(Reading time: 22 - 43 minutes)

பேருந்தில் இருந்து இறங்கி தான் செல்ல இருந்த ஆசிரமத்திற்கு வழியை கேட்டு நடந்தாள்... நேற்று தான் ஒரு பத்திரிக்கையில் அந்த ஆசிரமத்தை பற்றி பார்த்தாள்... அங்கேயே தங்கி வேலை செய்ய ஆட்கள் தேவை என்று போடப்பட்டிருந்தது... தனக்கு இந்த நேரத்தில் பாதுகாப்பான ஒரு இடம் தேவை என்பதால், இந்த வேலையை எதிர்பார்த்து வந்தாள்... ஆனால் இவளுக்கு இந்த வேலை கிடைக்குமா..?? என்று தான் தெரியவில்லை...

அதை சிந்தித்தப்படியே சாலையை கடக்கும் போது, திடிரென்று தலை சுற்றியது... கொஞ்சம் தொலைவிலோ ஒரு லாரி வேகமாக வந்தது... இவளால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை... அவ்வளவு தான் கடைசியில் நான் இந்த உலகத்தை விட்டே போகப் போகிறேன் என்று நினைத்தப்படி மயங்கி சரிந்தாள்...

யக்கம் தெளிந்து கண் விழித்துப் பார்த்த போது, மிக அருகில் கணவனின் முகம்... ரஞ்சித் நான் எங்க இருக்கேன்.. என்றதும், உனக்கு ஒன்னுமில்லடா.. நீ இப்போ ஹாஸ்பிட்டல்ல இருக்க... உனக்கு ஒன்னும் ஆகல, வெறும் மயக்கம் தான் என்றான்... அருகிலேயே தந்தையும் இருந்தார்... அப்பா ஏதோ சொல்லிட்டேன்னு இப்படி பண்ணிட்டியேம்மா.. என்றார்...

இருவரும் அருகில் இருந்த நிம்மதியில் கண்களை மூடி உறங்கினாள்.. பின் கொஞ்சம் தெளிவாகி எழுந்து உட்கார்ந்த போது, தன் கையாலேயே பழச்சாறை பிழிந்துக் கொடுத்தவன், இப்போ எப்படிடா இருக்கு என்றான்...

இவள் பரவாயில்லை என்று தலையாட்டியது தான் தாமதம்... "அறிவிருக்கா உனக்கு.." என்று திட்ட ஆரம்பித்திருந்தான்..

நீ இப்படி வீட்டை விட்டு போய்ட்டா, நீ தப்பானவ இல்லைன்னு எல்லாம் தெரிஞ்சிப்பாங்களா..?? படிச்சிருக்கியே அறிவிருக்கா.." அவன் திட்ட திட்ட காவ்யாவின் கண்களோ எப்போது கண்ணீரை வெளியிட என காத்திருந்தது...

"என்ன மாப்பிள்ளை... இந்த நிலைமையில போய் இப்படி பேசறீங்க.."

"பின்ன என்ன செய்ய சொல்றீங்க மாமா.. இந்த ஒரு வருஷ வாழ்க்கையில நாங்க நல்லா புரிஞ்சிக்கிட்டோம்னு நினைச்சோம்... ஆனா அப்படியில்லன்னு இவ காண்பிச்சிட்டாளே...

கல்யாண வாழ்க்கையே நம்பிக்கையின் அடிப்படையில தான் ஆரம்பிக்குது... எப்போ அது அவநம்பிக்கையா மாறுதோ... அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமா நாம நடக்காம போறோமோ... அப்பத்தான் பிரச்சனையே வருது...

இவளை நான் கல்யாணம் செஞ்சப்போ... முழு நம்பிக்கையோட தான் நான் இவள் கைய பிடிச்சேன்... அது இப்போ வரைக்கும் குறையல.. நீங்க யார் இவளைப் பத்தி தப்பா சொன்னாலும், ஏன் இவளே அப்படி சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்...

அதே நம்பிக்கையை இவ என் மேலேயும் வைக்கனும்... முதலிலேயே ஆனந்தை சந்திச்சப்பவே என்கிட்ட சொல்லியிருக்கனும்... அதை இவ செய்யல... சரி நீங்க உட்பட எல்லோரும் இவளை தப்பா நினைச்சிருந்தாலும், என்னோட ரஞ்சித் என்னை தப்பா நினைக்க மாட்டாருன்னு நம்பியிருக்க வேண்டாமா..??

