(Reading time: 12 - 23 minutes)

அன்புள்ள சித்திக்கு,

என்றைக்கும் நீங்க காட்டின பாசத்தையும், அன்பையும் என்னால் மறக்கவே முடியாது.. அதுபோல உங்க குடும்பத்துல உள்ளவங்க உங்களுக்காக என்னை ஏத்துக்கிட்டு, அதன்மூலமா அவங்க காட்டின அன்புக்கும், பரிவுக்கும் நான் ரொம்பவே கடமைப்பட்ருக்கேன்.. என்னால இனி யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது.. நீங்க சொன்னது போல நான் இன்றைக்கே லண்டனுக்கு போகிறேன்.. இனி திரும்ப வந்து உங்களுக்கு தொல்லையாக இருக்கமாட்டேன்.. நான் செஞ்ச தப்பை மன்னித்து மறந்திடுங்க.. முடிந்தால் என்னையும் சேர்த்து மறந்திடுங்க.. இதுவரைக்கும் நீங்க செய்ததற்கு நன்றி சொல்லி, உங்களை பிரித்து வைக்க விரும்பவில்லை..

                        இப்படிக்கு,

 என்றும் உங்கள் அனைவரின் நினைவுகளோடு பயணிக்கும்,

சுடரொளி.

அவளது கடிதத்தை படித்து மகிழ்வேந்தன் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தான்.. அப்போது புவியரசோ, “எனக்கு அக்கா இருக்காங்கன்னு எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? இந்த லீவ்க்கு என்னோட ப்ரண்ட்ஸ வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அக்காவை இன்ட்ரடியூஸ் செய்யனும்னு நினைச்சேன்.. இந்த முறை நானும் ட்ராயிங் காம்படிஷன்ல கலந்து பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கனும், அதை அக்காக்கிட்ட காட்டனும்னு நினைச்சேன்.. இப்போ அதெல்லாம் நடக்கப் போறதேயில்ல, அக்கா இனி எங்கக் கூட இருக்கப் போறதில்ல.. அதுக்கு காரணம் நீங்க தான்.. இனி நீங்களே கூப்ட்டா கூட நான் உங்கக் கூட வந்து கிரிக்கெட் விளையாட மாட்டேன்” என்று கண்ணீர் சிந்தியப்படியே கூறினான்.

“புவி இங்கப் பாருடா.. சுடர் லண்டனுக்கெல்லாம் போகமாட்டா.. அவளை நான் போக விடமாட்டேன்.. கண்டிப்பா உன்னோட அக்கா இங்கத் தான் இருப்பா.. நீ விருப்பப்பட்டதெல்லாம் செய்யலாம்.. உங்க அக்காவை நீ பிரியவே வேண்டாம்”

“நிஜமா தான் சொல்றிங்களா மாமா?? அக்காவை கூட்டிட்டு வந்துருவீங்களா?”

“கண்டிப்பா நான் கூட்டிட்டு வருவேன்.. நீ கவலைப்படாதே” என்றவன், அங்கிருந்து உடனே தன் அத்தையை பார்க்கச் சென்றான்.

பெண்களும் மேற்பார்வை பார்க்க வேண்டிய வேலையெல்லாம் முடித்ததால், வரவேற்பறையில் தான் இருந்தார்கள்.. மகியும் அங்கே போய் அத்தையிடம் எப்படி பேசுவது என்று யோசித்தப்படி நின்றிருந்தான்.. ஆனால் சுடர் லண்டனுக்கு செல்லப்போவது நினைவுக்கும் வந்ததும், உடனே.. “எழில் அத்தை” என்று கொஞ்சம் சத்தமாகவே கூப்பிட்டான்.

எழிலும் திரும்பிப் பார்க்க, மற்றவர்களும் திரும்பி பார்த்தனர்.. “வேற ஒன்னுமில்ல.. அத்தைக் கிட்ட ஒன்னு கேக்கனும்..” என்றதும் எழில் அவன் அருகே சென்றாள். அதன்பின் மற்றவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவர்களுக்குள் திரும்ப பேசியப்படி இருந்தனர்.. ஆனால் கலையரசி, எழிலின் கணவன் கதிரவன் மட்டும் என்னவாக இருக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டனர்.

எழிலை தோட்டத்தின் பக்கம் அழைத்துப் போனவன், யாராவது அங்கு வருகிறார்களா? என்று பார்வையிட்டப்படியே, “அத்தை சுடரை லண்டனுக்கு போகச் சொன்னீங்களா?” என்றுக் கேட்டான்.

எதற்காக கேட்கிறான் என்று புரியவில்லை என்றாலும், “அது ஏதோ கோபத்துல சொன்னேன்.. ஆமாம் எதுக்கு கேக்கற” என்றுக் கேட்டாள்.

