(Reading time: 17 - 33 minutes)

அப்பொழுது "ஏய்ய்ய் கொள்ளி வாய்ப் பிசாசே!" என்று ஒரு குரல் கேட்டுப் பார்த்திபன் திடுக்கிட்டான்.

யார் பேசுவது என்று சுற்றும் முற்றும் பார்த்தான். "பிசாசே! என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்று மீண்டும் அந்த குரல் கேட்டு பார்த்திபன் பரணில் இருந்து கீழே பார்த்தான்.

நிலவின் ஒளியும் தீப்பந்தத்தின் ஒளியும் ஒன்று சேர்ந்து அங்கு பூபதி நிற்பதைத் தெளிவாகக் காட்டியது. மரணத்தைப் பற்றி எண்ணிய பார்த்திபனுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது; அவன் சிரித்தே விட்டான்.

பார்த்திபன், மெதுவாகப் பரணில் இருந்து கீழே இறங்கி சென்றான். பூபதி பரணைப் பார்த்தபடி கத்திக்கொண்டிருந்தான். பார்த்திபன் பூனை போல் இருட்டில் நடந்து பூபதியின் அருகே சென்றான். பாம்பு நிலத்தில் ஊர்வது போல பூபதியின் தோள்களில் தன் கையை வைத்தான்.

வீரனாக சவால் விட்ட பூபதி அலறியபடி "பிசாசே! என்னை விட்டு விடு..விட்டு விடு. நான் தெரியாமல் சொல்லி விட்டேன்" என்று அலறினான்.

"பூபதி" என்று பார்த்திபன் மெதுவே அவன் காதுபட கூப்பிட்டான்.

"அட! பிசாசு வரைக்கும் என் பெயர் பிரபலமாகி இருக்கிறதே!" என்று பூபதி திரும்பிப் பார்த்தான்.

பார்த்திபன் தன்னை முறைத்துக்கொண்டு நின்றதைப் பார்த்து பூபதிக்கு, வெற்றிக்களிப்பு, ஆச்சர்யம், சந்தோசம் இவை எல்லாமே மனதில் எழுந்தன. எப்படியோ கண்டுபிடித்து விட்டோம் என்று மனதில் ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்டான்.

"பார்த்திபா இங்கு நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"

"நீ வருவாய் என்று காத்துக்கொண்டிருந்தேன், என் அருமை நண்பா!" 

"எனக்காகவா?" என்று பூபதி பார்த்திபனைப் பார்த்தபடியே கேட்டான்.

"ஏன், ஒரு விசித்திர ஜந்துவைப் போல் அப்படிப் பார்க்கிறாய்?"

"இல்லை, எப்பொழுதும் நீ என்னிடம் பாம்பைப் பார்த்த கீரியைப் போல் அல்லவா மோதுவாய். இப்பொழுது என்ன? பாலில் ஊறவைத்த பலாச்சுளை போல் அன்பைக் குழைக்கிறாய்?"

"போவது என்று முடிவான பின்பு எதற்கு பகை என்று தான்."

"எங்கே போகப் போகிறோம். ஏன் இன்று புதிராகவே பேசுகிறாய்?"

"மேலே வா! புதிருக்கு விடை தேடலாம்" என்று கூறி பார்த்திபன் பரண் மேல் ஏறிச் சென்றான்.

பூபதியும் பரணில் ஏறி, சம்யுக்தனைப் பார்த்து ஒரு ஏளனப் பார்வையை வீசி காட்டில் இருக்கும் கும்மிருட்டைப் பார்த்தான். உள்ளம் நடுங்கினாலும் அதை அவன் வெளிக்காட்டவில்லை.

"எதற்காக இங்கு வந்திருக்கிறாய்?" என்று சம்யுக்தன் அதிகாரக் குரலோடு கேட்டான்.

பூபதி அவனைத் திரும்பிப் பார்க்காமல், "காவல் புரியத்தான்" என்று நிலைமை புரியாமல் சாதாரணமாகச் சொன்னான்.

சம்யுக்தன் பார்த்திபனை முறைத்தான்.

பார்த்திபன், "எனக்கும் கோபம் வருகிறது. என்ன செய்வது? விதியின் சூழ்ச்சி விளையாடுகிறது" என்றான்.

சம்யுக்தன் பூபதியின் மேலாடையைப் பிடித்து இழுத்தான். பூபதி ஒரு கணம் திகைத்து, அவனைப் பயம் கலந்த பார்வையோடு பார்த்தான். சம்யுக்தனின் விழியில் இருந்த கோபத்தை அவனால் பார்க்க முடியவில்லை.

"இங்கிருந்து கிளம்பிவிடு. உன் நன்மைக்குத் தான் சொல்கிறேன்."

"எது நல்லது? எது கெட்டது? என்று எனக்குத் தெரியும் மற்றவர்கள் உபதேசங்கள் எனக்குத் தேவை இல்லை."

இருவரும் பூபதியை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களைக் கவனியாமல் பூபதி பேச்சைத் தொடர்ந்துகொண்டேயிருந்தான். "நான் இனி காவல் புரிய போகிறேன். அப்படியே பூங்கொடியின் மனதிலும் இடம் பிடிக்கப் போகிறேன்."

பார்த்திபன் மனதிற்குள், 'நீ சொர்க்கத்தில் தான் இடம் பிடிக்கப் போகிறாய் மூடனே!' என்று நினைத்தான்.

"பார்த்திபா! என்னைக் கூப்பிட்டாயா?" என்று பூபதி அவனைக் கேட்டான்.

பார்த்திபன் சம்யுக்தனை ஒரு முறை பார்த்து, பூபதியிடம், "இல்லை. ஏதோ மனதில் ஓடியது அதை நினைத்துக்கொண்டிருந்தேன்." என்றான்.

"உன் மனதில் ஆயிரம் ஓடட்டும். காவல் புரிவது என்றால் என்ன என்று எனக்குக் கற்றுக் கொடுக்க முடியுமா?"

சம்யுக்தன் பார்த்திபனை முறைத்துக்கொண்டே இருந்தான்.

"எல்லாம் கை மீறிப் போய்விட்டது, சம்யுக்தா. நாம் விட்டாலும் விதி இனி அவனை விடாது. சேர்ந்தே போவோமே" என்று கூறிக்கொண்டே பூபதியைப் பார்த்து, "நீ என்ன கேட்டாய்?" என்றான்.

"காவல் புரிவது எப்படி?"

"அது ஒன்றும் பெரிய மலையைக் குடையும் வேலை இல்லை. மிக மிக சுலபம்."

"அப்படியா?" என்று குரலில் சற்றே ஆச்சர்யம் கலந்து கேட்டான்.

"ஆம். இதோ, கிழக்கு திசையைப் பார்" என்று பூபதியைப் பார்த்துக் கூறினான்.

பூபதி, "கிழக்கைப் பார்த்துவிட்டேன்" என்று கூறினான்.

"பார்த்து விட்டாயா? நல்லது. மேற்கே பார்."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.