(Reading time: 21 - 41 minutes)

"இப்ப இந்த மதி என்ன பிரச்சனைய இழுத்துட்டு வந்துருக்காளோ  தெரியலையே", என்று நினைத்து கொண்டு கலைமதியை பற்றிய நினைவுகளை மனதில் ஓட்டி பார்த்தாள் காவ்யா.

இவள் கவலையை அறியாமல் பாடத்தை கவனித்து கொண்டிருந்தாள் கலைமதி.

"பிறந்த உடனே அம்மாவை இழந்தவ. குழந்தையை  வளக்க முடியாதுன்னு சொல்லி இவ பாட்டி இவ அப்பாவை  கட்டாய படுத்தி ரெண்டாவது கல்யாணம் செஞ்சு வச்சாங்க. வழக்கம் போல சித்தி கொடுமை. அவளுக்கு பிள்ளை வாங்க உடனே மதி ஒதுக்க பட்டவளா அந்த வீட்டில் ஆகிட்டா. வீட்டில யாருக்கும் வேண்டாதவளா மாறி போனா. பொறந்த உடனே  அம்மாவை முழுங்கிட்டன்னு இப்ப வரைக்கும் பேர் வாங்குறவ. இவளை காலேஜ் அன்னைக்கு முதல் நாள் தான பாத்தேன்", என்று நினைத்து  காவ்யா அந்த நாளின் நினைவுகளுக்கு போனாள்.

து திருநெல்வேலியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி.

கல்லூரி முதல் நாள் எல்லா  மாணவர்களையும், தங்கள் அம்மா அல்லது அப்பா விட வந்திருந்தனர். ஆனால் மதி மட்டும் தன்னந்தனியாக அங்கு  வந்து சேர்ந்தாள்.

தன்னிடம் வந்து கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவுக்கு வழி கேட்டவளை காவ்யாவிற்கு உடனே  பிடித்து விட்டது. அப்போது தான் இருவருக்கும் சந்திப்பு. கலைமதி நல்ல அழகு. ஒல்லியான உடல். பொம்மை போல் முகம்.  ஆனால் முகம் மட்டும் கலை இழந்து இருந்தது.

"ஏன்  இந்த பொண்ணு இப்படி  இருக்குறா?", என்று நினைத்தாள் காவ்யா.

அவ உடையை வைத்தே  தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம் கஷ்ட படுற பொண்ணு என்று.

"என்னோடே  பேர் காவ்யா. நானும் அதே டிபார்ட்மென்ட் தான். இது என்னோட அப்பா, அம்மா. உன்னோட பேர் என்ன?", என்று கேட்டாள் காவ்யா.

"என்னோட பேர் கலைமதி. வணக்கம் அப்பா,  வணக்கம் அம்மா", என்று கை குவித்தாள் மதி

"உங்க வீட்டில இருந்து யாருமே வரலயா மா?", என்று கேட்டார் காவ்யா அம்மா திலகா. 

"நீ தனியாவா வந்த?", என்று கேட்டார் சுந்தர்.

"அவங்களுக்கு கொஞ்சம் வேலை அதான்", என்று சமாளித்தாள் கலைமதி.

"வீடு எங்க மா இருக்கு?", என்று கேட்டார் திலகா.

"ஊரு தென்காசி பக்கத்துல ஒரு கிராமம். இங்க இருந்து போக ரெண்டு மணி நேரம் ஆகும். அலைச்சல் தான்னு நினைச்சு ஹாஸ்டல்ல  சேந்துட்டேன்"

"சரி மா நீங்க ரெண்டு பேரும் ஒரே கிளாஸ் தான? ஒருத்தொருக்கொருத்தர் துணையா இருந்துக்கோங்க. அப்புறம் காவ்யா நானும் அம்மாவும் கிளம்பட்டுமா? நீங்க ரெண்டு பேரும் கிளாசுக்கு போங்க", என்றார் சுந்தர்.

"சரிப்பா. அப்புறம் சாயங்காலம் நானே வீட்டுக்கு வந்துருவேன். பக்கத்துல தான? நீங்க கிளம்புங்க", என்றாள் காவ்யா.

அம்மா அப்பா கிளம்பின பிறகு இருவரும் கிளாஸ் கண்டு பிடித்து அமர்ந்தார்கள்.

இந்த மூணு வருஷமா அப்ப அப்ப அவளா சொன்னதை  வச்சு தான் காவ்யாவுக்கே கலைமதி பத்தி தெரியும்.

கலைமதியின் அப்பா சண்முகம் ஒரு விவசாயி தான். அவருடைய ரெண்டாவது மனைவி வள்ளிக்கு அதாவது மதியின் சித்திக்கு ரெண்டு பிள்ளைகள். மூத்தவள் தேன்மொழி, அம்மாவின் திமிர் அப்படியே அவளிடம் இருக்கும். அடுத்து சின்னவன் ரகு. அவனுக்கு காவ்யாவை பிடிக்கும். யாரும் இல்லை என்றால் காவ்யாவிடம் ஒட்டி கொள்வான். அவனுடைய அம்மா இருந்தால் கண்டு கொள்ள மாட்டான்.

தாத்தா, பாட்டிக்கும் கலைமதியை பிடிக்காது. வீட்டின் தரித்திரம் என்றே அவளை சொல்லுவார்கள்.

மொத்தத்தில் சாதாரண உரிமை கூட அந்த வீட்டில் அவளுக்கு மறுக்க பட்டது. தாத்தா, பாட்டியுடைய வெறுப்பு, சித்தியின் கொடுமையான சொற்கள், அப்பாவின் பாராமுகம் அனைத்தையும் பழகி கொண்டாள்.

மனதில் எழும் அணைத்து உணர்வுகளையும் அடக்க பழகி தனக்குள்ளே இறுகி போனாள் மதி. அழுகை கூட அவளை விட்டு சென்று விட்டது.

"இது தான் வாழ்க்கைன்னு தெரிஞ்ச பின்னாடி தினமும் எதுக்கு அழனும்?", என்று நினைத்து அழுவதை கூட வெறுத்தாள் கலைமதி.

நல்ல படிச்சதுனால  தான் அவளுக்கு இந்த காலேஜில் இடம் கிடைத்தது. இல்லை என்றால் இவளை யார் இன்ஜினியரிங் படிக்க வைப்பார்கள்?

ஒரு தடவை காவ்யா மதிக்கிட்ட கேட்டா "எப்படி நீ ஆறுல நாலு சப்ஜெக்ட்ல புல் மார்க் வாங்கியிருக்க?" என்று.

"அதனால் தான காவ்யா, அந்த வீட்டை  விட்டு நான் இங்க வர முடிஞ்சது. இல்லாட்டி அங்கயே இருந்து செத்துருப்பேன்"

"வீட்டை  விட்டு போறதுக்கு தான் இவ்வளவு கஷ்ட பட்டு  படிச்சியா? சரி டாக்டருக்கு அப்ளை பண்ணிருக்கலாம்ல? உன் மார்க்க்கு கிடைச்சிருக்கும்"

"அது எல்லாம்  படிக்க வைக்க மாட்டாங்க. அப்புறம்  எனக்கு இப்ப காலேஜ் பீஸ் யார் கட்டுறா தெரியுமா? எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு ஃபாதர் இருந்தாரு. அவர் ஒரு டிரஸ்ட்ல சொல்லி அங்க இருந்து நேரடியா காலேஜ்ல கட்டிருவாங்க. அப்புறம் வேற எங்க படிச்சாலும் செலவு ரொம்ப ஆகும். இது தான் பக்கத்துக்கு ஊரு அதான்"

.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.