(Reading time: 11 - 22 minutes)

தோ ஒரு கோபத்தில் கிளம்பிவிட்டானே தவிர நிதினால் பார்ட்டியில் முழுமனதாக கலந்து கொள்ள முடியவில்லை. மனது உறுத்திக் கொண்டே இருந்தது. ‘கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ? அவளிடம் சொல்லிட்டே வந்திருக்கலாம். இல்லையில்லை, சொன்னா மட்டும் அவ அனுப்பிடப் போறாளா? அவள் ரொம்ப அதிகப்படியான கண்டிப்பு காட்டுகிறாள். அர்ஜுன் மனைவி இப்படியா இருக்கிறாள். அவளும் ஒரு  பெண் தானே? இவள் ஏன் அவளை போல இருக்கக் கூடாது? பார்ட்டிக்கு போவதெல்லாம் இந்த காலத்தில் சர்வ சாதாரணம். அதை போய் தப்பா எடுத்துக்கிட்டா அது அவளோட முட்டாள்தனம்’. என்று சமாதனப் படுத்திக் கொண்டாலும் மனசு அவன் இழுத்த இழுப்புக்கு வர மறுத்து சண்டித்தனம் செய்தது.

மணி பதினொன்று அடித்ததும் "அஜ்ஜு போதும்டா வா நாம போகலாம் " என்று கிளம்ப யத்தனித்தான். "போடா சரியான பயந்தாங்குளி , நீயெல்லாம் எதுக்கு எங்கூட வர்றே , என்னையும் என்ஜாய் பண்ண விடாம? " என்று அலுத்தபடி தானும் கிளம்பினான் அர்ஜுன்.

அர்ஜுன் எப்பவுமே நிதானம் இழக்கும் வரை குடிப்பான். இன்றும் அப்படித்தான். ஆனால் நிதின் அவளுக்குப் பிடிக்காது என்று இன்று மதுவை தொடக்கூட இல்லை. வெறும் கூல்ட்ரிங்க்ஸை வைத்துக் கொண்டு சமாளித்துவிட்டான். எனவே பைக்கை நிதின் ஓட்டினான். முதலில் அர்ஜுன் வீட்டுக்கு சென்ற போது வீடு பூட்டியிருந்தது. வீட்டை திறந்து அவனை உள்ளே கொண்டுபோய் படுக்க வைத்துவிட்டு வீடு திரும்பினான் நிதின்.  

கதவைத் திறந்த நந்தினி  ஒன்றுமே பேசவில்லை. அழுது அழுது சிவந்த அவளது கண்கள் அவனை என்னவோ செய்தன. ஆனால் வலிய தன் மனதை கடினப் படுத்திக்கொண்டான். இந்த மாதிரி நடிப்புக்கெல்லாம் பணிந்தால் அப்புறம் நம்ம தலையிலேயே ஏறி உக்கார்ந்துகொள்வாள். எனவே அவளை கண்டுகொள்ளாமல் நேரே உள்ளே சென்றுவிட்டான் நிதின்..

றுநாள் அலுவலகம் சென்ற நிதின் அங்கு அர்ஜுனைக் காணாமல் திகைத்தான். "என்னாச்சு இவனுக்கு? ஏன் இன்னிக்கு வரலை? ஒருவேளை பர்சனல் வேலையாக இருக்குமோ? " என்று மொபைலில் அழைத்தான். ஸ்விச் ஆப் என்று வந்தது. ‘சே நேத்து கொஞ்சம் ஓவராதான் குடிச்சிட்டான் , நாமும் கவனிக்கலை அதனால தான் உடம்பு ஏதோ சரியில்லை போலயிருக்கு’ என்று நினைத்தவன் மாலையில் அர்ஜுன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது.

 கிட்டத்தட்ட ஒருவாரம் அர்ஜுனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை . அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை .

காலிங்பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்த நிதின் வெளியில் நின்றிருந்த அர்ஜுனைப் பார்த்து திகைத்தான். தாடி மீசையுடன் பார்க்கவே தேவதாஸ் போல இருந்தான் அர்ஜுன்.

“அஜ்ஜூ என்னாச்சுடா ? ஏண்டா இந்தக் கோலம் , உடம்பு ஏதும் சரியில்லையா? எங்கிட்டக்கூட சொல்லாம எங்கடா போயிட்டே " என்று கேள்விகளை           அடுக்கினான் நிதின்.

