"உன்னை பத்தி என்னவெல்லாம் கனவு கண்டேன் தெரியுமா டி மதி? இப்படி தாலி கட்டிட்டு வந்துருக்க? இப்படி மாட்டிகிட்டயே"
"ஆமா காவ்யா மாட்டிகிட்டேன் தான். மொத்தமா மாட்டிகிட்டேன். எல்லாம் போச்சு. இனி என்ன செய்யன்னே தெரியலை"
"சரி கவலை படாத. என்ன நடந்துச்சு சொல்லு?"
"அன்னைக்கு போகும் போது எப்பவும் போல தான் போனேன். ஆனா போன பிறகு தான் தெரிஞ்சது எங்க சித்தியோட அண்ணன் பையனுக்கு கல்யாணம்னு. அதனால சித்தி அப்புறம் தேன், ரகு எல்லாரும் முந்துன நாளே அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்களாம். நான் வீட்டில் தான் இருந்தேன். அப்புறம் தாத்தா பாட்டி இருந்தாங்க. எங்க அப்பா கூட காலேஜ் பத்தி உன்னை பத்தி எல்லாம் கேட்டாங்க. என் தலையை பாசமா தடவி கொடுத்தாங்க தெரியுமா? எனக்கும் சந்தோசமா இருந்தது. அப்ப தான் அடுத்த நாள் சூர்யா க்கு கல்யாணம்ன்னு அப்பா சொன்னாங்க. நாமளும் போகணும்னு சொன்னாங்க"
.....
"சரி பா நான் காலைல வரேன். அடுத்த தெரு தானேன்னு சொன்னேன் காவ்யா. இன்னைக்கே அங்க போய் என்ன செய்ய போறேன்? அது போக ஆச்சி தாத்தா வேற இங்க இருக்காங்க. அவங்களை பாத்துக்குறேன். நீங்க வேணுனா கிளம்புங்கப்பான்னு சொன்னேன்"
.....
"சரி மா ஏழு மணிக்கு முகூர்த்தம். நான் உன்னை ஆறு மணிக்கு கூட்டிட்டு போறேன். அப்படியே அப்பா அம்மாவைும் கூட்டிட்டு போகணும். நீ கதவ பூட்டிக்கோ. அவங்களுக்கு ஏதாவது செஞ்சு கொடுத்துட்டு நீயும் சாப்பிடுன்னு சொல்லிட்டு அப்பா கிளம்பி போய்ட்டாங்க"
....
"அப்பா போன பிறகு ஆச்சி, தாத்தாவுக்கு சாப்பாடு கொடுத்துட்டு, நானும் சாப்டுட்டு படுத்துட்டேன் காவ்யா. காலைல நான் கிளம்பி இருக்கும் போது அப்பா பதட்டமா வீட்டுக்கு வந்தாங்க. உன்னோட அத்தானுக்கு பாத்துருக்குற பொண்ணு, சரியா கல்யாண நேரத்துல ஓடி போய்ட்டா. உன் அத்தை அழுது புலம்புறா. இன்னும் ஊருக்கு எல்லாம் தெரியாது. உன்னை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிரலாம்னு சொந்த காரங்க எல்லாரும் பேசிகிட்டு இருக்காங்கன்னு அப்பா என்கிட்ட சொன்னாங்க காவ்யா"
"அதுக்கு நீ என்ன சொன்ன மதி?"
"அதிர்ச்சியா பாத்துட்டு நின்னேன். நீ என்ன மா சொல்றன்னு கேட்டாங்க. நான் முடியாதுப்பா. நான் எப்படி பா முடியாதுனு அடிச்சு சொன்னேன். அப்பா மட்டும் தான் இருக்காங்கன்னு நானும் தைரியமா தான் சொன்னேன். அழ கூட செஞ்சிட்டேன் ஒரு நிமிஷம். ஆனா அப்பா என் கால்ல விழுந்துட்டாங்க"
"என்ன மதி சொல்ற?"
"ஆமா காவ்யா. அப்பா உன் நல்லதுக்கு தான் மதி சொல்லுவேன். தயவு செஞ்சு அங்க உன்கிட்ட எல்லாரும் கேப்பாங்க. நீ சரின்னு சொல்லணும். இது என் மேல சத்தியம்ன்னு சொல்லிட்டாங்க. அதுக்கு மேல என்ன செய்ய சொல்ற? விதின்னு நினைச்சு அவர் கூட போனேன்"
"சரி அப்புறம் என்ன ஆச்சு?
"அங்க அப்பா கூட்டிட்டு போனாங்க. எல்லாரும் ஏதேதோ பேசுனாங்க. அந்த அத்தை என் கைய புடிச்சிட்டு கெஞ்சினாங்க. ஆனா சித்தி மட்டும் அவளுக்கு பிடிக்கலைன்னு சொன்னா விட்டுருங்க. கட்டாய படுத்தாதீங்கன்னு சொன்னாங்க. கடைசில அப்பா தான் அவ ஒத்துக்குவா. அவளுக்கு அலங்காரம் பண்ணுங்கன்னு அத்தை கிட்ட சொல்லிட்டாங்க"
"இரு இரு உங்க சித்தி வேண்டாம்ணு சொன்னாங்களா? இருக்காதே எதுக்கு அப்படி சொன்னாங்க?"
"அவங்களுக்கு என் தங்கச்சியை அந்த அத்தானுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கணும்னு எண்ணம் இருந்துருக்கும் போல? அதான் அப்படி சொல்லிட்டாங்க"
"நினைச்சேன். என்ன டா உங்க சித்தி, உனக்கு சப்போர்ட் செய்றாங்களேன்னு. சரி அடுத்து என்ன ஆச்சு?"
"அப்புறம் என்ன? கல்யாணம் முடிஞ்சது"
"மாப்பிள்ளையை தனியா பாத்து பேசி பிடிக்கலைன்னு சொல்லிருக்கலாம்ல?"
"தனியா வா? இப்ப வரைக்கும் நான் அவரை பாத்ததே இல்லை. எப்படி இருப்பாங்கன்னு கூட தெரியாது"
"என்ன டி சொல்ற?"
"ஆமா காவ்யா. அவங்களையும் கட்டாய படுத்தி தான் சம்மதிக்க வச்சிருப்பாங்க போல? தாலி கட்டிட்டு எழுந்து போய்ட்டாங்க. அப்புறம் நான் வர வரைக்கும் பாக்கலை. யாருக்கும் மனசு நிம்மதியாவே இல்லை. அதனால தான் அந்த அத்தையே நீ எப்பவும் போல காலேஜ்க்கு போ, சாயங்காலம் வீட்டுக்கு வந்துரு. அண்ணனை வர சொல்றேன் ஹாஸ்டல் காலி பண்ணன்னு அனுப்பி வச்சாங்க"