(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11 - சிவாஜிதாசன்

Samrat Samyukthan

அத்தியாயம் 1.11: ஓவியம் நிஜமானது

கடந்த அத்தியாயத்தில்...

 

சம்யுக்தனைப் பற்றிய கவலையை சகுந்தலை இளவரசனிடம் கூறினாள். இளவரசன், அவனுக்கு எந்த ஆபத்தும் நேராது. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து அவளை அனுப்பினான். இரவில் காவல் புரியும் இடத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காளிங்கன் என்று ஒருவன் நடந்துகொண்டான். இளவரசனின் நண்பன் இடும்பன் அவன் மேல் இருக்கும் தன் சந்தேகத்தை இளவரசரிடம் கூற முற்பட்டபோது அது தடைபட்டு நின்று போனது. இளவரசன் தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறி.பரண் மேல் சென்று விட்டான். கீழே நின்று கொண்டு இளவரசனையே பார்த்த காளிங்கன், நாளை நீயும் சம்யுக்தனும் உயிரோடு இருக்கப் போவதில்லை என்று மனதில் நினைத்தவாறே விஷப்புன்னகையை வீசினான்...

இனி...


நிலவின் ஒளி இரவைக் கிழித்து பூமியை மங்கிய வெளிச்சத்தில் சூழ்ந்திருந்தது. எங்கும் ஒரே நிசப்தம்.

அந்த நிசப்தத்தை "டக்.. டக்... டக்.." என்று ஒரு குதிரையின் காலடிச் சத்தம் கலைத்தது. யாரோ ஒருவன் காட்டில் அலைந்து கொண்டிருந்தான். காதலால், வீரனாக வேண்டும் என்ற ஆசையில் சம்யுக்தனைத் தேடி அலைந்த பூபதி தான் அது.

சம்யுக்தன் எங்கிருப்பான்? அவனைத் தேடி இவ்வளவு தூரம் தாம் வந்து விட்டோமே? பூங்கொடி பூமியில் பிறக்காமலேயே இருந்திருக்கலாம். என் மனதில் ஆசை எழாமல் இருந்திருக்கும். அவளையும் படைத்து என்னையும் தவிக்கவிட்ட கடவுள் மட்டும் நேரில் வந்தால்? ஏன் நாம் இப்படி நினைக்கிறோம்? பூங்கொடி இல்லாத வாழ்வை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. என்னே பெண் அவள்! வானுலக தேவதை பூமியில் நடமாடுவது போல் அல்லவா நடமாடுகிறாள்.

குதிரையில் உட்கார்ந்துகொண்டு கற்பனையில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தவனை குதிரையின் கனைப்பு தடுத்து நிறுத்தியது. இருட்டு அவனுக்கு பயத்தை உண்டு பண்ணியது. கானல் நீர் போல் அவன் மனம் கற்பனை செய்யத் தொடங்கியது. ஏதோ ஒரு பயம் அவனைத் துரத்தியது. அவன் குதிரையை விரட்டினான். குதிரையாலோ ஓட முடியவில்லை. களைத்திருந்தது. பயம் பின்னால் வருவது போல அவனுள் தோன்றியது. 

காட்டிலிருந்த மரங்கள் நிழல் போல காட்சியளித்ததைக் கண்டு அவனுள் பல கற்பனைகள் எழுந்தன. மரத்தின் மேல் பிசாசுகள் உட்கார்ந்துகொண்டு அங்கு செல்லும் மனிதர்களைக் கொடூரமாகக் கொன்று ரத்தத்தை உறிஞ்சிக் குடித்துவிடும் போன்ற கதைகளை சிறுவயதில் ஏராளமாகக் கேட்டிருந்ததால், அம்மரங்களைக் கண்டு அவன் உடல் நடுங்கியது. அப்படி எதுவும் இருக்காது என்று தன்னைத் தேற்றிக்கொள்ள முயற்சித்து தோற்றுப்போனான்.