உள்ளே வந்த அர்ஜுன் சுற்றும் முற்றும் பார்த்தபடி " சிஸ்டர் எங்கேடா " என்றான்.

“அவ இப்போதான் கோயிலுக்கு போனா, இன்னிக்கி ஏதோ நல்ல நாளாம், விரதம் இருந்தா எனக்கு நல்லதாம், அது கிடக்கட்டும். நீ என்ன சாப்பிடறே ? காபியா டீயா?” என்றான்..

“அதெல்லாம் ஒன்னும் வேணாம், நா உன்கிட்ட தனியா பேசணும்னுதான் வந்தேன் இத படிச்சுப் பாரு"  என்றபடி ஒரு பேப்பரை எடுத்து அவனிடம் கொடுத்தான் அர்ஜுன்.

அது சுவப்னா எழுதிய லெட்டர். 'அர்ஜுன், என்னதான் முயற்சி செய்தாலும் என்னால் உங்களை என்னுடையவராக நினைக்க முடியவில்லை. சில நாட்களுக்கு முன்  என்னுடைய பழைய காதலர் நிர்மலை சந்திக்க நேர்ந்தது. அவர் என்னை  மறுபடியும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார். நான் அவருடன் செல்கிறேன். எனவே நீங்கள் என்னை மன்னித்து மறந்துவிடவும் . உங்களுக்கென்று ஒரு புது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும்’ என்று அதில் எழுதியிருந்தது. படித்து முடித்த நிதின் அதிர்ச்சியில்  உறைந்துபோய் அவனைப் பார்த்தான்.

அர்ஜுன் பேசினான் "அன்னிக்கி நீ என்னை எங்க வீட்டுல விட்டுட்டு போன பிறகு காலைல தான் இந்த லெட்டரை நா பார்த்தேன். முதலில் என்னால நம்பவே முடியலை. ஒரே குழப்பமா இருந்தது, போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணலாம்ன்னு நெனச்சேன். ஆனா அது எனக்குதான் அவமானம். அதனால  பக்கத்துக்கு ஊர்ல இருக்கிற ஆஸ்ரமத்துக்குப் போயிட்டேன் ,அங்கு நிதானமா ஒவ்வொண்ணா நினைச்சு பார்த்த பிறகுதான் இந்த லெட்டர் உண்மையாக இருக்கும்னு தோணிச்சி. எந்த பெண்ணுக்கும் தன் கணவன் வேறு  பெண்ணைப் பார்த்தால் பிடிக்காது. அதுதான் பொஸசிவ்நெஸ். என் மனைவிகிட்டே அது இல்லாதப்பவே நா யோசிச்சி இருக்கணும். அது தெரியாம சந்தோஷப்பட்டேன், எவ்வளோ பெரிய முட்டாள் நான் “ தலையிலேயே ரெண்டு கைகளால் அடித்துக்கொண்டான் அர்ஜுன்.

நிதினுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆறுதலாக நண்பனின் கையை பிடித்து அழுத்தினான்.

தன்னைக் கட்டுப் படுத்திக்க கொண்டு தொடர்ந்தான் அர்ஜுன் “தப்பு எம்மேலேதானே ? முட்டாள்தனமா சுதந்திரம் அது இதுன்னு என் போக்கில் சுற்றி  அவளை அவள் போக்கில் போக விட்டுட்டேன். பாத்தியா நிதின், என் மனைவி என்னை என் போக்கில் விட்டதுக்குக் காரணம் என் மேல அவளுக்கு அக்கறையில்லாததுதான் .  மனைவி இதை செய்யாதே ,அதை செய்யாதே என்பது நம்மேல் கொண்ட அன்பால் தானே தவிர அடக்குமுறையில்லை  என்பது எனக்கு காலம் கடந்து இப்போதான் புரியுது...  கண்டபடி திரிகின்ற ஆணைக்கு கூட தன் அன்பால் திருத்த மனைவியால் முடியும். என் மனைவி அதை செய்யாமல் விட்டதே அவளுக்கு நான் எக்கேடு கெட்டாலும் அக்கறையில்லை என்பதால்தான். என்னை வேணாம்ன்னு தூக்கி எரிஞ்சவ எனக்கும் இனி வேணாம்னு நானும் முடிவெடுத்துட்டேன்” மூச்சு வாங்க சற்று நிறுத்தியவன் மீண்டும் தொடர்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.