(Reading time: 16 - 31 minutes)

“நீ கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருக்கணும் மினி. அந்தக் குட்டிப்பொண்ணை பார்த்திருக்கணும். என்னைக் கண்டால் ஹாஸ்பிடல்லே நடுங்குது. துளி கூட பயமில்லாம நாங்க உங்க ஸ்டுடண்ட்ஸ் சரியானதை தான் செய்தோம்னு தைரியமா சொல்லுது. அந்த பையனை தனக்கு பின்னால் மறைத்துக் கொண்டு தண்டனை கொடுப்பதாய் இருந்தால் எனக்கு கொடுங்கன்னு சொல்லுது” அவர் சொல்ல மீனலோசினி இப்போது மெலிதாக சிரித்தார்.

“உன்னையே நேர்ல பார்த்தது போல இருந்ததா பிடி” அவர் சொல்லவும் ஆமாம் என்று ஆமோதித்தார்.

“அதான் சொன்னேனே அந்த பையன் பெரிய சர்ஜனா வருவான் அந்த பொண்ணு மட்டும் அவன் கூடவே இருப்பாளானால்” ஆருடம் சொன்னார்.

ஆருடம் பலிக்குமா எப்படி சாத்தியம் ஆகும் என்று காலம் தான் பதில் கூற முடியும்.

விடுதிக்கு திரும்பிய பின்னும் ஹர்ஷாவின் மனதில் ஹரிணியின் பேச்சே ஓடிக்கொண்டிருந்தது.

டாக்டர் துரையின் அறையில் இருந்து வெளியே வந்ததுமே அவன் அவளிடம் கேட்டான்.

“ஹனி ஏன் இப்படி பண்ண”

“என்ன பண்ணேன், எப்படி பண்ணேன்”

“ஒன்னும் தெரியாத மாதிரி கேள்வி கேக்காதே. சார் ஒரு வேளை நிஜமா கோபமாகி பனிஷ்மன்ட் கொடுத்திருந்தா. நான் தானே அதை செய்தேன்”

“நான் கட்டாயப்படுத்தியதால் தானே நீ செய்தாய். அப்போ உன்னை எப்படி என்னால் விட்டுக் கொடுக்க முடியும்”

“சரி அப்போ ரெண்டு பேருக்கும் தானே பனிஷ்மன்ட் கிடைக்கணும். நீ ஏன் உனக்கு மட்டும் கொடுக்க சொல்லி சொன்ன” அவன் தேய்ந்த ரிகார்ட் போல அதையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தது அவளுக்கு எரிச்சலாக தான் இருந்தது.

“லூசு மாதிரி பேசி என்னை டென்ஷன் ஆக்காதே ஹரி. அவர் ஒருவேளை உன் லாக்புக்கில் ப்ளாக் மார்க் வைத்து விட்டால் என்ன செய்வாய். யுஎஸ் போக எக்ஸாம் எல்லாம் எழுதி வச்சிருக்க. அங்க இதெல்லாம் ரொம்ப பார்ப்பாங்க தானே” அவள் சொல்லவும் ஹர்ஷவர்தன் ஆடிப் போனது என்னவோ உண்மை தான்.

அவன் கூட அதை பற்றி யோசிக்கவில்லை. அவள் அவனுக்காக யோசித்து செயல்பட்டிருக்கிறாள்.

“நீ USMLE எக்ஸாம்ல உன்னோட ஸ்கோர் சொன்னியே. டாப் ஸ்கோராமே. உலக அளவில் விரல் விட்டு எண்ணும் அளவு தான் அந்த ஸ்கோர் எடுத்தவங்க இருப்பாங்களாமே. நான் உன் பேரை சொல்லாமல் இந்த ஸ்கோர்னா என்ன அர்த்தம்ன்னு என் தங்கையிடம் விசாரிக்க சொன்னேன். அவங்க எஞ்சினியரிங்ல நிறைய பேர் யுஎஸ் போக GATE எல்லாம் எழுதுவாங்கன்னு ஒரு நாள் சொன்னாள். அவ தான் விசாரிச்சு சொன்னா. இவ்வளவு ஸ்கோர் யாராலேயும் எடுக்க முடியாது. வெரி ரேர் என்று”

“ஹ்ம்ம் ஆமா” அவ்வளவு தான் அவனால் பேச முடிந்தது.

“உன்கிட்ட டேலன்ட் நிறைய இருக்கு ஹரி. அதை சரியா பயன்படுத்து. இன்னும் ஒரு எக்ஸாம் இருக்குன்னு சொன்னியே. அதுக்கு ஒழுங்கா படிக்கிற வழியை பாரு” வெகு சாதரணமாக சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

முதலாம் ஆண்டு சவாலாக அவள் வாயாலே பிரின்ஸ் என்று சொல்ல வைக்கிறேன் என்று சபதம் செய்தான். இன்று அவளுக்காக தான் சிறந்த சர்ஜனாக வர வேண்டும் என்று உறுதி பூண்டான்.

தன் அன்னையிடம் அவன் நடந்தைக் கூறி ஹரிணியைப் பற்றி சிலாகித்து கூறினான்.

“அம்மா, நாம பர்ஸ்ட் டைம் இங்க ஹவேலிக்கு (மாளிகைக்கு) வந்த போது நான் எல்லோரையும் பார்த்து பயந்து  உங்க புடவையை இறுக்கமா பிடிச்சிட்டு உங்க பின்னால் ஒளிந்து கொண்டேனே. அப்படி தான் இருந்தது மா. அவ எவ்வளவு தைரியமா பேசறா. எனக்கே கொஞ்சம் பயமா தான் இருந்தது. எனக்கு அப்படியே உங்களை பார்த்தது போல இருந்துச்சு மா”

“நீங்களும் அப்பாவும் நான் பெரிய டாக்டர் ஆகணும்னு கனவு கண்டீங்கன்னு சொல்வீங்களே. அவளும் அதையே தான் சொல்றா” அவன் ஹரிணியின் புகழ் பாடிக் கொண்டே போனான்.

மகன் சொன்னதைக் கேட்டு மனம் மகிழ்ந்தாலும் சிந்தனை வயப்பட்டார் சாரதா.

ராஜ குடும்பங்களில் பெண்ணோ பிள்ளையோ இளம் வயதிலேயே திருமணம் செய்து விடுவது வழக்கமாக இருந்தது.

“ஸ்வாதிகாவை ஏன் நாம ஹர்ஷாவிற்கு தேர்ந்தெடுக்க கூடாது” என்று மூத்த மருமகளிடம் (ஸ்வாதியின் அத்தை) தனது மாமியார் ஆலோசித்து கொண்டிருந்ததை தற்செயலாக கேட்டார் சாரதா.

“ஸ்வாதி பிஸ்னஸ் மேனேஜ்மன்ட் படிக்க யுஎஸ் போக போறேன்னு சொல்றா. அவ இப்போ தான் டிகிரி சேர்ந்திருக்கா. என் தம்பி இப்போதைக்கு அவளுக்கு ஷாதி (திருமணம்)செய்ய ஒத்துக்க மாட்டார்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.