(Reading time: 13 - 26 minutes)

"ஐயோ நான் உங்களை சொல்லலை. நம்ம ரெண்டு பேரும் எப்படி தனியா இருக்கன்னு தான் கேட்டேன் அத்தான். உங்களுக்கும் பயமா இருக்குமே"

"இவ என்ன என்னை சின்ன பாப்பானு நினைச்சாளா?", என்று நினைத்து கொண்டு "எனக்கு துணையா தான் நீ இருக்கியே? நீ என்னை பாத்துக்க மாட்டியா?", என்று கேட்டான்.

மண்டையை பலமாக ஆட்டினாள் மதி.

அவளை பார்த்து சிரித்து விட்டு  திரும்பி கொண்டான்.

"போயிட்டு எல்லாரும் எப்ப வருவாங்க?", என்று கேட்டாள் மதி.

"இதையாவது அவளாவே கேக்குறாளே", என்று நினைத்து கொண்டு நம்ம ரிசப்ஷன் சண்டே இருக்கே? அதுக்கு சொந்த காரங்களை மட்டும் கூப்பிட போறாங்க. ரெண்டு நாளில் வந்துருவாங்க", என்றான்.

"ஓ?"

"என்ன ஓ?"

"ஒன்னும் இல்லை", என்ற படி அமைதியாகி விட்டாள்.

"அமைதியாகிட்டா. இன்னும் பேசா மடந்தை பேசாது", என்று நினைத்து கொண்டு காரில் கவனம் செலுத்தினான் சூர்யா.

வீட்டருகே காரை நிறுத்தியதும் "போய் கேட் திறக்கவா?", என்று கேட்டாள் கலை மதி.

"அதெல்லாம் வேண்டாம். இப்ப அவங்களை விட போனுமே. அப்புறம் உள்ளே நிப்பாட்டிக்கலாம். நீ இறங்கு நான் திருப்பி வைக்கிறேன்", என்றான் சூர்யா.

"சரி", என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் மதி.

அங்கே அவன் சொன்ன படியே எல்லாரும் கிளம்பி கொண்டிருந்தார்கள்.

"வந்துட்டியா மதி மா? மதியம் மிச்சம் வைக்காம சாப்பிட்டியா?", என்று கேட்டாள் மங்களம்.

அந்த பாசத்தில் நெகிழ்ந்து போனாள் மதி. வாழ்க்கையில் பாசத்தை உணரும் முதல் தருணம்.

"சாப்பிட்டேன் அத்தை. நல்லா இருந்தது. என் பிரண்ட் டேஸ்ட்டா இருக்குன்னு முக்காவாசி அவளே சாப்பிட்டா. அவளோடதை நான் சாப்பிட்டேன்", என்று சிரித்தாள் மதி.

"நாளைக்கு இன்னும் கொஞ்சம் சேத்து வைக்கிறேன். அப்புறம் மதி மா, ரெண்டு நாள் நீ வீட்டை கவனிச்சிக்கோ. உனக்கு தான் சமைக்க தெரியுமே. ரெண்டு பேரும் புடிச்சதை செஞ்சி சாப்பிடுங்க. சூர்யா எதை கொடுத்தாலும் சாப்பிட்டுக்குவான். அத்தை ரெண்டு நாள்ல வந்துறேன் என்ன டா?"

"ஹ்ம்ம் சரிங்க அத்தை. அத்தான் இப்ப தான் சொன்னாங்க. பத்திரமா போயிட்டு வாங்க. நான் எதாவது எடுத்து வைக்கணுமா?"

"ஹ்ம்ம், மேல துணி காய போட்டுருக்கேன். அதை மட்டும் எடுத்துட்டு வா, என் பாவாடை அதுல தான் இருக்கும்"

"ஹ்ம்ம் சரி அத்தை", என்று சொல்லி விட்டு காலேஜ் பேகை அங்கு இருந்த சோபாவில் வைத்து விட்டு மேலே ஓடினாள்.

சூர்யா உள்ளே வரும் போது,  மங்களம் அருகே அமர்ந்து துணியை மடித்து கொண்டிருந்தாள் கலைமதி.

அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டான்.

"நான் இதை பாத்துக்குறேன் மதி. நீ போய் முகம் கழுவிட்டு காபி சூடு பண்ணி, அவனுக்கு கொடுத்துட்டு நீயும் குடி", என்றாள் மங்களம்.

"சரிங்க அத்தை", என்று எழுந்து உள்ளே போய் பேகை வைத்தவள், தன்னுடைய உடையை எடுத்து கொண்டிருந்தாள்.

பாத்ரூமில் இருந்து வெளியே வந்த சூர்யா அவளை பார்த்தான்.

"டிரஸ் மாத்த போறியா கலை?", என்று கேட்டான் சூர்யா.

"ம்ம்", என்றவள் கையில் ஒரு சுடிதார் இருந்தது.

"நாமளும் அவங்க கூட போறோம். அதனால எல்லாரையும் பஸ் ஏத்தி விட்டுட்டு வந்து மாத்திக்கோ"

"ஹ்ம்ம் சரி அத்தான்", என்றவள் உடையை அங்கேயே வைத்து விட்டு முகம் கழுவ போனாள்.

அடுத்து மங்களம் போட்டு வைத்திருந்த காபியை சூடு பண்ணி, அவனுக்கும் கொடுத்தாள்.

இருவரும் டிவி முன்னாடி எதிர்  எதிர் சோபாவில் அமர்ந்து காபி குடிப்பதை பார்த்த மங்களத்துக்கு மனது நிறைவாக இருந்தது.

"பையன் வாழ்ந்துருவான். இது தான் உன் கணக்கா கடவுளே?", என்று நினைத்து கொண்டே மதியை பார்த்தாள்.

"இப்படி அழகுலயும், குணத்துலயும் தங்கமான மருமக கிடைச்சா, எந்த மாமியாருக்கு தான் பிடிக்காது?", என்று நினைத்து கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தவள் "மதி மா", என்று ஆரம்பித்தாள்.

"என்னங்க அத்தை?", என்று கேட்டாள் கலைமதி.

அம்மா அழைத்ததும் திரும்பி பார்த்தவன் அவர்கள் பேச்சில் மட்டும் காதை கொடுத்து விட்டு டிவி புறம் திரும்பி கொண்டான்.

"ஒன்னும் இல்ல மா. வர ரெண்டு நாள் ஆகும். சமாளிச்சுக்குவ தான?"

"கண்டிப்பா அத்தை. நீங்க கவலை படாதீங்க"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.