(Reading time: 17 - 33 minutes)

ம்யுக்தன் பரண் மேல் இருந்து எதையோ வெறித்தபடி யோசித்துக்கொண்டிருந்தான். அவன் மனது ஒன்றை மட்டும் கூறிக்கொண்டே இருந்தது. 'ஆபத்து நெருங்கி விட்டது. நம் அருகிலேயே வந்து விட்டது. நம் உயிர் போகலாம்'.

பார்த்திபனைப் பார்த்தான். 'அவன், நான் இருக்கும் தைரியத்தில் தான் இருக்கிறான். எக்காரணம் கொண்டும் ஆபத்து அவனை நெருங்காமல் காப்பாற்றி விட வேண்டும். ஆபத்து எல்லை மீறிப் போனாலும் தன் உயிர் முன்னால் போக வேண்டுமே தவிர அவன் உயிர் அல்ல. இது தான் அவன் நட்பிற்கு நான் கொடுக்கும் மரியாதை' என்று அவனைப் பார்த்தபடி மனதினுள் எண்ணினான். அவன் கண்களில் நீர் கசிந்தது.

பார்த்திபன் பரண் மேல் சரியாகக் கட்டப்படாத இடத்தை கயிற்றால் கட்டிக்கொண்டு இருந்தான். சம்யுக்தன் பார்த்திபன் முகத்தில் இருக்கும் நம்பிக்கையைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

கயிற்றை இறுக்கிக் கட்டி முடித்து விட்ட பார்த்திபன், "அப்பாடா! பரண் இப்பொழுது பலமாக இருக்கும். சூறைக்காற்றே சுழன்று அடித்தாலும் தாக்குப் பிடிக்கும், சம்யுக்தா" என்று தன் நண்பனைப் பார்த்துக் கூறினான்.

"அதற்கு அவசியம் இருக்காது, பார்த்திபா"

பார்த்திபன் சிரித்துக்கொண்டே, "சூறைக்காற்று வராது என்று கூறுகிறாயா?" என்று கேட்டான்.

சம்யுக்தன் இயல்பாக, முகத்தில் எந்த மாறுதலும் இன்றி, "வந்துகொண்டே இருக்கிறது" என்றான்.

"வரட்டும். வீர மரணத்தைத் தான் பார்த்து விடுவோமே" என்று பார்த்திபன் புன்னகைத்துக்கொண்டே கூறினான்.

சம்யுக்தன் வெடிச் சிரிப்பை முதலில் உதிர்த்து, "நீ முடிவே பண்ணி விட்டாயா?" என்று கேட்டான்.

"முடிவு தான் நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறதே" என்று பார்த்திபன் அதே புன்னகையுடன் கூறினான்.

சம்யுக்தன், பார்த்திபனின் மன உறுதியைப் பார்த்து பிரமித்தான். நடப்பது தெரிந்தும் எந்த பதற்றமும் இன்றி பார்த்திபன் பரணை அமைத்ததை நினைக்கும் போது அவனைத் தன் நண்பன் என்று சொல்வதில் பெருமை உண்டாயிற்று.

அபொழுது குதிரை ஒன்று கனைத்துக் கொண்டு ஓடி வருவது அவர்களின் செவிகளில் விழுந்தது.

பார்த்திபன், "அதற்குள்ளாகவா வந்து விட்டார்கள். அவசரக்காரர்கள்" என்று சலித்துக்கொண்டே கூறினான்.

"வருவது ஒரு குதிரை தான். அதுவும் களைத்துப் போய் வருகிறது. எதிரிகள், படையோடு தான் வருவார்களே தவிர ஒருவராக வர மாட்டார்கள்" என்று சம்யுக்தன் கூறினான்.

"அதானே! நம் வீரத்தை அவ்வளவு குறைவாகவா எண்ணி விட்டார்கள்" என்று கூறிக்கொண்டே ஒரு தீப்பந்தத்தை ஏற்றி குதிரை வரும் திசையை நோக்கினான். அந்த தீப்பந்தத்தின் வெளிச்சத்தில், ஓடுவது யார் குதிரை என்று ஓரளவுக்கு பார்த்திபன் ஊகித்து விட்டான். சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கவும் செய்தான்.

"சம்யுக்தா! சம்யுக்தா!" என்று அழைத்தான்.

"என்ன? யார் குதிரை என்று தெரிகிறதா?"

"உன் உறவுக்காரன். அதானப்பா, நமக்கென்று வந்து வாய்த்திருக்கிறானே என்று பலமுறை சொல்லியிருக்கிறோமே...பூபதி...அவனே தான்"

சம்யுக்தன் முகத்தில் பதற்றம் உருவாகி "அவனுடைய குதிரையா அது? எதற்காக காட்டிற்கு வந்திருப்பான்?" என்று கேட்டான்.

"என்னைக் கேட்டால்? அவன் தான் நாம் செல்லும் இடத்திற்கு எல்லாம் வால் போலவே வருகிறானே. குதிரை தனியாக ஓடுவதைப் பார்த்தால் எதிரிகள், பூபதியிடமிருந்து கணக்கைத் துவங்கி விட்டார்கள் போல் இருக்கிறதே"

"இல்லை, அவனுக்கு எதிரிகளால் ஆபத்து நேர வாய்ப்பில்லை" என்று சம்யுக்தன் பார்த்திபனின் கருத்தை மறுத்தான்

"உண்மையாகவா சொல்கிறாய்?"

"ஆம்"

"அடடா...சிறிது நேரத்தில்  சந்தோசப்பட்டுவிட்டேனே" என்று பார்த்திபன் கிண்டல் தொனிக்கக் கூறினான்.

"பார்த்திபா, அவன் பக்கத்தில் எங்காவது தான் இருப்பான். அவனைக் கண்டுபிடி. இல்லை என்றால் கண்டிப்பாக அவனுக்கு ஆபத்து ஏற்படும்"

"சம்யுக்தா, புரிந்து தான் பேசுகிறாயா. நாமே ஆபத்தில் தான் இருக்கிறோம்."

"அவனைத் தேடி கண்டுபிடி என்று சொன்னேன்" சம்யுக்தன் குரலும் கண்களும் கடுமையாக இருந்தன.

பார்த்திபன் சலித்துக்கொண்டே, "எல்லாவற்றிற்கும்  என்னையே அனுப்பு. பூபதி என்னை வாழவும் விடமாட்டேன் என்கிறான். சாகவும் விடமாட்டேன் என்கிறான். இந்த காட்டில் எங்கு போய் அவனைத் தேடுவது" என்று கூறிக்கொண்டே இன்னொரு தீப்பந்தத்தை பற்ற வைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.