(Reading time: 10 - 20 minutes)

“கௌரி அண்ணா உன் நல்லதுக்கு தான் சொல்வேன். நல்ல சம்பந்தம் தானே தேடி வந்திருகாங்க. நீயும் காலேஜ் முடிக்க போற” ராமசந்திரன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தனக்கு திருமணம் வேண்டாம் என்று அடியோடு மறுத்து பிடிவாதம் பிடித்தார் கௌரி.

“அண்ணி நீங்களாச்சும் சொல்லுங்க எனக்கு கல்யணம் வேண்டாம்” லக்ஷ்மியிடம் கெஞ்சினார் கௌரி.

“என்னமா உன் அண்ணா உனக்கு எது செய்தாலும் நல்லதுக்கு தானே செய்வாங்க. உன் ஜாதகத்திலும் அடுத்த வருஷத்திற்குள் கல்யணம் செய்திடனும்னு இருக்குனு ஜோசியர் சொன்னார். அது மாதிரியே நல்ல இடமா அமைஞ்சிருக்கு. நான் கல்யணம் செய்து கொண்டு இங்க வந்து சந்தோஷமா வாழலையா. அது மாதிரி நீயும் சந்தோஷமா சீரும் சிறப்புமா இருப்ப” உறவில் தான் நாத்தனார். ஆனால் கௌரியை மகளாகவே பாவித்தார் லக்ஷ்மியும்.

செய்வதறியாது பரிதவித்தார் கௌரி.

கௌரி கல்லூரியில் உடன் படிக்கும் சர்வேஸ்வரனை மனப்பூர்வமாக விரும்பினார். தனது ஏழ்மையான சூழ்நிலையால் கௌரியின் காதலை ஏற்க தயங்கிய சர்வேஸ்வரன் கௌரியின் தூய்மையான காதலில் மனதைப் பறிகொடுத்தார்.

“சர்வா அண்ணா எனக்கு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்துட்டு இருக்கார். நான் எவ்வளவு மறுத்தும் விடாப்பிடியாக இருக்கார். நம்மை பற்றி சொல்லிடவா” தன்னவனிடம் தனது நிலைமையை எடுத்துரைத்தார்.

“கௌரி உன் அண்ணா கிட்ட என்னை பத்தி என்னவென்று சொல்வாய். நம் படிப்பு முடிஞ்சதும் ஒரு நல்ல வேலை தேடிகிட்டு நானே உன் அண்ணன் கிட்ட பெண் கேட்டு வரேன்” காதலிக்கு எடுத்துரைத்தார் சர்வேஸ்வரன்.

“சர்வா அண்ணா அது வரை காத்திருக்க மாட்டார். எனக்கு வேற வழி தெரியல. இன்னொருத்தனுக்கு கழுத்தை நீட்டும் நிலை வந்தால் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்” கௌரி சொல்லவும் சர்வேஸ்வரன் அதிர்ந்து போனார்.

சர்வேஸ்வரன் ராமச்சந்திரனை சந்தித்து தான் கௌரியை மனப்பூர்வமாக விரும்புவதாகவும் கெளரிக்கும் இதில் சம்மதம் என்றும் தெரிவித்து மணம் புரிய கேட்டார்.

பொதுவாக திரைப்படங்களிலும் கதைகளிலும் வரும் அண்ணனைப் போல ராமசந்திரன் நடந்து கொள்ளவில்லை. மாறாக தங்கையின் விருப்பத்தை நேரடியாக கேட்டறிந்து சர்வேஸ்வரன் பற்றி தீர விசாரித்தார்.

நல்ல பண்பும் குணமும் அறிவும் திறமையும் உடையவர் சர்வேஸ்வரன் என அறிந்ததும் தங்கையின் தேர்வை எண்ணி பெருமிதம் கொள்ளவே செய்தார்.

ஆனால் அவர் முன்வைத்த நிபந்தனை தான் சர்வேஸ்வரனுக்கு உவப்பானதாக இல்லை.

“சர்வேஸ்வரன், ஒரு அண்ணனாக நான் என் தங்கையின் விருப்பத்தை மதிக்கிறேன். அதே சமாயம் உங்களைப் பற்றி விசாரித்து அறியவும் செய்தேன். எனக்கும் சம்மதமே. ஆனால் கௌரி எனக்கு மகள் போன்றவள். அவளை ஒரு இளவரசியாக தான் இது வரை வளர்த்து வந்திருக்கேன். எங்க குடும்ப ஜோசியர் இந்த வருசத்திற்குள் கௌரியோட கல்யாணத்தை நடத்திடணும்ன்னு சொல்லிருக்கார் எனக்கு தனிப்பட்ட முறையில் அதில் நம்பிக்கை உண்டு. உங்க படிப்பு இன்னும் முடியலை. ஒரு நிலையான வேலையும் இல்லை. உங்களோட ஏழ்மை நிலையையோ அல்லது உங்களுக்கு உற்றார் உறவினர் யாரும் இல்லை என்பதையோ நான் பொருட்டாக நினைக்கவில்லை. ஆனால் ஏழ்மையான  ஒரு நிலைமையில் என் தங்கையால் வாழவும் முடியாது அதை என்னால் பார்க்கவும் முடியாது. அதனால நீங்க கல்யாணத்திற்குப் பிறகு நம்ம வீட்டோடவே வந்திடுங்க. நம்ம தொழிலை கவனித்து கொள்ளுங்க” ராமசந்திரன் பொறுமையாக எடுத்துரைத்தார்.

அவர் நிலைமையில் அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை தான். ஆனால் சர்வேஸ்வரனால் அவரது நிபந்தனைக்கு ஒப்புக் கொள்ள முடியவில்லை.

“கௌரி ஒரு முழம் பூவனாலும் நான் சுயமா சம்பாதிச்சு உனக்கு வாங்கித் தரணும். குடிசைனாலும் நம்ம வீட்டில் நீ மகாலக்ஷ்மியா இருந்து விளகேத்தி வைக்கணும். உன் அண்ணன் அவர் நிலையில் இருந்து சொல்றார். ஆனால் என் நிலையில் இருந்து நீ யோசித்துப் பார்க்கணும்” பணம் வசதி இவைகளுக்கு அடிபணித்து போகாமல் காதலும் தன்மானமும்  பெரிதென கருதிய சர்வேஸ்வரனை எண்ணி பெருமை கொண்டார் கௌரி.

தனது அண்ணனிடம் சர்வேஸ்வரனின் பக்கத்தை எடுத்துரைத்தார் கௌரி. ஆனால் ராமசந்திரன் தனது நிலையில் பிடிவாதமாக இருந்தார்.

“நம்ம எக்ஸாம் முடிஞ்சதும் நாம ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துக்கலாம். ஏதாவது வெளியூர் போய் அங்கே நாம வாழலாம். என் அண்ணாக்கு தெரிய வேண்டாம். ஏன்னா என் அண்ணா வந்து சீர்வரிசைன்னு சொல்லி நாம வாழுற குடிசையையும் மாளிகையா மாத்திடுவார்”

“கௌரி இது தப்பில்லையா. உன் அண்ணனுக்குத் தெரியாம கல்யாணம் செய்து அவருக்கு தெரியாம ஊரை விட்டு போவது”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.