(Reading time: 25 - 49 minutes)

“அந்த கண்ணீர் அப்பாவை கரைக்காதும்மா. இந்நேரம் அது அவருக்கு பழகியே போயிருக்கும். எப்பவுமே என்னை நினைச்சு கண்ணீர் விடுற அம்மா எனக்கு வேணாம்மா. குஞ்சுங்களுக்கு ஒரு ஆபத்துன்னா கொத்துறதுக்கு தயாரா இருக்குற கோழி மாதிரி, தைரியமான அம்மாத்தான் வேணும் எனக்கு..” தமிழின் குரலில் இருந்த தீர்க்கமும் கவலையும் மனோன்மணியை அசைத்தது. ஏற்கனவே மகனுக்கும்  கணவனுக்கும் இடையில் மனஸ்தாபங்கள் நிலவியுள்ள வேளையில் தானும் எதிராக நின்று அவரின் வன்மத்திற்கு தீ மூட்டிட வேண்டாமென்று தான் நினைத்து பொறுத்து போனார் மனோன்மணி.

ஒரு மாதமா? இரண்டு மாதமா? மூன்று வருடங்கள்! கணவரின் மனதினை தன்மையான முறையில் மாற்ற முனைந்தார். நிகழ்ந்ததா? இல்லையே! மகன் சொல்லுவதை போல அதிருப்தியை நேரடியாக காட்டவேண்டிய நேரம் தான் இது!

“ நீ சொல்லுறதும் சரிதான் பா.. இப்படியே போனா கண்டிப்பா உங்கப்பா வழிக்கு வர மாட்டாரு? சொல்லு என்ன பண்ணலாம். நான் நாளைக்கே முறையா வந்து உன்னையும்  என் மருமகளயும் கூட்டிட்டு போகவா?” பட்டென கேட்டார் மனோன்மணி. அத்தனை நேரம் மனதில் வியாபித்திருந்த கசப்புணர்வு, தனது அன்னை “ என் மருமக”என்று சொன்னதில் காணாமல் போயிருந்ததை நன்கு உணர்ந்தார்.

“இல்லம்மா.. நான் சொன்னது சொன்னது தான் .. அப்பாவோட சம்மததோட யாழினி கழுத்துல தாலிய கட்டிட்டுதான் நம்ம வீட்டுக்கு அவளை கூட்டிட்டு வருவேன். இது நான் யாழினியின் காதலுக்கு தர வேண்டிய மரியாதையும் கூட”

“நான் என்ன பண்ணனும்னு நீயே சொல்லு கண்ணா.”

“அம்மா எனக்கு அந்த வீட்டுல இன்னும் உரிமை இருக்காமா?”

“இதென்னடா கேள்வி. உனக்கில்லாத உரிமை யாருக்கு இருக்கு?”

“அப்போ என் சம்பந்தபட்ட எல்லாத்துக்கும் அந்த வீட்டுல உரிமை இருக்கு தானே?”

“நீ முதல்ல அந்த வீடு அந்த வீடுன்னு சொல்லாமல் நம்ம வீடுன்னு சொல்லு தமிழ்”கண்டிப்புடன் சொன்னார் மனோன்மணி.

“ஹா ஹா அப்பப்போ நீங்க ஒரு டீச்சர்னு ப்ரூவ் பண்ணுறீங்கம்மா.. சரி நான் சொல்லுறதை கவனமா கேளுங்க!”என்றவன், தன் திட்டத்தைக் கூறினான்.

“சரிப்பா.. அப்போ நாளைக்கு நாம பார்ப்போம்..”

“சரிம்மா லேட் ஆச்சு.. போய் தூங்குங்க.”என்று ஃபோனை வைத்தான்.

படுக்கை அறையில் இருந்து மனோன்மணி ஹாலுக்கு சென்றதுமே அழைத்தவன் தமிழ்தான் என்று புரிந்து கொண்டார் சுதாகரன். கொஞ்ச நேரத்தில் மனைவி திரும்பி வந்து விட்டது அவரை பிலுபிலுவென பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தவர், மனோன்மணி ரொம்ப நேரம் ஆகியும் வராமல் இருப்பதைக் கண்டு அவரைத் தேடி சென்றார்.

“என்ன போன் பேசி முடிச்சாச்சா..?”

“ம்ம் ஆமா.. நீங்க இன்னுமா தூங்கல?”

“ஏன் தூங்கிட்டா, உன் பையன் கூட பேசிட்டே இருக்கலாம் பார்த்தியா?”

“ஓ..அவன் எனக்கு மட்டும்தான் பையனா?”

“..”

“இருந்துட்டு போகட்டும்.. எனக்கு தூக்கம் வருது.. சும்மா மொறைச்சு மொறைச்சு பார்த்து பயமுறுத்தாதிங்க”

“அப்படியே நீ பயந்துட்டாலும்” என்று மனோன்மணிக்கு கேட்கும்படி அவர் முணுமுணுக்க, அவரோ அதை சற்றும் கவனிக்காதவர் போல நடந்து சென்றார்.

வாங்க சார்.. வாங்க.. மஹாராணியை நித்ராதேவியின் கையில் ஒப்படைச்சாச்சா?” என்று நக்கலாக கேட்டான் புகழ்.

“என்னமோ நீ காத்திருந்தே நொந்து நூடல்ஸ் ஆகிட்ட மாதிரி கேட்குற? இவ்வளவு நேரமா ஆயிஷா கூட தானே பேசிட்டு இருந்த?”

“ஹான்.. எப்படி தெரியும்? என்னோட பெட்ரூம்ல கேமரா ஏதும் செட் பண்ணி வெச்சுருக்கீங்களா?”

“ஆமா இவரு ஷாருக் கான்.. இவரை கவனிக்க கேமரா வேற!”என்று சிரித்த தமிழ், “ நம்ம எல்லாருக்கும் ஒரே நோய்தான்.. காதல்!” என்றான். கன்னத்தில் கை வைக்காத குறையாக தன்னெதிரில் அமர்ந்திருந்தவனை பார்த்தான் புகழ். காலம் ஒரு மனிதனை மாற்றலாம்தான்.. ஆனால் இப்படியே பாரபட்சமின்றி தலைக்கீழாக மாற்ற வேண்டும்? தன்னையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்த புகழை சொடுக்கு போட்டு நடப்புக்குகொண்டு வந்தான் தமிழ்.

“அடப்பாவி..என் மூஞ்சி என்ன ஆயிஷாவை மாதிரியா இருக்கு? இப்படி வெச்ச கண்ணு வாங்காம பார்க்குற?”

“ஹீ ஹீ.. நெனப்புத்தான் உங்களுக்கு. என் ஆயிஷா அழகுக்கு யாரும் வர முடியாது.”

“அப்படியா? நாளைக்கு காலையிலேயே இதை யாழினிகிட்ட சொல்லுறேன்”

“அய்யோ ஏன் பாஸ் இந்த கொலைவெறி உங்களுக்கு?”

“அந்த பயம் இருக்கனும் தம்பி..” என்ற தமிழ் சில நொடிகள் புன்னகைத்தான். அடுத்து சில நொடிகள் ஏதோ சிந்தனையில் இருந்தான். பிறகு கண்களை இறுக மூடி தன்னைத் தானே ஊக்கப்படுத்திக் கொண்டு புகழிடம் பேசினான்.

“புகழ்.. நீ நாளைக்கு இங்க இருந்து கிளம்பறதுக்கு முன்னாடி, நான் உன்கிட்ட நடந்த்தை எல்லாம் சொல்லனும்னு நினைக்கிறேன்” என்றவன் நடந்தவற்றை விவரித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.