(Reading time: 22 - 43 minutes)

டும் பேருந்தின் ஜன்னலோரத்தில் சாய்ந்தபடி அதில் பயணித்துக் கொண்டிருந்தாள் காவ்யா.. தான் எடுத்த இந்த முடிவு சரியா என்பது தெரியவில்லை அவளுக்கு... மனம் முழுதும் தன் கணவன் ரஞ்சித்தையே சுற்றி வந்தது...  தந்தை மட்டுமே உலகம் என்றிருந்தவளை இந்த ஒரு வருட திருமண வாழ்க்கையில், தன் கணவனுக்குப் பிறகு தான் தந்தையே என்று மாற்றியவன்... அவனை விட்டு பிரிவது தான் அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது...

அன்பானவனாக, தோழனாக, காதலனாக எல்லா நேரத்திலும் தன் உடன் இருந்த கணவன், இந்த விஷயத்தில் தன்னை எப்படி புரிந்துக் கொள்வானோ என்று பயமாக இருந்தது... இவளை நேருக்கு நேராக பார்த்து நீ தப்பானவள் என்று கூறிவிட்டால், அது குறித்து அஞ்சியே வீட்டை விட்டு கிளம்பி வந்துவிட்டாள்... ஆனால்...

மெல்ல தன் வயிறை தொட்டுப் பார்த்துக் கொண்டாள்... நேற்று காலையில் தான் மருத்துவரிடம் சென்று தான் தாய்மையடைந்ததை உறுதி செய்திருந்தாள் அவள்... முதலில் கணவனிடம் சொல்ல வேண்டுமென்று அவனது அலைபேசிக்கு தொடர்புக் கொண்டாள்... ஆனால் அவனது அலைபேசி நிறுத்தப்பட்டிருந்தது... அவன் அலுவலகத்தில் முக்கியமான வேலையில் இருந்திருப்பான்... அதனால் மெதுவாக வீட்டுக்குப் போனதும் சொல்லலாம் என்று நினைத்தாள்... ஆனால் வீட்டில் போனதும் அடித்த புயலில் அவனிடம் சொல்ல முடியாமலே போனது... இப்போதோ அவன் தந்தையாகும் விஷயம் அவனுக்கு முற்றிலும் தெரியாமலே போகப் போகிறது... இந்த நிலை தனக்கு ஏன் வர வேண்டும்...? அந்த ஆனந்தை அவள் ஏன் பார்க்க வேண்டும்...?

இவளுக்கு ஓரளவிற்கு கருத்து தெரிந்த வயதில் தான் இவளின் அன்னை வீட்டை விட்டு சென்றது... உன்னோட அம்மாவுக்கு, நீயும் உன்னோட அப்பாவும் வேண்டாமாம்... அவளுக்கு உங்க ரெண்டுப்பேரை விட முக்கியமான ஒருத்தரோடு ஓடிப் போய்ட்டா.. என்று அன்று இவளது பாட்டி சொன்னபோது இவளுக்கு புரியவில்லை...

அதைப்பற்றி புரிந்த வயதிலோ, தன் அன்னை அப்படி செய்திருக்கமாட்டார் என்று மனசு சொல்லியது... தன்னுடன் இருந்தவரையிலும் தன்னிடம் அன்பாக தான் இருந்தார்... ஆனால் தந்தையோ, அன்னையை விட அன்பை பொழிந்தார்...

தன்னிடம் மட்டுமல்ல அன்னையிடமும் அவர் அதிக அன்பு வைத்திருந்தார்... அன்னைக்கு என்ன பிரச்சனையோ, ஆனாலும் அன்பான கணவனை விட்டு பிரிய அவருக்கு எப்படி மனது வந்தது என்று தான் அன்னையின் மீது அவளுக்கு கோபம்...

மொத்தத்தில் அன்னை இவளை விட்டு சென்றது... தாத்தா, பாட்டியின் புறக்கணிப்பு இவையெல்லாம் சேர்ந்து, தந்தையே இவளுக்கு எல்லாமுமாய் ஆகிப் போனார். ஆனால் தந்தை அலுவலகத்தில் இருக்கும் சமயங்களில், தனிமையை போக்க அவள் அதிகம் நண்பர்களை நாடினாள்... ஆண், பெண் பேதமில்லாமல் எல்லோரிடமும் நட்பு பாராட்டினாள்... அதில் நல்லவர், தீயவரை அவளால் அடையாளம் காண முடியவில்லை.... ஆனால் போக, போக அதைப் புரிந்து அவர்களிடமிருந்து விலக ஆரம்பித்தாள்...

தாமோதரனுக்கும் தன் மகளின் நண்பர்களின் நடத்தைகள் சரியில்லை என்பதை அறிந்து அவளை எச்சரித்தார்... அவள் அவர்களை விட்டு விலகியது தெரிந்தும், எங்கே திரும்ப அவர்களுடன் பழகி தவறான பாதைக்கு சென்று விடுவாளோ என்ற பயத்தில் அவளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தார்...

