(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 05 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

ருள்மொழியிடம் பேச சென்று, அப்படியே சுடரொளியிடம் அலைபேசியிலும் பேசிவிட்டு தன் அறைக்கு வந்த மகி தவிப்போடு குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தான்.. அவனுடன் இருந்த அறிவழகனுக்கு பூங்கொடி ஏதோ வேலை கொடுத்து வெளியே அனுப்பியிருந்தார். அதனால் தான் அவன் தவிப்பை வெளிப்படையாக காட்டியப்படி பதட்டத்தோடு இருந்தான்.

இரு பெண்களும் அவனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தனர்.. அருள் முன்னாடி நின்று சுடரின் கேள்விக்கு பிறகு பதில் சொல்கிறேன் என்று சொன்னாலே போதும், அருள் அதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று தெரியாது.. பெரியவர்கள் விருப்பப்படி அருளை திருமணம் செய்துக் கொள்ள ஒத்துக் கொண்டப்பின் சுடருக்கு ஏத்த பதிலையும் அவனால் கூற முடியாது. இந்த விஷயத்தை இப்படி சிக்கலாக்கிக் கொண்டவள் அவள் தானே, அதனால் அந்த கோபத்தில் தான் அவளிடம் அப்படி பேசினான். அதற்கு அவள் கெஞ்சினாளோ! இல்லை கோபத்தில் ஏதாவது பேசியிருந்தாளோ! அவனுக்கு பெரிதாக தெரிந்திருக்காது.. ஆனால் அவள், இவன் சொன்ன பதிலுக்கு உடனே அலைபேசியை அணைத்தது தான், அவனுக்கு பயத்தோடு சேர்ந்து பதட்டம் உருவாக காரணமாய் இருந்தது.. அவளைப் பற்றி தான் அவனுக்கு தெரியுமே! அந்த பதட்டத்தில் தன் அறையில் தவிப்போடு இருந்தவனுக்கு அப்போது தான் அவள் தன் வீட்டின் அருகே வந்திருப்பதாய் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. உடனே மொட்டை மாடிக்குச் சென்றான்.

மொட்டை மாடியில் நின்று அவள் எங்காவது தென்படுகிறாளா? என்று சுற்றும் முற்றும் பார்க்க, அவள் அவனது கண்ணுக்கு தெரியவே இல்லை..  அவள் சென்றுவிட்டாளா? என்று அவன் யோசித்த போது தான், புவி வீட்டு வாசலில் நின்றதும், புகழேந்தி அவனிடம் ஏதோ விசாரித்ததும், அதற்கு அவன் திரும்பி திரும்பி பார்த்ததும், மகி கண்ணில்பட்டது. உடனே அவன் கீழிறங்கி வரவும், “என்னடா.. இன்னும் நீ கிளம்பளையா? சீக்கிரம் கிளம்பு நம்ம மணி, மலர் வீட்டு ஆளுங்க வந்ததும் பங்ஷன் ஆரம்பிச்சிடும்.. புரோகிதரும் வந்துக்கிட்டே இருக்கறதா இப்போ தான் போன் பண்ணாராம்..” என்று பூங்கொடி வீட்டுக்கு வெளியே செல்ல இருந்தவனை கூப்பிட்டு பேசிக் கொண்டிருக்க,

“இந்த சட்டை பேன்ட்டை மாத்திட்டு நீங்க கொடுத்ததை போட்டா நான் ரெடி ம்மா..” என்றவன், அடுத்து அவர் சொல்ல வந்த விஷயத்தை கூட கேட்காமல், வாசலுக்கு விரைந்தான். அங்கே நின்றிருந்த அவன் தந்தையும் அதே கேள்வியை கேட்க,

“தோ ரெடியாகிடுவேன் ப்பா.. அறிவு வீட்ல இல்ல, அதான் பார்க்க வந்தேன்” என்று சமாளித்தவன், உடனே இரண்டுப்பக்கமும் பார்வையால் அலசி ஆராய்ந்தான்.. ஆனால் சுடரொளியை தான் அவனால் பார்க்க முடியவில்லை..

அவன் அறிவழகனை தான் தேடுகிறானோ என்று நினைத்த புகழேந்தி.. “உங்கம்மா தான்ப்பா அறிவுக்கு ஏதோ வேலை கொடுத்து அனுப்பிச்சிருக்கா.. இந்தப்பக்கம் தான் பைக்ல போனான்.. கொஞ்ச நேரத்துல வந்துடுவான்.. நீ போய் ரெடியாகு..” என்றவர், திரும்ப எடுத்த வந்த உணவை இறக்கி வைப்பவர்கள் மீது கவனம் செலுத்தினார்.

மீண்டும் ஒருமுறை இரண்டுப்பக்கமும் சுடர் தென்படுகிறாளா? என்று அலசி ஆராய்ந்தவன், ஒருவேளை புவியிடம் ஏதாவது சொல்லிவிட்டு சென்றிருப்பாளோ? என்று யூகித்து திரும்ப வீட்டுக்குள் சென்றான்.

வீட்டுக்குள் வந்த புவியோ, அங்கே கூட்டத்தோடு பேசிக் கொண்டிருந்த எழிலிடம் எப்படி சுடர் கொடுத்த கடிதத்தை கொடுப்பது என்று யோசித்தவன், பின் அவளை தனியாக அழைத்து கொடுக்கலாம் என்று நினைத்து எழிலின் அருகே போக நினைத்த நேரம் அவனருகில் வந்த மகி அவனது கையைப் பிடித்து தனியாக அழைத்து வந்தான். பின் அவனிடம்,

“புவி.. சுடர் இங்க வீட்டுக்கிட்ட வந்தாளா? உன்னை பார்த்து பேசினாளா?” என்று கேட்டதற்கு,

“எதுக்கு கேக்கறீங்க” என்று பதிலுக்கு கேட்டவனின் குரலில் கோபம் தெரிந்தது.

“அப்போ வந்தாளா? உன்கிட்ட என்ன பேசினா? சொல்லுடா? அவ ஏதாச்சும் சொன்னாளா?”

“எதுவா இருந்தாலும் உங்கக்கிட்ட சொல்ல மாட்டேன்.. எனக்கு உங்களை பிடிக்கவே இல்லை” என்றவன், அங்கிருந்து செல்ல முயன்றான்.. ஆனால் அவனை மகி போகவிடாமல் தடுத்தான்.

“என்னடா சொல்ற.. என்னைப் பிடிக்கலையா?”

“ஆமாம்.. உங்களை எனக்குப் பிடிக்கவே இல்லை.. உங்களால தான் அக்கா திரும்ப லண்டனுக்கே போகப் போகுது.. இனி திரும்பவே வராதாம்” என்ற செய்தியைக் கேட்டு மகி அதிர்ந்தான்.

“என்னது.. சுடர் லண்டனுக்கு போகப் போறாளா? என்னடா சொல்ற? நீ சொல்றது உண்மையா?”

“ஆமாம்.. இங்க வர்றதுக்கு முன்னாடி அம்மா, அக்காக்கிட்ட “நீ லண்டனுக்கே போய்டு.. அதான் நல்லதுன்னு சொன்னாங்க.. அதனால அக்காவும் லண்டனுக்கே போகப் போறதா முடிவுப் பண்ணிடுச்சு.. அம்மாக்கிட்ட கொடுக்க சொல்லி இந்த லெட்டரை கொடுத்துச்சு..” என்று மகியிடம் அவன் கடிதத்தை காண்பித்ததும், அதை வாங்கி மகி படிக்க ஆரம்பித்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.