(Reading time: 17 - 33 minutes)

"பார்த்து விட்டேன்."

"வடக்கே பார். தெற்கே பார்".

"பார்த்துவிட்டேன்."

"வானத்தையும் பூமியையும் ஒரு முறை பார்."

"அதையும் பார்த்துவிட்டேன்."

"என் அருமை நண்பா! இது தான் காவல். இப்படித் தான் காவல் புரிய வேண்டும்."

"அட, இது தானா? இதற்கா பேரும் புகழும் கிடைக்கிறது. ஆச்சர்யமாக உள்ளதே."

"பூபதி நீ மேலும் ஆச்சர்யப்படுவாய்".

"என்ன அது?"

"இப்பொழுது கூறமாட்டேன். நீ இன்னும் சிறிது நேரத்தில் உன் கண்களால் காணப்போகிறாய்."

"என்னமோ சொல்லுகிறாய். சரி, காவல் புரிந்து எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. நான் ஓய்வு எடுக்கட்டுமா?" என்று பூபதி கேட்டான்.

பார்த்திபன் ஒரு கணம் திகைத்து சம்யுக்தனையும் பூபதியையும் மாறி மாறி பார்வையைத் திருப்பினான்.

"அதற்குள்ளாகவே களைத்து விட்டதா நண்பா?" என்று பார்த்திபன் பூபதியைப் பார்த்துக் கேட்டான்.

"தொல்லை செய்யாதே. நான் உறங்குகிறேன். காலையில் எழுப்பு" என்று கூறி பரண் மேலேயே பூபதி படுத்துக்கொண்டான்.

சம்யுக்தன் சிந்தனையோடு மரங்களை வெறித்துக்கொண்டிருந்தான். பார்த்திபன் அவன் அருகே சென்று சம்யுக்தனைப் போல் இருட்டில் நிழலாகத் தெரியும் மரங்களை பார்த்துக்கொண்டிருந்தான்.

சம்யுக்தன் பார்த்திபனைப் பாராமல் எவ்வித பரபரப்பும் இல்லாமல், "அதோ அவர்கள் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். குதிரைகள் ஓடி வரும் சத்தம் கேட்கிறது பார்" என்று புன்முறுவலோடு கூறினான்.

"சாகசத்துக்கு நான் தயார் சம்யுக்தா" என்று பார்த்திபன் பெருமிதத்தோடு கூறினான்.

"சாகசம் என்னைப் பார்க்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது" என்று சம்யுக்தன் கூறினான்.

"அதைத்தான் நானும் சொன்னேன். நீ செய்யும் சாகசத்தை பார்க்க நான் தயார் என்று" .

"நாம் தயார் என்று சொல்" என்று சம்யுக்தன் கூறினான்.

இருவரும் சிரித்தார்கள்.

அவர்கள் இருக்கும் இடத்தை ஆறு குதிரைகள் சூழ்ந்தன. குதிரையின் மேல் பகைவர்கள் அமர்ந்திருந்தனர். அதில் ஒருவன் சம்யுக்தனிடம் ஏற்கனவே போரிட்டு தப்பித்த முகமூடி மனிதன். அந்த குழுவிற்கு தலைமை தாங்கியிருப்பவன் போல் நடுவே வந்து நின்று மேலே நின்ற சம்யுக்தனைப் பார்த்துச் சிரித்தான்.

சம்யுக்தன் பதறாமல், "வாருங்கள்! வரவேற்கிறோம்" என்று கூறினான்.

"வரவேற்பு நன்றாக இருக்கிறது சம்யுக்தா" என்று அவன் கூறி முடிப்பதற்குள் சம்யுக்தன் பரணில் இருந்து குதித்து அவனை உதைத்தான். அந்த முகமூடி மனிதன் நிலை தடுமாறி கீழே விழுந்தான்.

எல்லோரும் வாளை உருவிக்கொண்டு குதிரையில் இருந்து கீழே இறங்கி சம்யுக்தனைக் கொல்ல வந்தார்கள். சம்யுக்தனுக்கு துணையாய் பார்த்திபனும் களத்தில் இறங்கினான்.

வாள்களின் ஓசை காட்டையே மிரட்டியது. பறவைகள் சிறகடித்துப் பறந்தன. பயங்கர சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது கீழே விழுந்திருந்த தீப்பந்தத்தை எடுத்து அந்த காய்ந்த மரத்தை நோக்கி சம்யுக்தன் வீசினான். அது பற்றி எரிந்தது. அந்த இடமே அனல் சூழ்ந்தது. இருட்டாக இருந்த இடம் மஞ்சள் நிறமாக மாறியது.

அனைவரின் முகமும் வெறிகொண்டிருந்தது. எல்லோரும் சம்யுக்தனையும் பார்த்திபனையும் தாக்க பாய்ந்து வந்தார்கள் தங்களால் முடிந்த அளவுக்கு சம்யுக்தனும் பார்த்திபனும் தடுத்தார்கள். ஒரு கட்டத்தில் இருவராலும் முடியவில்லை. வந்தவர்கள் சம்யுக்தனையும் பார்த்திபனையும் அடித்துக் கீழே தள்ளினார்கள். இருவரும் மயக்கமுடன் தரையில் கிடந்தார்கள். அவர்களைத் தூக்கி குதிரையில் வைத்து பகைவர்கள் புறப்படத் தயார் ஆன போது பூபதி கொட்டாவியை விட்டபடி பரணிலிருந்து எட்டிப் பார்த்தான்.

"தூங்குகிறேன் என்று தெரியாதா? ஏன் கூச்சல் போடுகிறீர்கள் மடையர்களே?" என்று தூக்கத்தில் கத்தினான்.

முகமூடி மனிதன், ஒருவனைப் பார்த்து தலை அசைத்தான். அவன் குதிரையில் இருந்து கீழே இறங்கி பரணில் ஏறி பூபதியை முறைத்தான்.

"ஏன் அப்படி பார்க்கிறாய். இது வரை நீ மானிடர்களைப் பார்த்ததே இல்லையா. ஆமாம் நீ யார்? இங்கிருந்த பார்த்திபனும் சம்யுக்தனும் எங்கே?" என்று கேட்டான்.

பூபதியின் தாடை உடையும் அளவிற்கு அவன் முகத்தில் வேகமாய் குத்து விட்டான் அவன். பூபதி மயக்கத்தில் வீழ்ந்தான். அவனையும் தூக்கிக்கொண்டு கீழே இறங்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.