(Reading time: 25 - 49 minutes)

“வாடா வா.. கல்யாணம் வேணாம்னு இப்போதுதான் உனக்கு தோணிச்சா? கல்யாண ஏற்பாட்டை ஒரு பக்கம் ஆரம்பிச்சு, பத்திரிக்கையையும் அடிச்சு சொந்தகாரவங்களுக்கெல்லாம் கொடுத்து முடிக்கிறப்போ நீ கூலா வேணாம்னு சொன்னா நான் தலையாட்டனுமா?காலையிலேயே யாழினி உன் அம்மாவுக்கு ஃபோன் பண்ணி மன்னிப்பு கேட்டு பேசிருக்கா..ஆனா நீ ஒன்னுமே நடக்காத மாதிரி பேசுற?என்னடா இப்போவே பொய் எல்லாம் சொல்ல ஆரம்பிக்குறியா?”உருமும் குரலில் கேட்டார் சுதாகரன். திருமணம் வேண்டாம் என்ற பேச்சே அவருக்கு பெரும் தலைவலியை கொடுக்க, உண்மையான காரணத்தை மறைத்து தன் மகன் யாழினிக்காக பேசியது இன்னும் கோபத்தையே தூண்டியது.

“அந்த பொண்ணு வேணாம் தமிழ். சொல்லி வெச்ச தேதியில் கல்யாணம் நடக்கனும். பொண்ணுதான் அவ இல்லை!”

“என்னங்க.. என்ன வார்த்தை பேசுறிங்க?”

“என் குடும்ப கௌரவம் எனக்கு முக்கியம் மனோ”

“அதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவிங்களா? இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்”

“இனிமேலயும் அம்மா பையன் ரெண்டு பேரோட பேச்சுக்கும் நான் தலையாட்ட முடியாது. என் ப்ரண்டுக்கு நான் ஃபோன் போட்டு பேசுறேன். கல்யாணம் நடக்கும்”என்று பிடிவாதமாக சொன்னார் அவர். கோபத்தில் கண்கள் சிவக்க நின்றிருந்தான் தமிழ்.

“யார்ட்ட வேணும்னாலும் பேசுங்கப்பா.. தாலியை எடுத்த கட்டவேண்டியது நான்தானே? என்னை மீறி என்னத்தான் நடக்குதுன்னு பார்த்திடுறேன்”என்று கோபமாய் மொழிந்துவிட்டு அதே வேகத்தில் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான் தமிழ், என்னத்தான் தன் தந்தையிடம் வீரவசனம் பேசி இருந்தாலும், அவனுக்கு உள்ளுர ஒரு நம்பிக்கை இருந்தது, தன் தந்தை அப்படி எதுவும் செய்ய மாட்டார் என! முடிந்த அளவிற்கு அவரை நேருக்கு நேராக சந்தித்து வாதிடுவதை தவிர்க்க நினைத்தான் தமிழ்.

இன்னொருபக்கம், யாழினியை தனிமைப் படுத்தாமல் அவளுக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருந்தான்.

“பிருந்தாவனம் இல்லத்துல கிட்ஸ் எல்லாருக்கும் மெடிகல் செக் அப் பண்ணனும் கூடவே இரு”என்று அழைத்துக் கொண்டெ சென்றான். அவளுக்கே தெரியும் தன்னை மாற்றத்தான் தமிழ் முயற்சிக்கிறான் என. அவனது முயற்சிக்கு முடிந்த அளவு ஒத்துழைக்க நினைத்தாள் யாழினி.

னால் நட்பின் பிரிவை கடப்பது சுலபமா என்ன? இதிகாசங்களை தொடங்கி இன்றைய வாழ்வியல் வரை நட்பில்லாமல் நண்பனின் துணை இல்லாமல் வாழ்ந்தவன் உண்டா? ஸ்ரீராமன் அனுமனையும், ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனையும் தனது மித்ரனாக பாவித்ததின் பொருள் என்ன? அதீத பக்தியும், அன்பும் நட்பிற்கு இணையானது. பக்தன் என்று சரணம் படிபவன்  மித்ரனாக நெஞ்சில் நிற்கிறான்.

காலத்தின் மாற்றத்திற்கேற்ப நட்பின் பரிமாணங்கள் மாறித்தான் போகிறது, சில இடங்களில் கலங்கத்தை சுமந்தும் இருக்கிறது, சில சிற்றின்பங்களுக்கு கண் துடைப்பாகி பாவம் சுமக்கிறது, எனினும் உண்மையான நட்பானது தனக்கான இடத்தை அடைந்தே தீரும். இணைய முடியாத பிளவொன்று உருவாகினாலும், நட்பு மாறாமல் தான் இருக்கும்!

நண்பன் துரோகியாய் மாறினாலும் அவனுக்கு தீங்கு நடந்திட கூடாது என்று உள்ளூர எண்ணும் உள்ளங்கள்!

நண்பனோ,தோழியோ திருமணத்திற்கு பின் நட்பினை தொடர முடியாமல் போனாலும் அவர்களை கடுகளவும் மறக்காத உள்ளங்கள்!

எத்தனை பெரிய சண்டை வந்தாலும் பிறரிடம் நண்பனை விட்டுகொடுத்து பேசாமல் மனஸ்தாபங்களை மறைக்கும் உள்ளங்கள்!

இப்படி பல உள்ளங்களின் சாட்சியாக நட்பெனும் உறவு கீர்த்தியடைந்து கொண்டு தானே இருக்கிறது?

அவர்களில் ஒருத்தியாகத்தான் யாழினியும் வளம் வந்தாள். புகழின் நட்த்தையினால் ஏற்பட்ட கோபம் தனியவில்லை என்றாலுமே அவனை தேடாமல் இருக்க முடியவில்லை. தமிழ் அவளுக்கு கொடுத்த வாக்கிற்கு கட்டுபட்டு புகழின் பெயரைக் கூட உச்சரிக்காமல் உடனிருந்தான். யாழினிதான், புகழை தேடவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் அல்லாடிக் கொண்டிருந்தாள்.

ருத்துவமனையில் வேலையை முடித்துவிட்டு காரை எடுப்பதற்காக நடந்துகொண்டிருந்தான் தமிழ். எதிர்ச்சையாக தேதியை பார்க்கவும்  அவனுக்குள் சுரீரென வலித்தது. நாளை மறுநாள் அவர்களுக்கு திருமணம் நிகழ வேண்டியது.மீண்டும் அவன் மனதிற்குள் ஏதோபடபடப்பு.

அன்று புகழ் யாழினியை விட்டு சென்றபோது அவனுக்குள் எழுந்த அதே அசௌகரியமான மனநிலை.இந்த முறை யாழினியை இம்மியளவும் பிரிய கூடாது என்று நினைத்தான் தமிழ். அன்று தமிழிடம் கோபமாக பேசிய சுதாகரன் அவரது முடிவில் தீர்க்கமாகவே இருக்க, தற்பொழுது வீட்டிற்கு செல்லாமல் இருப்பதே நல்லது என்று நினைத்து யாழினியின் வீட்டிற்கு சென்றான்.

“மாமா..”

“வாப்பா.. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.