(Reading time: 25 - 49 minutes)

“நான் சொல்லவே இல்லைன்னா?”

“நான் காத்திருப்பேன் கண்ணம்மா”என்றான் இதமாக. மறந்தும் தமிழ் புகழின் பெயரை சொல்லாமல் பேச்சை தொடர்ந்தான்.

“அப்பா,அத்தை,மாமா என்ன சொல்லுவாங்க?”

“அவங்க நமக்காகத்தானே கல்யாணமே பண்ணி வைக்கிறாங்க? நமக்கே இப்போ வேணாம்னு தோணும்போது அவங்க என்ன சொல்லிட போறாங்க.? நான் பேசிக்கிறேன்..”

“எனக்கு.. என்னால முடியல தமிழ். நெஞ்சுக்குள்ள என்னமோ அழுத்துது. சொல்ல தெரியல எப்படினு” என்று அவன் கைகளை பிடித்துக் கொண்டாள்யாழினி.

“சரி ஆகிடும் டா. நீ கடந்து வந்த பாதையை நினைச்சு பாரு. எவ்வளவு விஷயம் கைவிட்டு போயிருக்கும்? எத்தனை தோல்விகள் வந்திருக்கும்? அதையெல்லாம் கடந்து நீ எவ்வளோ தூரம் வந்துட்டனு பாரு!”என்றான் அவன்.

“ஆனா புகழ்? அவனை அப்படி கடக்க முடியுமா? என்னை விட்டுட்டு போக அவனுக்கு எப்படி மனசு வந்துருக்கும் தமிழ்? என்னை ரொம்ப கஷ்டப்படுத்திடான்”என்றவள் சில நிமிடங்கள் அமைதியாகவே மூடியிருந்த கதவை வெறித்தாள்.

“வேணாம் தமிழ். எனக்கு புகழ் வேணாம்.. அவனோட நியாபகம் வேணாம்.. அவன் மேல காட்டின அன்பை எல்லாம் என்னால திருப்பி எடுத்துக்க முடியாது. ஆனா, அவனை என்னால வெறுக்க முடியும். யெஸ் HATE IS EASIER THAN UNLOVE SOMEONE” என்றாள்.

“இனி யாரும் அவனபத்தி என்கிட்ட பேச வேணாம்.அவனைப் பத்தி என்கிட்ட கேட்கவேண்டாம் தமிழ்”என்றாள் யாழினி. கோபத்தில் நடுங்கியவளை சமாதானப்படுத்தினான் தமிழ்.

“இனி அவனைப் பத்தி யாரும் பேச மாட்டாங்க. அதுக்கு நான் பொறுப்பு!” என்று வாக்களித்தான் தமிழ்.

றவினர்களை பார்த்துவிட்டு வீடு திரும்பிய மோகனுக்கு, மகளின் தோற்றமே அதிர்ச்சியாக இருக்க, தற்பொழுது தமிழ் திருமணம் வேண்டாம் என்று சொன்னது பேரதிர்ச்சியாக இருந்தது.

“என்ன மாப்பிள்ளை என்னென்னமோ சொல்லுறீங்க? புகழ் எங்க? அவனை நம்பித்தானே எல்லாத்தையும் விட்டுட்டு போனேன்.அவனையும் காணோம்.. என் பொண்ணு இப்படி இருக்கா..கல்யாணத்தை வேற நிறுத்த சொல்லுறீங்க..”

“மாமா நீங்க கேட்குற அதே கேள்விகளுக்கு எனக்கும்தான் பதில் தெரியனும். ஆனா பதில் புகழ் கிட்டயும் யாழினிகிட்டயும் தான் இருக்கு. ஆனால், இப்போதைக்கு யாழினிகிட்ட எதுவும் கேட்க முடியாது..”

“ஏன் முடியாது? அவ என் பொண்ணு! நான் கேட்டால் கண்டிப்பா பதில் சொல்லுவா!” என்று யாழினியின் அறைக்கு விறைந்த மோகன் நெற்றியில் ரத்தம் படிய, தரையில் மயங்கி இருந்தவளை பார்த்து பயந்தே போனார்.

“யாழினி.. யாழினி என்னம்மா ஆச்சு?” என்று அவர் குரல் கொடுக்கவும் அவ்வறைக்குள் புயலென பிரவேசித்தான் தமிழ். அவளை தூக்கி மெத்தையில் கிடத்தி மயக்கம் தெளிய வைத்தான்.

“என்னம்மா..என்ன ஆச்சு?” பதறியபடி பார்த்த மோகனை உயிரற்ற பார்வையை பார்த்து வைத்தாள் யாழினி.

“ஆங்.. ஒன்னுமில்லப்பா.. விழுந்துட்டேன்.. டேபல்ல முட்டிக்கிட்டேன் போல” என்றாள். அவள் நெற்றியில் ரத்த காயம் உறைந்தே போயிருக்க அவளை முறைத்தான் தமிழ்.

“சின்ன காயத்துக்கே மயங்கிட்டியா நீ? சாப்பிட்டியா இல்லையா? உன் ப்ரஷர் செக் பண்ணனும்”என்று பேசிக் கொண்டே அவளை கவனித்தான்.

“உங்க அம்மா போனப்போ நானும் போகனும்னு நினைச்சேன் யாழினி. ஆனா எங்களோட அழகான வாழ்க்கைக்கு அடையாளமா நீ இருந்த. நட்பு காதல் இந்த பந்தங்களில் எது பெருசு எது சின்னதுனு சொல்ல முடியாதுதான். ஆனா வாழ்க்கை துணைங்கிறது எல்லா உறவையும் உள்ளடக்கியது. அப்படி இருக்கும்போது உன் அம்மாவை பிரிஞ்சது எனக்கு எவ்வளவு பெரிய வலியாக இருந்திருக்கும்? அன்னைக்கு நான் விரக்தியில ஏதாச்சும் முடிவெடுத்திருந்தால் என்ன ஆயிருக்கும்?”

“அப்பா..”

“நீ படிச்ச பொண்ணு.. யோசிச்சு பாரு”. எப்போதுமே கண்டிப்புடன் பேசும் மோகன் தன்மையாக பேசிய விதம் யாழினியை பெரிதாகவே பாதித்தது.

இன்னொரு பக்கம் தமிழின் வீட்டில் பூகம்பமே வெடித்தது.

ப்போவே தலைபாட அடிச்சுக்கிட்டேன்..இந்த மாதிரி சின்ன பொண்ணெல்லாம் பாக்க வேண்டாம்னு. கேட்டியாடா நீ? என்னமோ இந்த ஐஸ்க்ரீம் வேணாம்னு சொல்லுற மாதிரி கல்யாணம் வேணாம்னு வந்து நிக்கிற? நீ என்ன சொன்னாலும் அதுக்கு தலை ஆட்டுனுமா?” என்று உச்சஸ்தாயீயில் கத்தினார். தங்கள் மீது தவறு இருப்பதின் காரணத்தினால் அமைதியாகவே இருந்தான் தமிழ். ஆனால் யாழினியைப் பற்றி அவர் பேச்சை எடுத்ததுமே அவனால் மௌனம் காக்க முடியாமல் போனது.

“அப்பா.. நான் கல்யாணம் வேணாம்னு சொல்லுறதுக்கு ஏன் யாழினியை குறை சொல்லுறிங்க? அண்ட் நான் ஒன்னும் அவளை வேணாம்னு சொல்லல ..இப்போதைக்கு கல்யாணம்வேணாம்னு தானே சொன்னேன்?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.