(Reading time: 16 - 31 minutes)

“சாரி பாண்டி துரை. சார் என்னை பேர் சொல்லி அழைத்துக் கேட்கவும் உண்மையை சொல்லிட்டேன். இப்படி ஆகும்னு எனக்கு தெரியாது” என்று சொல்லி முடிக்கும் முன்னே அவரின் கண்களில் நீர் திரண்டு கன்னங்களில் உருண்டு அவரின் கைகளில் பட்டு தெறிக்க துரையின் மேல் சிறுதுளி சிதறி மறைந்தது.

“அழுகிறாயா மீனலோசினி....உன் பேர் ரொம்ப நீளம்” மென்மையாக ஒலித்தது அவரின் குரல்.

மீனலோசினிக்கு ஆச்சரியம். பேசுவது பாண்டிதுரை தானா என்று. எப்போதும் வல்லினமாய் ஒலிக்கும் அவர் குரல் இன்று மெல்லினத்தை மெருகேற்றிக் கொண்டிருந்ததே.

ஆச்சரியம் நிரம்ப நிமிர்ந்து பார்த்தார் மீனலோசினி. நீரில் குளித்த கண்மணிகள் கமலமாய் விரிய அந்த நொடியில் அதில் மொத்தமாய் மூழ்கிப் போனது பாண்டிதுரையின் இதயம்.

“மீனலோ......சினி, எப்படி ஷார்ட்டா கூப்பிடுவது” மற்றவருக்கு கரடு முரடாய் இருந்த அவர் மீனலோசினிக்கு மட்டும் பலாச்சுளையாக இனித்தார்.

“மீனு மீனா இப்படி சுருக்கி கூப்பிடலாம்” இப்போது கொஞ்சம் தெளிவாய் வந்தது மீனாவின் குரல்.

“அப்போ லோசினி பாவமில்லையா” அவர் கேட்க புரியாமல் மீண்டும் கண்களை விரித்தார்.

“அது யாரு”

“நீ தான் மீன லோசினி. மீனு மீனா பேரின் முதல் பாதி மட்டும் தானே” இப்போது விளக்கம் சொல்ல புரிந்தது என்பது போல தலையை ஆட்டினார்.

“மினி... பிடிச்சிருக்கா” பாண்டிதுரை கேட்க பெயரின் சுருக்கத்தைத் தான் கேட்கிறார் என்று எண்ணி சட்டென்று, “ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொல்லி விட்டார்.

“ரொம்ப பிடிச்சிருக்கா” இப்போது ஆழ்ந்து ஒலித்தது துரையின் குரல்.

அந்தக் குரல் மீனலோசினியின் உடலில் உள்ள அணுக்களில் எல்லாம் காதல் ராகத்தை மீட்டி விட்டிருந்தது.

எப்படி மறைத்து வைத்தாலும் மணம் வீசியே தீரும் காதல் என்ற கூற்றைப் பொய்யாக்கி அந்த மணத்தை தங்கள் இருவரின் மனங்களில் மட்டும் பொத்தி வைத்து மகிழ்ந்து திளைத்தனர்.

சான்றிதழ் தர மறுத்த பேராசிரியர் மாற்றலாகி போய்விட, புதிதாய் வந்தவர் சான்றிதழை வழங்கி விட பாண்டிதுரையும் மருத்துவராக பட்டம் பெற்றார்.

பின் தன் கிராமத்திலே ஆரம்ப சுகாதார மையத்தில் பணி புரிந்து மக்களுக்கு சேவை செய்து வந்தார்.

அவரின் மினியின் ஆலோசனையின் பேரில் அறுவை சிகிச்சை பிரிவில் மேற்படிப்பினை தொடர்ந்து  பட்டம் பெற்று மதுரை மருத்துவக் கல்லூரயிலேயே உதவி பேராசிரியராக பணியில் அமர்ந்தார்.

மீனலோசினி மயக்க மருந்தியலில் பட்டம் பெற்று அவருக்கு சொந்தமான மருத்துவமனையில் ப்ராக்டீஸ் செய்து வந்தார்.

பெற்றோர் சம்மதம் பெற்று ஓர் நன்னாளில் இருவரும் திருமண பந்தத்தில் இணைய அந்தக் கல்லூரியே ஆச்சரியமாக பார்த்தது.

“டாக்டர் துரை லவ் மேரேஜ் செய்தாரா!!! மீனு மேடத்தையா!!!” இப்படி ஆச்சரியம் கொள்ளாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவு அவர்கள் காதல் காவியம் மிகப் பிரசித்தம்.

இன்றளவிலும் எல்லோராலும் டெரர் என்று அழைக்கப்படும் டாக்டர் பாண்டிதுரை அவரின் காதல் மனைவிக்கு மட்டும் செல்லக் குழந்தை.

“சாருக்கும் மேடம்க்கும் குழந்தை இல்லை. மேடம் சோ ஸ்வீட். சார் மேடம் கிட்ட மொத்தமா சரண்டராம்” இதுவும் அங்கிருந்தவர்கள் பேசிக் கொள்வது தான்.

ர்ஷா ஹரிணி இருவருமே இக்கதைகளை மற்றவர் கூற அறிந்திருந்தனர். ஆனால் அப்போது தான் அவர்கள் இருவரின் ஆழமான நேசத்தை கண்கூடாக கண்டனர்.

“அவங்களை அனுப்பு பிடி. நேரமாச்சு நாம கிளம்பலாம்” மனைவி சொல்லிவிட அப்பீல் ஏது.

சரியான நேரத்தில் சரியான முறையில் சிகிச்சை செய்து அந்த நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய ஹர்ஷாவை மனம் திறந்து பாராட்டினார். அதற்கு உற்ற துணையாய் செயல்பட்ட ஹரிணியையும் பாராட்டினார்.

“ஒரு டாக்டருக்கு எப்போதும் நோயாளியின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும் தான் மனதில் உறுதியாய் நிலைத்திருக்க வேண்டும். மற்ற எல்லாம் இரண்டாம் பட்சம் தான். உண்மையான நோக்கத்தோடு செய்யப்படும் எந்த முயற்சியும் நன்மையில் தான் முடியும்” அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

“மினி ஒரு நாள் உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு சிறந்த சர்ஜனாக வருவான் அந்த பையன் ஆனா...” அவர்கள் சென்று விட்ட பின்பும் ஒரு வித சிந்தனையில் இருந்தார் டாக்டர் பாண்டிதுரை.

“ஆனா...” மீனலோசனி கேட்க, பாண்டிதுரை இப்போது எழுந்து கொண்டு மனைவியுடன் கார் பார்க்கிங்கை அடைந்தார்.

“நான் டிரைவ் செய்றேன்” என்று மீனலோசினி சொல்ல அவரருகில் வந்து அமர்ந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.