(Reading time: 25 - 49 minutes)

ன்று! (3 வருடங்களுக்கு முன்பு)

புகழ் அந்த அறையில் இருந்து வெளியேறும்வரை மனதின் ஓர் ஓரத்தில் நம்பிக்கையை வளர்த்திருந்தாள் யாழினி,

“பயந்துட்டியா லூசு? எல்லாமே சும்மா நாடகம் தான்!”என்று அவன் சொல்வான் என்று நினைத்து அமர்ந்திருக்க,அவனின் பைக் சத்தம் அவளின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கியது.

மௌனம் மட்டுமே மிச்சமிருந்த அந்த வீடு சூன்யமாக தெரிந்தது யாழினிக்கு. ஏதோ ஒன்று அவளை அழுத்தி வைத்தது போல ப்ரம்மையில் இருந்தாள் யாழினி. கண்களை இமைக்க கூட மறந்து போயிருந்தாளோ அதை அவளே. பலமணிநேரங்கள் அப்படியேதான் அமர்ந்திருந்தாள் அவள். இடையில் தமிழ் ஓரிரு முறை அவளை ஃபோனில் அழைத்திருந்தான். அந்த சத்தம் கூட அவளை மீட்கவில்லை.

அவளின் எண்ண அலைகள் கலங்குவதை தமிழும் உணர்ந்திருக்க வேண்டும்! ஏதோ சரியில்லை என்று நினைத்தவன் புகழின் செல்ஃபோன் ஸ்விச்ட் ஆஃபில் இருக்கவும் யாழினியின் வீட்டிற்கே சென்றான்.

“புகழ்.. யாழினி.. புகழ்.. யாழினி” என்று குரல் கொடுத்தபடியே வந்தவன் யாழினி அமர்ந்திருந்த நிலையை பார்த்து பயந்தே போயிருந்தான். மூன்றே எட்டில் அவளின் கட்டிலை அடைந்தவன்,

“யாழினி” என்று அழைக்க அவளிடம் அசைவே இல்லை. இன்னும் கொஞ்சம் உரக்க, “யாழினி”என்றவன் அழைக்க, அப்போதுதான் அவள் விழிகளில் இருந்து முதல் துளி கண்ணீர் சிந்தியது. அவளை தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டான் தமிழ். அவனது அணைப்பினால் அவளின் விழிகள் போட்டுவைத்திருந்த அணைகள் உடைந்தன. எதையோ பெரிதாக இழந்துவிட்டது போல அதிர வைக்கும் கதறல் அது! இன்றும் தமிழால் மறக்கமுடியாத தவிப்பது.

“வலிக்கிது தமிழ்..என்னால முடியலயே..அவன் போயிட்டானே..நான் என்ன பண்ணுவேன் தமிழ்.. எல்லாம் போச்சா? அம்மா..அப்பா..” என்று நிலைகொள்ளாமல் வெளிவந்தன அவளின் வார்த்தைகள்.

“ஒன்னுமில்லடா..ஒன்னுமில்ல.. நான் இருக்கேன்ல.. எல்லாம் சரி ஆகிடும்..நீ எதுவும் யோசிக்காத.. இங்கபாரு.. உன் தமிழ் உன்கூடவே இருக்கேன் பாரு”என்று அவன் சமாதானம் செய்திட அவனுக்குள் இன்னும் புதைந்து கொண்டாள் யாழினி. அவள் அழுது தீர்க்கட்டும் என்று நினைத்து அமைதி காத்தான் தமிழ்.

பல நிமிடங்களுக்கு பின் யாழினியின் கேவல் குறைந்தது. தமிழைவிட்டு விலகியவளின் கண்கள் மீண்டும் புகழின் அறைக்கும், தன் அறைக்கும் இடையே இருந்த வாசலை வெறித்தது. தரையில் சிதறி கிடந்த திருமண பத்திரிக்கை எல்லாம் சற்றுமுன் நடந்தது கனவல்ல, நிஜமேதான் என்று உணர்த்தின. அந்த அறையை பார்க்க விரும்பாதவளாய், தன் பக்கம் இருந்த கதவை பூட்டினாள். முகத்தை கழுவிவிட்டு தமிழின் எதிரில் அமர்ந்தாள்.

அழுது வீங்கியிருந்த முகமும், சுக்குநூறாகிப்போன அவளின் தோற்றமும் தமிழுக்கு வேதனையைத் தந்தது.

“தமிழ்..” விரக்தி நிறைந்த குரல் அது! இதுவரை கோடிமுறை அவனை பெயர் சொல்லி அழைத்திருக்கிறாள் யாழினி.அப்போதெல்லாம் அவனுக்கும் எழும் பரவசமானது இன்று காணாமல் போயிருந்தது.

“சொல்லுமா”

“ இந்த கல்யாணம் வேணாம் தமிழ்!” விரல்களை ஆராய்ந்தபடி சொன்னாள் யாழினி. அவள் தாடையை பற்றி இழுத்து ஏன் என்று கேட்க நினைத்தான் தமிழ். ஆனால் முடியவில்லை! இதுதான் காதலோ? தாங்கள் இருவரும் இணைவதை விட, யாழினியின் துன்பம்தான் அவனுக்கு முதன்மையாக தெரிந்தது. இதுவும் காதலின் லீலையோ?

“சரி..”

“என்ன?” என்பது போல அவனை நிமிர்ந்து பார்த்தாள் யாழினி.

“சரிடா..”

“உங்களுக்கு கோபம் வரலயா? சா…சாரி தமிழ்”என்று அவள் மீண்டும் உடையபோக,

“அட,நீ கல்யாணம் வேணாம்னு தானே சொன்ன? நான் வேணாம்னு நீ சொல்லலையே ?”என்று வினவினான் தமிழ். அத்தனை துயரிலும் யாழினிக்கு கிடைத்த சிறு துளி சந்தோஷம் அது! தமிழின் காதலை பெறாதவரை யாழினி பல நாள் இரவு அவனின் அன்பிற்காக ஏங்கி அழுதிருக்கிறாள்.

“ஏன் என் காதல் தமிழுக்கு புரியல? அது எப்பவுமே புரியாதா? என்னை தமிழ் புரிஞ்சுக்கவே மாட்டாரா?.இப்படி பல நாட்கள் ஏங்கி இருக்கிறாள். அந்த கண்ணீருக்கெல்லாம்கிடைத்த பலன் போல இத்தனை இக்கட்டான சூழலில் அவன் தன்னை புரிந்து கொண்டது அவளுக்கு தெம்பை கொடுத்தது. அவன் மடியில் உரிமையாக படுத்துக் கொண்டாள் யாழினி.

“உங்களை ரொம்ப கஷ்டப்படுத்துறேனா தமிழ்?”. இம்முறை “தமிழ்” என்ற அவள் உரைத்ததில் ஜீவன் இருந்தது. அதை உணர்ந்தவன், அவள் கையைப் பற்றி மென்மையாக முத்தமிட்டான்.

“அதெல்லாம் இல்லை. படிச்சு முடிச்சதுமே நீ கல்யாணம் பண்ணிக்கிறதுல தனிப்பட்ட முறையில் எனக்கு இஷ்டம் இல்லைடா. எனக்கும் வேலையில் கொஞ்சம் கவனம் செலுத்தனும்போல இருக்கு., சோ இப்போ கல்யாணம் வேணாம். நீ சொல்லும்போது கல்யாணம் பண்ணிப்போம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.