(Reading time: 16 - 31 minutes)

“பேசி வைத்துக் கொள்ளலாம். ரோகா (நம் ஊரில் பரிசம் போடுவது போல்) வேண்டுமானால் செய்து விடலாம். எதற்கும் உன் பையாஸாவிடம் (சகோதரனிடம்) கூறி அவர்கள் அபிப்பிராயம் கேட்டு வை” என்று ராணி சொன்னதை கேட்ட சாரதா ஏற்கனவே அது குறித்த சிந்தனையில் தான் இருந்தார்.

சாரதாவிற்கு முதல் பார்வையிலேயே ஹரிணியை மிகவும் பிடித்திருந்தது. முதலில் அவளைப் பற்றி மகன் புகார் செய்யும் போதெல்லாம் அவளின் இயல்புகளை அவர் மனம் பாராட்டவே செய்தது.  ஹர்ஷா ஒவ்வொரு முறையும் அவளைப் பற்றி உணர்ச்சி பூர்வமாக கூறும் போது சாரதா மகிழ்ச்சியே கொண்டார்.

மகன் ஒரு தலைசிறந்த மருத்துவனாக வந்துவிடுவான். நல்ல தோழமை கிடைத்திருக்கிறது என்று நிறைவு கொண்டார்.

ஹர்ஷாவின் திருமணம் குறித்த பேச்சுக்கள் எழவே அவர் மனதில் குழப்ப மேகங்கள்.

தன் கணவரின் படத்தை எடுத்து கையில் வைத்துக் கொண்டார்.

“நீங்க ராஜவம்சம் என்ற அடையாளம் ஏதும் வேண்டாம் என்று என்னக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தீங்க. ஒரு நிறைவான சந்தோஷமான வாழ்க்கயை நாம் வாழ்ந்தோம். அதே நிறைவோடு உங்களோடு இன்றும் நான் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன். அது போல நம் ஹரிக்கும் அவன் மனதிற்கு பிடித்த வாழ்க்கையை அமைத்து தர நீங்க தான் எனக்கு துணை புரியணும்” கணவரிடம் வேண்டினார்.

நாட்கள் வேகமாக உருண்டோட இன்னும் நான்கு மாதங்கள் மட்டும் பயிற்சி காலத்தில் மிச்சம் இருந்தது.

அப்போது ஹர்ஷா, ஹரிணி, ஹேமாமாலினி, ஹேமந்த் நால்வரும் பிரசவ வார்டில் பயிற்சியில் இருந்தனர்.

முதல் முறை பிரசவம் பார்த்து குழந்தையை கையில் ஏந்தி பிடித்த அந்த நொடியை ஹேமாமாலினி மற்றும் ஹேமந்த் மிகவும் கொண்டாடினர்.

ஹர்ஷா நெகிழ்ந்தே போயிருந்தான். அவன் பார்த்த முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தை அவனைப் பார்த்து பொடிக்கண்களை சிமிட்டி கொண்டிருக்க அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

உணவு இடைவேளையின் போதே அவன் அன்னைக்கு போன் செய்தான்.

“அம்மா, நீங்களும் இவ்வளவு கஷ்டப்பட்டீங்களா மா. நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்தினேனா. ஆனா குட்டி பாப்பாவை பார்த்ததும் அந்த அம்மா முகத்தில் அவ்வளவு சந்தோஷம். அப்படி தான் உங்களுக்கும் இருந்ததா” என்றெல்லாம் கூறி சாரதாவையும் கண்கலங்கச் செய்திருந்தான்.  

“ஆமாம்டா ஹரிகண்ணா”

“சரிமா அப்புறம் பேசறேன்” என்று போனை அணைத்து விட்டு திரும்பியவன் அங்கே ஹரிணி நின்று கொண்டிருப்பதைக் கண்டான்.

“சாரி நான் ஒன்னும் ஒட்டுக் கேட்கல. ரெஜிஸ்டர் எடுக்க வந்தேன்” அவளாக ஏன் விளக்கம் கொடுத்தாள். அவள் குரல் ஏன் கம்மியது. அப்போது அதை ஹர்ஷா பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

அந்த டெலிவரி வார்டில் ஹவுஸ் சர்ஜன்களுக்கு பல பணிகள் இருந்தன.

பிரசவம் பார்ப்பது தவிர, ரிஜிஸ்டரில் என்ட்ரி செய்வது, யாருக்கேனும் ரத்தம் தேவைபட்டால் அதை இரத்த வங்கியில் இருந்து வாங்கி வருவது, சிசேரியன் செய்ய முடிவாகி இருக்கும் கர்பிணி பெண்களை அறுவை சிகிச்சைக்கு தயார் செய்வது என்று பல வேலைகள்.

இருப்பினும் பெருமளவு பயிற்சி மருத்துவர்கள் டெலிவரி மேற்கொள்வதையே விரும்பி செய்தனர். ஆனால் ஹரிணியோ மற்ற பணிகளை தேடித் தேடி  செய்தாள்.

அந்தப் பிரிவில் கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் மற்றவர்கள் இத்தனை டெலிவரி செய்தோம் என்று பறைசாற்றி கொண்டிருக்க அவள் ஒன்றுமே மேற்கொள்ளவில்லை என்பதை அப்போது தான் ஹர்ஷா கவனித்தான்.

அன்று அந்த மழை நாளில் அவள் சொன்னது எல்லாம் அவன் நினைவில் வந்து போனது. பணி முடிந்து கல்லூரி வழியாக ஹர்ஷா ஹரிணி இருவரும் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

“நீ மொத்தம் எத்தனை டெலிவரி பார்த்திருக்க” அவள் இது வரை ஒன்று கூட செய்யவில்லை என்று தெரிந்திருந்தும் வேண்டுமென்றே கேட்டான் ஹர்ஷா.

அவள் ஒன்றும் பதில் பேசாமலேயே நடந்து வந்தாள்.

அவள் அப்படி பதில் சொல்லவில்லை எனில் அடுத்த கேள்வி கேட்க கூடாது என்று அர்த்தம். இத்தனை நாட்களில் ஹர்ஷா அதை புரிந்து வைத்திருந்தான்.

“மண்டே மேடம் லாக் புக் செக் செய்ய போவதாய் சொன்னாங்க. நீ எழுதிட்டியா. அது தான் கேட்டேன்”

பயிற்சி மாணவர்கள் அனைவரும் லாக்புக்கில் அவர்கள் மேற்கொண்ட பயிற்சியினை விரிவாக எழுதி அந்தந்த துறை தலைமை மருத்துவரிடம் கையெழுத்து பெற்று சான்றிதழ் வாங்க வேண்டும். அப்போது தான் அவர்கள் பயிற்சி பூர்த்தி ஆகும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.