(Reading time: 25 - 49 minutes)

24. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Tamilukku pugazh endru per

யாழினி கண்ணுறங்கும்வரை அவள் அருகில் சாய்ந்தமர்ந்து கதைப் பேசிக் கொண்டிருந்தான்.ஆழ்ந்த உறக்கத்தில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தவளை காணக் காண காதலையும் தாண்டிய உணர்வொன்று அவனுக்கு பொங்கியது. என்றோ தன் அன்னையுடன் பேசிய விஷயமொன்று மனதில் நின்றது.

“ம்மா.. என்னோட சீனியர் மாறனுக்கு பெண்குழந்தை பிறந்திருக்குனு பார்க்க போனேன்மா.. அவங்க குழந்தை தூங்குறப்போ, ஒரு புடவையை குழந்தை பக்கத்துல வெச்சிருந்தாங்க..” மனோன்மணியின் மடியில் படுத்துக் கொண்டு கூறினான் தமிழ். அவனது அடர் கேசத்தை பாசமாய் வருடிக் கொண்டே பேசினார் அவர்.

“அது அந்த குழந்தையோட அம்மாவோடதாக இருக்கும் கண்ணா. பொதுவா குழந்தைகளுக்கு பாதுகாப்பாக ஒரு கதகதப்பு கொடுக்க அப்படி பண்ணுவாங்க, சேலையில் அம்மா வாசத்தை உணருற குழந்தை நிம்மதியா தூங்கும்”

“ஆனா இது எப்படிம்மா சாத்தியம்.. பேபிக்கு எப்படி தெரியும்?”

“உனக்கு தெரிஞ்சதே?” மகனின் நெற்றியில் முத்தமிட்டபடி சொன்னார் மனோன்மணி.

“அம்மா?” ஆச்சர்யமாக கேட்டான்,

“ஆமா கண்ணா, நீயும் குழந்தையாக இருந்தப்போ அப்படித்தான் இருந்த” தாய்மையின் பெருமிதத்தை வெளிப்படுத்தியது அவரின் முகம்!

யாழினியும் இப்போதும் குழந்தையைப் போலத்தான் இருக்கிறாள். அவளுக்கு தமிழின் அருகாமை பெரும் நிம்மதியை தந்தது. அவனுக்கு இரவு நேரத்தில் பணி இருக்கும்போதெல்லாம், அவனது சட்டைய அணைத்துக் கொண்டுத்தான் உறங்குவாள் யாழினி.

வள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமொன்றை பதித்துவிட்டு ஃபோனை எடுத்தான் தமிழ். என்னவோ அன்று எதைப்பற்றிய சிந்தயாக இருந்தாலுமே, அதில் அவனது அன்னையின் நினைவுகளும் கலந்தே கமழ்ந்து கொண்டிருந்தது. மேலும் தனது புதிய திட்டத்திற்கு அவரின் பங்கும் இருக்கிறதே! புகழிடம் பேசுவதற்கு முன் தன் தாயிடம் பேசிவிடுவதுதான் சரியென்று தோன்றியது தமிழுக்கு. “உறங்கியிருப்பாரா அம்மா?”என்ற யோசனையுடனேயே அவரின் எண்ணை அழைத்தான்.

இரண்டு மூன்று முறை முயற்சித்துவிட்டு அவரிடம் இருந்து பதிலில்லையே என்று சிந்திக்கும் நேரமே தமிழை அழைத்திருந்தார் மனோன்மணி.

“அம்மா..”

“கண்ணா.. சொல்லுப்பா?”

“அம்மா, தூங்கிட்டீங்களா?”

“இல்லப்பா ரூமில் இருந்தேன்”

“ஓ.. இப்போ எங்க இருக்கீங்க?”

“ஹாலுக்கு வந்துட்டேன்பா”

“..”

“என்னாச்சுப்பா?”

“ஏன்மா என்கிட்ட ஃபோன்ல பேசுறது கூட தப்பாமா? மறைஞ்சிருந்து தான் பேசனுமா?”

“..”

“இன்னும் எத்தனை நாளுக்குமா நீங்களும் அப்பாவும் ஒரு பக்கம்,நானும் யாழினியும் ஒரு பக்கம்னு இருக்க போறோம்?”

“கண்ணா..”

“நான் அங்க இருந்து கிளம்பும்போது நீங்க என்னம்மா சொன்னீங்க? தமிழ் நீ எங்களுக்கு ஒரே பையன்பா. என்னத்தான் உன் அப்பா பக்கம் நியாயம் இல்லன்னாலும் நீ பிரிஞ்சு போற அப்படிங்குறது அவருக்குமே பெரிய அதிர்ச்சியா இருக்கும். இந்த நேரத்துல நான் அவரோட இருக்கனும். நானே அவரை கொஞ்சம் கொஞ்சமா மாத்துறேன். நீ கவலைப்படாத.. இப்படித்தானேம்மா சொன்னீங்க?”

“..”

“மாறினாரா அப்பா? எனக்கென்னமோ அப்பா பேச்சுக்கு நீங்கத்தான் மாறிப்போன மாதிரி தெரியுறீங்க!”

“தமிழ்!”

“ மன்னிச்சிடுங்கம்மா.. எனக்கு அப்படித்தான் தோணுது.அவருக்கும் உங்களுக்கும் பழையபடி மகனாக மாறனும்னா நான் என்னம்மா பண்ணனும்? அவரு சொன்ன மாதிரி யாழினியை விவாகரத்து பண்ணிடவா?”

“தமிழ்!”

“அப்போ சொல்லுற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கவா?”

“தமிழ்! போதும்டா.. ஏன்டா இப்படி பேசுற? யாழினிதான் என் மருமக. அதுல எந்தவித மாற்றமும் இல்லை. நான் உங்க அப்பாகிட்ட பேசாமல் இருக்கேன்னா நினைக்குற நீ? உங்களை நினைச்சு நான் அழாத நாளே இல்லடா கண்ணா..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.