(Reading time: 3 - 5 minutes)

சிறுகதை - உங்களின் மொழியில் எங்களைப்பற்றி... - ரேவதிசிவா

Dog and Parrot

வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்

சொன்னவன் மட்டும் கையில் கிடைத்தால், என் வாயாலே ஒரு கவ்வு கவ்வி விடுவேன்.பின்ன நான் வாயைத்  திறந்து பேசினாலோ அல்லது பாடினாலோ? அடிக்க வருகிறார்களே!இவர்கள் காட்டுக் கத்தல் கத்துவார்கள்,நான் மட்டும் கத்தக் கூடாதாம்.எந்த ஊர் நியாயம் இது!

இவர்களுக்குத் தேவை என்றால் மட்டும் நான் பேச வேண்டுமாம்,மற்ற நேரத்தில் மௌனமாய் இருக்க நானென்ன மௌனவிரதமா மேற்கொள்கிறேன். என்னமோ தங்களுக்கு ஆறு அறிவு இருக்கிறது என்று ஜம்பமாய் பீற்றிக் கொள்வது,ஆனால் ஆறாவது அறிவை ஆராயாமல் அசடாய் இருந்து அழ வைப்பது.

உண்மையில் இவர்கள் அசடுகளா?

போன வாரம் புதிதாய் அறிமுகமாகிய நண்பன்,மேலே சொன்னவாறு தன்னுடைய மனக்குறைகளை என்னிடம் பகிர்ந்து கொண்டான்.

நாங்கள் இருவரும் சந்தித்தது ஒரு சந்தையில்தான்.உயிர்களை உணவிற்காக அடைத்து வைப்பது வேறு! அழகுக்காக அடைத்து வைப்பது வேறு!

நான் இரண்டாம் இரகத்தில் இருந்தேன்.முதல் இரகத்தில் இருந்தாலாவது, சட்டென்று போய் விடும் துன்பம்!இந்த இரண்டாவது இரகத்தில் இருப்பது சிறுக சிறுக நரகத்தை அனுபவிப்பது!

என்னைப் பார்த்து விலைப்பேசி வாங்கிச் சென்றனர்,என் நண்பனின் உரிமையாளர்.என் நண்பனின் கண்கள் என்னைப் பரிதாபத்தோடு நோக்கியது,ஏதோ இன்றாவது விடுதலைக் கிட்டியதே என்ற மகிழ்வில் இருந்த நான் அப்பொழுது அவனை நன்கு கவனிக்கவில்லை.

பின்பு உணர்ந்தேன் உண்மை நிலையை!

கூண்டில் அடைத்து பேசு பேசு என்று கொடுமை செய்தனர். நானும் என் நண்பனும் எதிர் எதிரான நிலையில் துன்பம் அனுபவிக்கிறோம்.

மானிடர்களாகிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்!

பேசுவது,உண்பது,உறங்குவது,இணையை தேடுவது எப்படி இயல்பானதோ, அதுமாதிரிதான் எங்களுக்கும்,நான் இங்கு குறிப்பிட்டது பேசும் ஒரு நிகழ்வைதான்! மற்றவகைகளை நீங்களே சிந்தித்துப் பாரும்.உணர்வுகள் எங்களுக்கும் உண்டு,அன்பாய் அரவணைக்கிறோம் என்ற பெயரில் நீங்கள் செய்பவைகள்  என்ன என்ன என்பதை,எங்களிடம் இல்லாத உங்களின் ஆறாம் அறிவைக் கொண்டு ஆய்ந்து பாரும்.

இப்படிக்கு உங்களிடம் குமுறுவது பறவை இனத்தை சேர்ந்தவனான கிளி.என் நண்பனின் பெயர் நாய்.

வணக்கம் நண்பர்களே! நாய் தொடர்ந்து குரைக்க, எதனால் குரைக்கிறது என்று பாராமல் அதை நன்கு அடித்த செயலைப் பார்த்ததால், தோன்றிய எண்ணமே இக்கதை.ஒவ்வொரு உயிர்களுக்கும் உரிமை உண்டு இப்புவியில் வாழ, எதனால் நாம் உயர்ந்த(?) இடத்தில் இருக்கிறோம் என்பதை இனிமேலாவது சிந்திப்போம்.

வாழும் உரிமை உயிர்கள் அனைத்திற்கும் உண்டு.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.