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்...

தாமோதரன் தன்னுடைய பெற்றோர்கள் செய்வதையெல்லாம் கருத்தில்  கொள்ளவில்லை... தன் முழுக் காதலையும் தன் மனைவிக்கே கொடுக்க வேண்டும் என்று நினைத்தவருக்கு, தன் மனைவியின் காதல் மட்டும் பங்குப் போடப்பட்டது உறுத்தியது... தன்னை போல் ஈஸ்வரி தன்னை நேசிக்கவில்லை... அவள் ஏற்கனவே வேறொருவனை நேசிக்கிறாள் என்பதே அவர் இதயத்தை நெரிஞ்சி முள்ளாய் குத்தியது. ஆனால் ஈஸ்வரியை வேண்டாமென்று சொல்லவும் அவருக்கு மனம் வரவில்லை... இப்படி குழப்பங்களோடு ஈஸ்வரியை திருமணம் செய்துக் கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.