(Reading time: 16 - 32 minutes)

“ நானும் பார்த்துட்டே இருக்கேன்.. நீ அங்கயே நின்னு பேசிட்டு இருக்கேன்.. மூணு எண்ணுறதுகுள்ள கீழ வா..இல்லன்னா நான் கிளம்பிடுவேன்..” ருத்ரமூர்த்தியாக அவளை மிரட்ட யாழினிக்கோ தன் தந்தையின் ஞாபகம் தான் வந்தது. (பின்ன, ஒன்னு ரெண்டு மூணு சொல்லி மிரட்டுனா?)

தமிழ் மூன்று எண்ணுவதற்குள் அவன் முன்னே நின்றிருந்தாள் யாழினி.

“ உள்ளே வாங்க டாக்டர்..”

“இல்ல ..மாமா இல்லாமல் நான் உள்ள வரல..நீ என்கூட கொஞ்சம் வெளில வா..”

“என்ன விஷயம்?”

“நீ எத்தனை தடவை கேட்டாலும் நான் இங்க நின்னுட்டு பதில் சொல்ல மாட்டேன்.. அதே மாதிரி நீ இப்போ வர்ற வரைக்கும் இங்கிருந்து போகவும் மாட்டேன்..” அமர்த்தலாக கைக்கட்டி நின்றபடி சொன்னான் தமிழ்.

“ப்பா..எவ்வளோ பிடிவாதம்..உச்சி முதல் பாதம் வரைக்கும் திமிர்..”

“ஆமா .. இவ பெரிய டாக்டரு கண்ணாலே ஸ்கேன் பண்ணுறா!”

“ஆமா, இவரை ஸ்கேன் பண்ணுறதுதான் எனக்கு வேலை!” என்று அவள் சலித்தக் கொள்ள நொடிபொழுதில் இருவருமே சிரித்து விட்டிருந்தனர்.

இரு கைகளையும் உயர்த்தி சரண்டர் ஆகிவிடும் தோரணை காட்டினான் தமிழ்.

“அம்மா..தாயே .. போதும்..கொஞ்சம்  கூப்பிடுற இடத்துக்கு வரியா?” என்றான் கெஞ்சலாய்.

“ஹா ஹா இதை நீங்க முன்னாடியே பண்ணி இருக்கலாம்..”என்று சிரித்தவாரு அவனைப் பின் தொடர்ந்தாள் யாழினி.

பிருந்தாவனம் இல்லம்! தமிழின் காரில் ஏறியதிலிருந்தே எங்கு செல்கிறோமென கேட்கவே இல்லை யாழினி. பல நாட்களுக்குப் பின் தனக்கே உரிய இடத்தில்  சேர்ந்து விட்டது போல மகிழ்ச்சி அவளுக்குள். அதனால் தமிழின் அருகாமையை மௌனமாக ரசிக்க ஆரம்பித்தாள்.

தமிழுக்குமே அந்த மௌனம் பிடித்திருந்தது. “ இவ வாயை திறக்காமல் இருந்தால் ரொம்ப அழகாய் இருக்கா , நதி மாதிரி” என்று கிண்டலுடன் மனதிற்குள் அவளை ரசித்தான் தமிழ். பாதி வழியிலேயே தமிழின் கார் பிருந்தாவனத்திற்கு செல்கிறது என்பதை கண்டுகொண்டாள் யாழினி. அதை தனது தந்தைக்கும் ஃபோன் செய்து சொல்லியிருந்தாள்.

“ஹா ஹா.. அங்க போகாமல் உன்னை கடத்திட்டு போயிட்டா என்ன பண்ணுவ?” அவனே பேச்சை ஆரம்பிக்க,

“கடத்துற மூஞ்சிய பாரு!” என்று சலிப்பாகவும் சத்தமாகவும் சொன்னாள் யாழினி. அதன்பின் இருவரும் வழக்காடிக் கொண்டே பிருந்தாவனத்தை அடைந்தனர்.

தமிழை மிடுக்காய் முறைத்துவிட்டு இல்லத்திற்குள் நுழைந்தாள் யாழினி.

“ஹாய் யாமி அக்கா..”

“எங்க போன?”

“ஆளே காணோம்?”

“பாட்டு பாடு அக்கா” என சிறுவர்கள் புற்றீசல் போல அவளை சூழ்ந்து கொண்டு பேசினார்கள்.

அனைவரின் கேள்விகளுக்கும் செல்லம் கொஞ்சி பதில் பேசிவிட்டு ஒரு வழியாய் அவர்களை சமாதானப்படுத்தினாள் யாழினி.

“எனை என்ன செய்தாய்? வேங்குழலே?

எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே?

நாளும் சுக நாதம் அனல் மெழுகாய்

இந்த இளமனம் இளகிடவே

எனை என்ன செய்தாய் வேங்குழலே?”  உயிரொழுகும் குரலில் பாடி தனது விரக தாபத்தை வெளிப்படுத்தினாள் யாழினி. மற்றவர்களுக்கு அவளது கீதம் வெறும் பாடல்தான்! ஆனால் தமிழ்? சம்பந்தப்பட்டவனுத்தானே தெரியும்?

நேசிக்கப்படுவதின் முழு சுகத்தை உணர்ந்தான் தமிழ். அவன் விழிகள் காதலுடன் சேர்த்து கண்ணீரையும் உதிர்த்தன. அவளுக்காக வாங்கி வைத்திருந்த பூங்கொத்தை எடுத்துக் கொண்டு அவன் நெருங்கும் நேரத்தில் யாழினி தனியாய் நின்று கொண்டிருந்தாள்.

“யாழினி..” முதன்முறையாக அவளை இத்தனை மிருதுவாக அழைக்கிறான் அவன்.

“ம்ம்?”

“உன்கிட்ட ஒரு விஷயம் சொ..”

“ஒன்னும் சொல்ல வேணாம்.. தெரியும் என்ன சொல்லுவிங்கன்னு..கண்ணுலயே பாத்துட்டேன்.. இப்போத்தான் சொல்லனும்னு தோணிச்சுல”

“ஹேய் அப்படி இல்லை!”

“அப்படித்தான்.. எதையும் ஈசியா கெடைச்சா அதை மதிக்கிறதே இல்லைல? கஷ்டப்படுத்தி.. கஷ்டப்பட்டு..அப்போத்தான் எல்லாம் உறைக்குமா?”

“என்ன நீ என்னை பேச விட மாட்டுற?”

“நீங்க எப்போத்தான் பேசுவீங்கன்னு எவ்வளவு காத்திருந்தேன் தெரியுமா?”என்று யாழினி உடைய அவளை பலவந்தமாக தன் பக்கமாய் இழுத்தான் தமிழ். முகத்தில் ரௌத்திரம் கொப்பளிக்க

“என்னடீ?”என்றவன் ஓங்கிய கரங்களினால் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவனது திடீர் அணைப்பில் நிலைக்குழைந்தாலும் அவனோடு இழைந்தே கொண்டாள் யாழினி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.