காட்டில் ஆங்காங்கே எழுந்த சலசலப்பும் கோட்டான்களின் ஓலமும் அவன் முதுகுத்தண்டில் ஒரு சிலிர்ப்பை உண்டாக்கியது. பூங்கொடியின் மனதில் இடம் பிடிக்க ஆசைப்பட்டு வீரமாக இக்காட்டில் நுழைந்துவிட்டோம். நுழைந்த பின் தான் தெரிகிறது தேவையில்லாமல் அகலக்கால் வைத்துவிட்டோமோ என்று. ஒரே நாளில் வீரம் வந்துவிடுமா? எதற்கும் ஒரு முயற்சி அவசியம் அல்லவா? முயற்சியில்லாமல் காரியத்தில் இறங்கிவிட்டால், இப்படித்தான் அவஸ்தைப் படவேண்டும். திரும்பிச் செல்லலாம் என்றால் வழி தெரியவில்லையே. சம்யுக்தனையும் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிச் செல்லவும் முடியாமல் இப்படி நடுக்காட்டில் சிக்கி என் பாடு திண்டாட்டமாகிவிட்டதே என்று தன்னைத்தானே நொந்துகொண்டான்.  .

அவனைச் சுமந்திருந்த குதிரையின் நிலைமையோ படுமோசம். உணவும் ஓய்வும் இல்லாமல் அது தள்ளாடியது. அதற்கு பேசும் சக்தி மட்டும் இருந்திருந்தால் தனக்கு ஓய்வும் உணவும் கொடுக்காமல் அலைக்கழித்ததற்கு வசை பாடி தன் பழியைத் தீர்த்திருக்கும். பொதி சுமக்கும் கழுதையைப் போல் பரிதாபமாக தன் காலடித் தடங்களை அக்காட்டில் பதித்துக்கொண்டிருந்தது.

பூபதி தன் நிலையைக் கண்டு தானே வருந்தி, அக்கோபத்தை தன் குதிகாலில் இறக்கி குதிரையின் வயிற்றை பலமாக அழுத்தினான். வலியைப் பொறுக்க முடியாமல் குதிரை தன் உடலைக் குலுக்கி தலையைத் தூக்கிக் கனைத்து தன் எதிர்ப்பை வெளிக்காட்டியது. "வேகமாக செல்லாமல் எதற்கு கனைக்கிறாய்?" என்று கூறி மேலும் பலமாக குதிரையின் வயிற்றை அழுத்தினான். கோபம் கொண்ட குதிரை தன் முன்னங்கால்களைத் தூக்கி அவனைக் கீழே தள்ளியது. "என்னையே தள்ளி விடுகிறாயா?" என்று கொதிப்படைந்த பூபதி கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து குதிரையை அடித்தான். வலி தாங்கமுடியாமல் விட்டால் போதும் என்று குதிரை கனைத்துக்கொண்டே அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

"எங்கே ஓடுகிறாய்?" என்று பூபதி குதிரையின் பின்னால் ஓடினான். வழியில் ஒரு மரத்தின் வேரில் கால் இடறிக் கீழே விழுந்தான். இனி குதிரையைத் தன்னால் பிடிக்க முடியாது என்று உணர்ந்துகொண்டு, "முட்டாள் குதிரை! இதற்கு எவ்வளவு உணவு கொடுத்திருப்பேன். என்னையே தள்ளிவிட்டு ஓடுகிறது." என்று வெறுப்புடன் கூறியபடியே எழுந்தான். கீழே விழுந்ததால் முழங்கையில் ஏற்பட்ட சிராய்ப்பை மெதுவாகத் தடவிக்கொண்டு, "எனக்கு இது எல்லாம் தேவை தான்" என்று வெறுப்புடன் கூறிக்கொண்டே ஒரு பெருமூச்சு விட்டு அங்கிருந்து நடந்து சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.