"சாரிப்பா.. அத்தை, மாமாவை நீங்க என் முன்னாடி விட்டுக் கொடுத்ததில்ல... அதான் அவங்க சொல்றதை நீங்க நம்பிடுவீங்களோன்னு நினைச்சேன்.."

"அவங்க என்னை வளர்க்க ரொம்ப கஷ்டப்பட்றுக்காங்க... அதான் யார்க்கிட்டேயும் அவங்களை விட்டுக் கொடுத்ததில்ல... ஆனா உன்னையும் அவங்க முன்னாடி விட்டுக் கொடுத்ததில்லையே... அதை புரிஞ்சுக்காம இப்படி செஞ்சுட்டியே... உனக்கு ஏதாவது ஆகியிருந்தா... என்னையும் உங்க அப்பாவையும் பத்தி யோசிச்சுப் பார்த்தீயா..?? அதுவும் நீ எந்த நிலைமைல இருக்க தெரியுமா..??" என்று அவன் கேட்டதும்,

தான் தாய்மை அடைந்த விஷயம் தனக்கு தெரியும் என்று ஒத்துக் கொண்டாள்... அது தெரிந்தும் அவள் செய்ததை நினைத்து இன்னும் கோபப்பட்டான்... ஆனால் அவள் கண்ணில் கண்ணீரை பார்த்ததும் சமாதானமாகிவிட்டான்...

"மாப்பிள்ளை... உங்களை மாதிரி ஒரு புருஷன் கிடைக்க, என்னோட பொண்ணு கொடுத்து வச்சிருக்கனும்.." என்றார் தாமோதரன்...

"இப்போ நீங்க பேசினதை கேட்டதும், என்னை நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு மாப்பிள்ளை... உங்களில் கால்வாசி கூட நான் இல்லை.." என்றவர், இருவரும் புரியாமல் பார்த்ததும்... தன் மனைவிக்கு தான் செய்ததைப் பற்றி கூறினார்... தன் அன்னையை நினைத்து காவ்யா உருகினாள்...

"மாப்பிள்ளை... இனியாவது நான் ஈஸ்வரியை தேடனும்... இப்போ தான் எனக்கு வாழ்க்கைன்னா என்னன்னு புரிஞ்சிருக்கு.." என்றார்..

"மாமா.. நீங்க அத்தையை எங்கேயும் தேட வேண்டாம்.." என்றவன், வெளியே சென்று வந்தவன், ஈஸ்வரியை அழைத்து வந்தான்... தந்தையும், மகளும் ஆச்சர்யத்தில் கண்களை விரித்தனர்..

"மாமா... காவ்யாக்கு ஆக்ஸிடெண்ட் ஆகாம காப்பாத்தினது அத்தை தான்... இவளை ஹாஸ்பிட்டல்க்கு கூட்டிட்டு வரவரைக்கும் காவ்யாவை இவங்களுக்கு அடையாளம் தெரியல... அப்புறம் இவளோட பையை சோதனை செஞ்சப்ப தான் உங்கக் கூட அவ இருக்க போட்டோவை அத்தை பார்த்திருக்காங்க... அப்புறம் என்னோட நம்பருக்கு போன் பண்ணாங்க...

நீங்க என்கிட்ட பேசிட்டு வச்சதும், நான் உடனே புறப்பட்டேன்... அப்போ தான் இவங்கக்கிட்ட இருந்து போன் வந்துச்சு... இங்க வந்ததும் தான் உங்களுக்கு நான் தகவல் சொன்னேன்... இவங்களை பார்த்ததும் எனக்கு அடையாளம் தெரிஞ்சிடுச்சு... ஏன்னா காவ்யா இவங்க போட்டோவ என்கிட்ட காமிச்சிருக்கா... அப்புறம் இவங்ககிட்ட பேசினேன்...

பக்கத்துல இருக்க ஒரு ஆசிரமத்துல தங்கியிருக்கறதா சொன்னாங்க... ஆனா எதனால வீட்டை விட்டு வந்தாங்கன்னு சொல்லல... இப்போ நீங்க சொல்லி தான் தெரிஞ்சுது என்றான்.

