(Reading time: 13 - 26 minutes)

"மாவு மதியமே அரைச்சு வச்சிட்டேன் டா. காலைல, நைட்டுக்கு அதை வச்சு எதாவது செஞ்சிக்கோ. மதியம் மட்டும் உன் புருசனுக்கு எதாவது செஞ்சி கொடு சரியா?"

"அம்மா. அவ அவளோட படிப்பை பாப்பாளா? எனக்கு சமைச்சு கொடுப்பாளா? ரெண்டு நாள் தான? நான் வெளிய சாப்பிட்டுக்குவேன்", என்று இடையில் புகுந்து பேசினான் சூர்யா.

"உங்களுக்கு கடை சாப்பாடு ஒத்துக்காது அத்தான். நானே செய்றேன். அப்புறம் இப்ப எந்த பரிச்சையுமே இல்லை. சும்மா தான இருக்கேன். சாப்பாடு வச்சு ஒரு காய் வைக்கிறதுல என்ன குறைய போகுது. அப்புறம் எனக்கும் வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு போக பிடிச்சிருக்கு", என்றாள் கலைமதி.

"இவ்வளவு நீளமா  பேசுவாளா இவ?", என்று நினைத்து கொண்டே அவளை பார்த்தான் சூர்யா.

"அப்புறம் என்ன டா? அவளே சொல்லிட்டா. ரெண்டு நாள் தான? என் மருமக சமாளிச்சிக்குவா. நீ ஹோட்டல்ல தின்னா அப்புறம் வயிறு வலின்னு என்னை உயிரை வாங்குவ. வா மதி. இப்ப நைட்டுக்கு சப்பாத்தி போடலாம்", என்று அவளை அழைத்து கொண்டு போனாள் மங்களம்.

அம்மாவும், மனைவியும் போறதை பார்த்து கொண்டிருந்தவன் சிரித்து விட்டு டிவி பார்க்க ஆரம்பித்தான்.

அடுத்து எல்லாரும் வீட்டில் இரவு உணவை முடித்து விட்டு கிளம்புவதுக்கு எழுந்தார்கள்.

"போய்ட்டு வறோம் மதி", என்று சொன்னாள் மங்களம்.

"சரிங்க அத்தை"

"மதி, தம்பி சொல்ற படி கேக்கணும் சரியா?", என்றார் சண்முகம்.

"சரிப்பா"

"அவளுக்கே எல்லாம் தெரியும் மாப்பிள்ளை. நீ வா. கிளம்புறோம் மா", என்றார் சுப்பிரமணியம்.

"சரிங்க மாமா, பத்திரமா போயிட்டு வாங்க", என்று சிரித்தாள் மதி.

"இப்பவே அவ கிட்ட சொல்றீங்க. அவளும் பஸ் ஏத்தி விட நம்ம கூட தான் வாரா. உங்களை விட்டுட்டு நாங்க வருவோம்", என்ற படியே அங்கு வந்தான் சூர்யா.

"நான் வேணும்னா வீட்லயே இருக்கேன் அத்தான்", என்றாள் மதி.

"அவன் தான் சொல்றான்ல மா. கிளம்பு", என்று கிளம்ப வைத்தாள் மங்களம்.

காலை மாலை மாதிரியே, அவன் அருகில் அமர கார் கதவை திறந்தாள் மதி.

"மதி மாமா முன்னாடி இருக்கட்டும். நீ பின்னாடி அம்மா கூட உக்காரு", என்று சொன்னான் சூர்யா.

அதில் முகம் வாடினாள் மதி.

அதை யாரிடமும் காட்டாமல் மறைத்தவள் மங்களம், சுப்பிரமணியம் அருகே அமர்ந்தாள்.

முன்னாடி சண்முகம் ஏறியதும் கார் கிளம்பியது.

"அத்தானுக்கும் என்னை பிடிக்கலை போல? அதான் பக்கத்துல உக்கார விடலை. காலைல கேட்ட பிடிச்சிருக்கா அப்படிங்குற கேள்வியையும் கேக்கலை", என்று நினைத்து மனம் வருந்தினாள்.

பஸ் ஸ்டாண்டில் வண்டியை விட்டவன் அவர்களை பஸ் ஏற்றி, பஸ் கிளம்பியவுடன் மதி அருகில் சென்றான்.

என்ன என்பதை அவனை பார்த்தாள் கலைமதி.

"கிளம்பலாமா கலை?"

"ம்ம்"

கார் அருகே சென்றதும் பின் பக்கம் அமர பார்த்தவளை "ஏய் அங்க எங்க போற? முன்னாடி வா", என்றான் சூர்யா.

"அப்ப பின்னாடி உக்கார சொல்லிட்டு இப்ப முன்னாடி கூப்புடுறதை பாரு?", என்று நினைத்தவள் "நான் அப்ப மாதிரி பின்னாடியே உக்காருறேன்", என்றாள்.

அப்போது தான் அவள் முகத்தையே பார்த்தான்.

"அட பாரு டா. இவளுக்கு கோபம் எல்லாம் வருதா?", என்று நினைத்து சிரித்து கொண்டே அவள் அருகில் வந்தான்.

"உன்னை பின்னாடி உக்கார சொன்னேன்னு கோபமா கலை?"

"ம்ம்.. இல்லை"

"பொய் சொல்லாத. உன் முகத்தை பார்த்தாலே தெரியுது. ஆனா ஏன் சொன்னேன்னு யோசிக்க மாட்டியா? அம்மா கொஞ்சம் குண்டு. அப்பாவும், மாமாவும் பெரிய ஆள்கள். அவங்க மூணு பேரும் பின்னாடி உக்கார கஷ்ட படமாட்டாங்களா?"

"இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கோ?", என்ற சிந்தனையை கண்ணில் தேக்கி அவனை பார்த்தாள்.

அவள் பார்வையை உணர்ந்து சிரித்தவன், "நீ ரொம்பவே ஒள்ளி. நீ உக்காந்தா, அங்க இடைஞ்சல் இருக்காதுன்னு தான் சொன்னேன். உன்னை கஷ்ட படுத்த சொல்லலை மா. இப்ப கலைக்கு கோபம் போயிருச்சு போல? வா உள்ள உக்காரு", என்று சொல்லி அவள் கையை பிடித்து முன்னே அமர வைத்து விட்டே அந்த பக்கம் போய் காரை எடுத்தான்.

விழி விரித்து அவனையே பார்த்து கொண்டிருந்தாள் அவன் மனைவி.

அவள் பார்வையை உணர்த்து அவளை பார்த்தான். ஆனால் அவள் முகத்தை திருப்பி கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.