“என்ன அத்தை? கோபத்துல கூட உங்க வாய்ல அப்படி ஒரு வார்த்தை வரலாமா? இப்போ பாருங்க, அவ லண்டனுக்கே போகப் போறாளாம்.. நம்ம வீட்டுக்கிட்ட வரைக்கும் வந்து, புவிக்கிட்ட இந்த லெட்டரை கொடுத்து அனுப்பிச்சிருக்கா..” என்று தன்னிடம் இருந்த கடிதத்தை அவளிடம் நீட்டினான்.

எழிலும் ஒருமுறை அந்த கடிதத்தை படித்து பார்த்துவிட்டு, “திரும்ப லண்டனுக்கே போகப் போறாளா?” என்று தன் வாயினுள்ளேயே முனுமுனுத்து கொண்டவள்,

“சரி லண்டனுக்கு தானே போறா.. போகட்டுமே! அவ அங்க தானே இருந்தா.. அவ போறதை பத்தி உனக்கென்ன கவலை..”

“என்ன அத்தை இப்படி பேசறீங்க..?? அவ போகட்டும்னு அமைதியா இருக்கப் போறீங்களா? அவ உங்க பொண்ணா இருந்தா இப்படி சாதாரணமா பேசுவீங்களா?” என்ற அவனது கேள்வியில் அதிர்ச்சியாக பார்த்தாள்.

அவள் பார்வையின் அர்த்தத்தை புரிந்துக் கொண்டவனாய், “அது.. நான் உங்களை சங்கடப்படுத்த சொல்லலை அத்தை.. அவ லண்டனுக்கு போறான்னு சொன்னதும் இப்படி பேசறீங்களேன்னு தான்..” என்று தயக்கத்தோடு கூறினான்.

“மகி.. சுடர் இந்தியாக்கு வரப் போறான்னு சொன்னதும், அவளோட அப்பாவே அவ வர வேண்டாம்னு சொன்னாரு.. நீ உட்பட அம்மா, அக்கா எல்லோரும் அவ இங்க வருவது சரியா இருக்காதுன்னு சொன்னீங்க.. அப்போ நான் தான் அவளுக்கு இங்க இருக்கற உரிமை இருக்குன்னு உங்கக்கிட்ட சொல்லிட்டு, அவளை வரவச்சேன்.. நான் அவளை பெத்த தாய் இல்லன்னாலும், அவளை என்னோட பொண்ணா தான் நினைக்கிறேன்.. எனக்கென்னமோ அவ லண்டனுக்கு போறதுதான் நல்லதுன்னு தோனுது.. அங்கப்போய் கொஞ்ச நாள் அவ ஆனந்தி கூட இருக்கட்டும்..”

“என்ன அத்தை இப்படி சொல்றீங்க? அவளுக்கு போன் போட்டு லண்டனுக்கு போக வேண்டாம்னு சொல்லுங்க..”

“இல்லை மகி.. சுடர் செஞ்ச விஷயத்துக்கு நானும் அவ மேல கோபப்பட்டேன் தான்.. அதுக்காக அவ லண்டனுக்கு போகனும்னு நினைக்கல.. இருந்தாலும் இப்போ அவ போறது தான் நல்லது.. அவ அங்கயே போய் நிரந்தரமா இருக்க வேண்டாம்.. கொஞ்ச நாளுக்கு இருக்கட்டும்.. உனக்கும் அருளுக்கும் கல்யாணம் முடியட்டும்.. அப்புறம் நானே அவக்கிட்ட பேசி, அவளை இங்க வர வைக்கிறேன்..”

“அதில்ல அத்தை.. நான் என்ன சொல்ல வரேன்னா..” என்றவனை அதற்கு பேச விடாமல் தடுத்தவள்,

“புரிஞ்சுக்கோ மகி.. அவ மனசுல நீதான் இருக்கன்னு உனக்கே தெரியும்.. உனக்கென்ன, இங்க இருக்க எல்லோருக்கும் தெரியும்.. இப்போ அவ இங்க இருந்தா, உனக்கும் அருளுக்கும் நடக்கற கல்யாணத்தை பார்த்து அவ மனசு கஷ்டப்படும்.. கல்யாணத்துல நடக்கும் ஒவ்வொரு சடங்குக்கும் நான் அவளை வீட்லயே விட்டுட்டு தான் வரனும்.. அப்படியே கூட்டிட்டு வந்தாலும், அம்மா, அக்கால்லாம் கோபப்படுவாங்க.. இதுவே அவ லண்டனுக்கு போனா, அது அவளுக்கு ஒரு மனமாற்றத்தை உருவாக்கும்.. அதனால அவ இப்போ லண்டனுக்கே போகட்டும்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.