(Reading time: 16 - 32 minutes)

21. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Tamilukku pugazh endru per

ன்ன இன்னும் நீங்க உங்க காதலை சொல்லலயா?” ஆச்சர்யமாக கேட்ட  புகழைப் பார்த்து முகம் மலர்ந்தான் தமிழ்.

“இல்லையே..”

“ஏன்..”

“முருகர் வள்ளியை  மணக்குற முன்னாடி பிள்ளையாரை வணங்கின மாதிரி, பக்தன் சிவனை சேவிக்கிற முன்னாடி நந்தியை வணங்குற மாதிரி..”

“எனக்கு பாத பூஜை பண்ண வந்தீங்களா தமிழ்?” கிண்டலாய் கேட்டான் புகழ்.

“ஹா ஹா.. அதென்னவோ, யாழினியை நினைக்கும்போது கூடவே புகழோட ஞாபகமும் வந்துருச்சு..அதான் பாஸ் வந்தேன்.. அதுமட்டும் இல்ல, யாழினி மனசுல நான் இருக்கேன்னு தெரியும், இருந்தாலும் அதை புகழ் சொல்லி கேட்குறப்போ தனி சந்தோஷம்..”என்றான் தமிழ்.

“ சூப்பர் தமிழ்..இதே மாதிரி ரெண்டு மடங்கு ஐஸ் வைச்சிட்டா போதும், யாழினி இறங்கி வந்திடுவா..”

“ஹா ஹா.. கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு.. பார்ப்போம்”என்று சிரித்த தமிழ் புகழிடம் இருந்து விடைபெற்றுவிட்டு யாழினியின் வீட்டிற்கு சென்றான்.

ந்த நேரத்தில் மோகன் வீட்டில் இருக்க மாட்டார் என்பதை அறிந்திருந்திருந்தான் தமிழ். யாழினியோடு மனம் விட்டு பேசுவதற்கு இது ஏதுவான சமயம் என்று தோணவும் தயக்கமின்றி அங்கு சென்றான். வீடு உள்பக்கமாய் பூட்டியிருக்க,யாழினை ஃபோனில் அழைத்தான் தமிழ்.

“எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்” ஸ்வர்ணலதாவின் உயிரொழும் குரலை கேட்டு யாழினிக்கு தூக்கிவாரி போட்டது. தமிழுக்காகவே அந்த பாடலை செட் செய்திருந்தாள் அவள்.

“சிடுமூஞ்சியா கால் பண்ணுறாரு? சரியில்லையே!ஹும்கும் கை தவறி பண்ணிருப்பாரு” என்று அலட்சியமாக தோளை உலுக்கிகொண்டாலும், தனது செல்ஃபோன் சிணுங்கிடும் ஒவ்வொரு நொடியுமே அவளுக்குள் உதறல் எடுத்தது.

இத்தனை நாட்களாய் அவள் மனதிற்குள் கட்டி வைத்த கோபமெனும் கோட்டை அஸ்திவாரத்தையே தகர்த்துவிட்டு சரிவதை அவளால் உணர முடிந்தது. எப்படி முடிகிறது இவனால்? தூரத்தில் இருந்துகொண்டே தனது மனதினை ஆட்டிப் படைப்பது எல்லாம் அநியாயம் தான்! இயன்ற அளவிற்கு அவனைத் திட்டித் தீர்த்தாள் யாழினி. கையில் அவளது கைப்பேசி ஓயாமல் பாடிக் கொண்டே இருந்தது.

பொறுமையை இழந்திருந்தான் தமிழ். வீட்டை சுற்றி நோட்டமிட்டவன், பால்கனியில் நின்றபடி தனது கைப்பேசியையே வெறித்தவளைப் பார்த்து முறைத்தான்.

“ எப்படி ஃபோனை எடுக்கனும்னு மறந்துட்டாளா? பால்கனியை விட்டே இறங்கி வர மாட்டுறாளே.. இவளை எப்படி கோபத்தில் இருந்து இறங்க வைப்பேனோ?” என்று புலம்பியவன், அழைப்பதை நிறுத்திவிட்டு கீழிருந்தபடியே கத்தினான்.

“ஓய்..”

“..”

“ஓய்.. இங்க பாரு.. கீழ”. அவனது குரலைக் கேட்டு திடுக்கிட்டு இங்கும் அங்கும் பார்த்தவள் அவனை ஒருவழியாய் கண்டுக்கொண்டாள்.

“ஃபோன் பண்ணா எடுக்கத் தெரியாதா?” உச்சாஸ்தாயியில் கத்தி கேட்டான் தமிழ். அவன் குரலை செவிகள் ஏற்கும்முன்னரே யாழினியின் கண்கள் அவனைத் தழுவி இன்புற்றன.

பல நாட்களாக இருளை மட்டுமே கண்டு தவித்தது  போலவும் அவனது கார்மேக வண்ணனே தன்னுள் ஒளி கொண்டு வந்ததை போலவும் ஒருவித ப்ரம்மை தோன்றியது.

“ஏய் உன்னதாண்டீ ..கீழே வா..” ஒருமையில் ஆரம்பித்து “டீ” போட்டு அழைக்கும் நிலையில் இருந்தான் தமிழ். இன்னும் கொஞ்ச நேரத்தில் தான் காதலைச் சொல்ல அங்கு வந்ததையே அவன் மறந்துவிடுவான் போலும்.

“லூசு.. கண்ணை திறந்துட்டே கனவை காணுறத பாரு!”என்று அவன் முணுமுணுக்க யாழினியும் ரோஷமாய் பதிலளிக்க ஆரம்பித்தாள்.

“டீ ஆ? டாக்டர் சாருக்கு மரியாதை தெரியாதா?”

“ஃபோன் பண்ண எடுக்குறது இல்லை.. கதவை தட்டினா கண்டுக்கிறது இல்லை.. இப்படி வாசல்லு நின்னு கடன்காரன் மாதிரி கத்தினாலும் மதிக்கிறதில்ல.. இதுதான் உன் மரியாதையா?”. தமிழ் “கடன்காரன் மாதிரி”என்று சொன்ன விதத்தில் யாழினிக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவன் முன்னிலையில் சிரித்து தொலைத்து அதற்கும் வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டுமா? என்று எண்ணியவள் பேச்சை மாற்றினாள்.

“அப்பா வீட்டில் இல்லையே..என்ன விஷயம்  டாக்டர் சார்?”

“என்ன நீ , இப்படி வாசலில் நிக்க வெச்சு மஹாராணி மாதிரி மேல நின்னுகிட்டு கேள்வி கேட்குற? கீழ வா!”

“அதான் சொன்னேன்ல அப்பா வீட்டில் இல்லைன்னு..”

“நான் அவர்கிட்ட பேச வரல.. உன்கிட்ட தான் பேசனும்..”

“ என்ன திடீர்னு?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.