"ரஞ்சித்... நான் அந்த ஆசிரமத்துக்கு தான் வேலைக்குப் போகலாம்னு இருந்தேன் என்று காவ்யா கூறினாள்..

"ஈஸ்வரி... உன்கிட்ட மன்னிப்பு கேக்கும் அறுகதை கூட எனக்கில்ல... இருந்தும் கேட்கிறேன்... என்னை மன்னிப்பியா..??"

"உங்க மேல மட்டுமில்லங்க.. என்மேலேயும் தான் தப்பிருக்கு... நீங்க என்னை நம்பற மாதிரி நானும் நடந்திருக்கனும்... உங்களுக்காக இல்லைன்னாலும் காவ்யாவுக்காகவாவது நான் எல்லாம் பொறுத்துகிட்டு இருக்கனும்... நான் இல்லாம என்னோட பொண்ணுக்கு எவ்வளவு கஷ்டம்... மாப்பிள்ளை எல்லாம் சொன்னாரு.. காவ்யா என்னை மன்னிப்பியாம்மா.."

"முடிஞ்சது முடிஞ்சதா இருக்கட்டும்மா.. இனியாவது நீங்களும், அப்பாவும் நல்லப்படியா வாழனும்.. " என்றாள் காவ்யா.. இருவரும சரியென்று தலையசைத்தனர்..

"மாமா... நான் டெல்லியிலிருந்து வரவரைக்கும் காவ்யா உங்கக் கூடவே இருக்கட்டும்... அத்தையும் அவங்க மகள் கூட இருப்பாங்க... எனக்கும் அம்மா, அப்பாக்கிட்ட பேசி புரிய வைக்க வேண்டியிருக்கு... அதான்.."

"சரி மாப்பிள்ளை.. ஆனா உங்க அப்பா, அம்மா புரிஞ்சிப்பாங்களா..??"

"புரிஞ்சிக்கனும் மாமா.. அப்படி ஒருவேளை புரிஞ்சிக்கலைன்னா.. நான் டெல்லியிலிருந்து வந்ததும் நாங்க தனியா போய்டுவோம்... ஏன்னா இந்த நேரத்துல காவ்யா நல்ல சூழ்நிலையில் இருக்கனும்.." என்றான்.

அன்று இரவு தாமோதரனின் வீட்டில், தன்னுடைய அறையில் தன் கணவனின் கையணைப்பில் இருந்தாள் காவ்யா..

"என் மேல இன்னும் உங்களுக்கு கோபமாப்பா.."

"பின்ன இருக்காதா.. நீ போய்ட்டா, என்னோட நிலைமையை யோசிச்சுப் பார்த்தீயா..?? அதுவும் என்னோட குழந்தையையும் என்கிட்ட இருந்து பிரிக்கப் பார்த்த, எப்படி இருந்துச்சு தெரியுமா..??"

"சாரி ரஞ்சு..."

"இங்கப் பாரு... ஆனந்தப் பத்தி போலீஸ்ல சொல்லியாச்சு... இனி இதுபோல ஏதாவதுன்னா என்கிட்ட சொல்லு... அதைவிட்டுட்டு இப்படி தப்பா எதுவும் யோசிக்காத..."

"இல்லப்பா.. இனி அப்படி செய்ய மாட்டேன்.. நீங்க கடவுள் மூலமா எனக்கு கிடைச்ச கிஃப்ட்.. இனி உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன்.." என்று சொல்லி அவனோடு இன்னும் ஒட்டிக் கொண்டாள்.. அவனும் அவள் நெற்றியில் தன் உதடுகளை பதித்து தன் அன்பைக் காட்டினான்.

கணவன் மனைவிக்கிடையே ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து, ஆதரவாகவும் அனுசரனையாகவும் இருந்தால், அவர்களுக்கு வரும் பிரச்சனைகளை, ஏன் அவர்களுக்கிடையே உள்ள பிரச்சனைகளையும் சமாளித்து தங்களின் இல்லற வாழக்கையில் மகிழ்ச்சியைக் காணலாம்.

 

This is entry #150 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - சித்ரா.வெ.

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.