கல்லூரி படிப்பை முடித்திருந்தாலும் உடனே திருமணம் செய்ய காவ்யாவிற்கு விருப்பமில்லை... மேலே படிக்கவும், வேலைக்கு போகவும் விரும்பினாள்... ஆனால் தன் அன்னை தவறு செய்தாரோ இல்லையோ, தந்தைக்கு அவப்பெயர் தேடித் தந்துவிட்டார்... இதில் தன்னாலும் தந்தைக்கு எந்த அவப்பெயரும் வந்துவிடக் கூடாது என்பதால் திருமணத்திற்கு சம்மதித்தாள்..

ஆனால் மாப்பிள்ளை தான் எளிதில் கிடைக்கவில்லை... ஒன்று இவளின் அன்னை வீட்டை விட்டு சென்றதை வைத்தோ... இல்லை இவளுக்கு முன்பு இருந்த நட்பு வட்டாரம் பற்றி தெரிந்தோ இவளை வேண்டாமென்றனர்... சில பேரோ அதை காரணமாக வைத்து, அதிக வரதட்சணை எதிர்பார்த்தனர்...

ஆனால் இதற்கெல்லாம் தந்தை தலையாட்டாமல் அதீத கவனத்தோடு மாப்பிள்ளை பார்த்தார்... தந்தைக்கு தான் தன் மீது எவ்வளவு பிரியம் என்று காவ்யா நினைத்தாள்...ஆனால் அவளுக்கு என்ன தெரியும், தன்னை போல் ஒரு கணவன் தன் மகளுக்கு கிடைக்கக் கூடாது என்பதால் தான் அவர் கவனத்தோடு மாப்பிள்ளை பார்க்கிறார் என்று.. கடைசியில் தேடி ரஞ்சித்தை கண்டுப்பிடித்தார்...

ரஞ்சித்தை காவ்யாவிற்கு ஏற்கனவே தெரியும், சிறுவயதில் திருவிழாவிற்கு ஊருக்குப் போகும்போது அங்கே அவனோடு விளையாடிருக்கிறாள்... பின் தாத்தா, பாட்டி ஒருவருக்கு பின் ஒருவர் என்று மறைந்ததும் அங்கு செல்வதில்லை... ரஞ்சித்தும் சில வருடங்களுக்கு முன்பு தான் வேலை கிடைத்து... அவன் பெற்றோரோடு சென்னைக்கு வந்திருந்தான்...

அவர்கள் வீட்டிலிருந்து பெண் பார்க்க வந்த போது, அவனுடன் பேச கிடைத்த தனிமையில் முதலில் அவனை இவளின் நண்பனாக உணர வைத்தான்... சிறுவயதில் நடந்ததைப் பற்றி பேசினான்... அதில் அவளுக்கு இருந்த தயக்கங்கள் விலகி, மனதில் உள்ளதை அவனிடம் பகிர்ந்துக் கொண்டாள்... தன் பெற்றோர் பற்றி, இவளின் நண்பர்களைப் பற்றி, அவர்களை பற்றி தெரிந்து பின்பு விலகியதைப் பற்றி என்று எல்லாவற்றையும் அவனிடம் கூறினாள்... பின் இருவரின் சம்மதத்தோடு திருமணத்தை பேசி முடிவு செய்தார்கள்...

ரஞ்சித்தின் பெற்றோருக்கு இவளின் அன்னையின் விஷயம் பற்றி தெரியும், ஆனால் யார் மூலமாகவோ இவளின் நட்பு வட்டாரத்தை பற்றி தெரிந்து, இந்த திருமணம் நடக்கக் கூடாது என்றனர்... தந்தைக்கும் ரஞ்சித்தை விட மனமில்லை... வரதட்சணை கூட அதிகமாக கொடுக்க தயாராயிருந்தார்... ஆனால் ரஞ்சித் அதை ஏற்கவும் இல்லை... தங்கள் பெற்றோரின் பேச்சை கேட்கவுமில்லை... பிடிவாதம் பிடித்து இவளை மணந்தான்...

உலகிலேயே இவள் தான் அதிர்ஷ்டசாலி என்பது போல் உணர வைத்தான்... ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் அப்படியில்லை... பிடிக்காத மருமகள் என்பதால் அவளின் பெற்றோர் இவளிடம் ஒதுக்கத்தை பேச்சிலும், செயலிலும் காட்டினர்... அதை எதிர்த்து இவளுக்காக அவர்களிடம் எதுவும் கேட்கமாட்டான்... போக போக உன்னை புரிந்துக் கொள்வார்கள், அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று சொல்வான்...

அதையே நினைத்து கவலை கொள்ளும் அளவுக்கும் இவளை அவன் விட்டதில்லை... முடிந்தவரை தன் பெற்றோர் இவளை குறை கூறாதபடிக்கு கவனமாக இருப்பான்... ஆனால் அதுவுமே அவர்கள் இவள் மேல் கோபப்பட காரணமாக இருந்தது...

இருந்தும் கணவனின் அன்பில் அதெல்லாம் அவளுக்கு பெரிதாக தெரிந்ததில்லை... கணவனுடன் அந்த ஒரு வருட வாழ்க்கை இவளுக்கு சொர்க்கம்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.