(Reading time: 10 - 20 minutes)

16. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது

Thudikkum ithayam unathe unathu

இள வயதினரை அதிகம் தாக்கும் ருமாடிக் இதய நோய் இதயத்தின் வால்வுகளைப் பாதிப்பிற்குள்ளாக்கும்

ழுது அழுது ஓய்ந்து போன வர்ஷினி அப்படியே தூங்கிப் போனாள். விடியலிலே எழுந்துவிட்டவள் ஜன்னல் வழியே அதிகாலை சூரியனை பார்த்த வண்ணம் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தாள். பின் ஒரு முடிவுக்கு வந்தவளாக தனது அத்தை மாமாவை நாடிச் சென்றாள்.

“என்னங்க இன்னிக்கு சூரியன் மேற்கில் உதிச்சதா என்ன” அதிகாலையிலேயே டைனிங் ஹாலில் அமர்ந்த வர்ஷினியைப் பார்த்ததும் அதிசியத்து போய் லக்ஷ்மி கணவரை வினவினார்.

உடனேயே எதாவது பதிலுக்கு வம்பிழுப்பாள் என எதிர்பார்த்த லக்ஷ்மி ராமசந்திரன் இருவரும் ஏமாந்து தான் போயினர். ஏனெனில் வர்ஷினி தீவிரமான சிந்தனையில் இருந்தாள்.

“அம்மு” ராமசந்திரன் அவளது மோன நிலையைக் கலைக்க அத்தை மாமா இருவரையும் மாறி மாறி பார்த்தாள். பின் நிதானமாக இழுத்து ஒரு பெருமூச்சு எடுத்தவள் இருவரையும் அங்கே அமரச் சொல்லி அவர்களை எதிர்நோக்கினாள்.

“அத்தை மாமா சின்ன வயசில் இருந்து இது நாள் வரை நான் கேட்காமலேயே எனக்கு என்ன தேவையோ அதை நீங்க நிறைவேற்றி இருக்கீங்க. இப்போ நான் ஒன்னு கேட்பேன் அதை மறுக்காம நிறைவேற்றி வைப்பீங்களா”

ஒரு வித ஏக்கத்தோடு  சிறு பரிதாபம் இழையோட அவளது பேச்சையும் முகத்தையும் கண்ட பெரியவர்கள் இருவரும் ஒரு கணம் பதறிப் போயினர்.

“என்னடா அம்மு இப்படி எல்லாம் பேசுற. என்னாச்சு உனக்கு. நீ கேட்டு அதை செய்யாம இருப்பேனா. என்ன டா வேணும் சொல்லு” ராமசந்திரன் தங்கை மகளை வாஞ்சையோடு அணைத்தபடி கூறவும் இளையவள் சற்று திடம் பெற்றாள்.

“மாமா எனக்கு கல்யாணமே வேண்டாம் மாமா. ப்ளீஸ் மாமா. எனக்காக வருண் அண்ணா கல்யாணத்தை தள்ளி போடாதீங்க”

“அம்மு என்ன பேசுற நீ” லக்ஷ்மி பதட்டமாய் வினவ ராமசந்திரன் மனைவியின் கையைப் பற்றி அழுத்தி அமைதியாக இருக்கும் படி சைகை செய்தார்.

“அம்மு நீ ஆசைப்பட்ட மாதிரியே நாம் காயத்ரி வீட்டில் போய் சம்பந்தம் பேசலாம். என்ன சரி தானே” புன்னகையுடன் ராமசந்திரன் கூறவும் அகம் முகம் இரண்டும் ஒரு சேர மலர மிகவும் சந்தோஷமாக தலையாட்டினாள்.

வர்ஷினி அங்கிருந்து சென்றதும் கணவரைக் கோபித்துக் கொண்டார் லக்ஷ்மி.

“என்னங்க அவ தான் சின்ன பொண்ணு ஏதோ புரியாம பேசுறா. நீங்களும் அவளோட ஒத்து பாடிட்டு இருக்கீங்க”

“லக்ஷ்மி அம்மு மனசில் என்னவோ இருக்கு. அன்னிக்கு ஹாஸ்பிடல் பங்க்ஷன்ல அவளுக்கு உடம்பு சரியில்லாம போனதில் இருந்து அவ டல்லா இருக்கா. அவ உடம்புக்கு ஒன்னும் இல்லைன்னு வருண் தெளிவா சொல்லிட்டான். இருந்தாலும் அவ மனசில் ஏதோ குறை இருக்கு”

“என்னன்னு அவ கிட்ட கேளுங்களேன்” லக்ஷ்மி இப்போது கவலையனார்.

“நம்மகிட்ட சொல்லக் கூடிய விஷயமா இருந்தா அவளா சொல்லுவா. இல்லை வருணிடம் சொல்லிடுவா. அது வரை அவள் இஷ்டத்துக்கு விடுவோம். ஒரு தடவை நான் செய்த தப்பை மறுபடியும் செய்ய மாட்டேன். என் தங்கச்சி மனசை புரிஞ்சுக்காம தான் அவளை தூக்கி கொடுத்துட்டோம். அம்முவை எந்த சூழ்நிலையிலும் இழந்துட கூடாது லக்ஷ்மி” உணர்ச்சிவசப்பட்டு போனார் ராமசந்திரன்.

ராமசந்திரனின் ஒரே தங்கை கௌரி அவரை விட பத்து வயது இளையவள். பரம்பரை தொழில், நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர்கள். கௌரிக்கு எட்டு வயதாகும் போது ஓர் விபத்தில் பெற்றோரை இழந்தனர்.

பிறந்ததில் இருந்தே அண்ணனின் அரவணைப்பிலேயே எப்போதும் இருந்த கௌரிக்கு பெற்றோர் இழப்பு அவ்வளவு பெரிதாக பாதிக்கவில்லை. அண்ணன் தான் சகலமும் என்றிருந்தார். ராமசந்திரனும் பத்து வயது இளைய தங்கையை மகளாகவே பாசம் வைத்து வளர்த்தார்.

ராமசந்திரன் தொழிலில் கவனம் செலுத்தி இரவு பகல் பாராது ஓயாது உழைத்தார். தங்கையை ஓர் இளவரசியாகவே வளர்த்தார்.

சுற்றமும் நட்பும் திருமணத்தை வலியுறுத்தவே கௌரியின் விருப்பத்திற்கு விட்டு விட்டார் ராமசந்திரன்.

லக்ஷ்மி அந்த வீட்டில் அடியெடுத்து வைத்த நாளில் இருந்து அண்ணி அண்ணி என்று அவர் பின்னாலேயே சுற்றித் திரிந்த கௌரியை லக்ஷ்மியும் பாசத்தோடு அரவணைத்துக் கொண்டார்.

வருண் பிறக்கவும் கௌரி ஒரு கணம் கூட வருணை தரையில் விடமால் தனது தோளிலும் மடியிலுமே தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருப்பார்.

நிறைந்த மகிழ்ச்சியும் செல்வமும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்திருந்த அக்குடும்பத்தில் முதல் முறை சிறு கலக்கம் ஏற்பட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.