(Reading time: 29 - 57 minutes)

38. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

துஷ்யந்தின் மாமா அழைத்திருக்கிறார் என்று வேலையாள் வந்து சொன்னதும் என்னவாக இருக்கும்? என்று கங்கா பயந்து போனாள். இதுவரையிலும் அவளைப் பார்த்து அவர் நேரடியாக பேசியதில்லை. கனகா, வாணி, மேனேஜர் இவர்கள் யார் மூலமாவது தான் அவர் சொல்லும் விஷயம் அவள் காதுக்கு எட்டும். அப்படியிருக்க, இன்று நேரடியாக அவளை அழைப்பது ஏன் என்ற கேள்வியோடு அவரை பார்க்கச் சென்றாள்.

அண்ணாமலை அவரது அறையில் உட்கார்ந்திருக்க, அங்கே வாணியும் மேனேஜரும் உடன் இருந்தனர். “மேனேஜர் துஷ்யந்தோடு செல்லவில்லையா? தனியாக துஷ்யந்த் சென்று அங்கே என்ன செய்வான்? என்ற மனதில் தோன்றிய கேள்வியோடு மேனேஜரை பார்த்தவள்,

“நீங்க அவரோட போகலையா?” என்றுக் கேட்டாள்.

“என்னோட பையன் போயிருக்கான். அவன் தான் இங்க சூப்ரவைசர். அவன் கூட இருந்து எல்லாம் பார்த்துக்குவான்.” என்றதும் தான் அவளுக்கு நிம்மதி வந்தது. பின்னர் தான் அண்ணாமலையை பார்த்தவள்,

“கூப்பிட்டிங்களாமே.. என்ன விஷயம்?” என்றுக் கேட்டாள்.

உடனே அவர் ஒரு பெட்டியை எடுத்து அவள் முன் வைத்தார். “இதுல கொஞ்சம் பணம் இருக்கு..  உனக்கு இப்போதைக்கு இது தேவைப்படும்.. உன்னோட தங்கச்சிக்கு நல்லப்படியா ஆபரேஷன் முடிஞ்சிடுச்சு  இருந்தாலும், அதுக்குப்பிறகு மாத்திரை, மருந்துன்னு நிறைய செலவு இருக்கும். இப்போ 12வது பரிட்சை எழுதிட்டா, அடுத்து காலேஜ்ல சேர்க்கனுமில்ல.. நீயும் மேல ஏதாவது படிக்க ஆசைப்பட்ருக்கலாம். அதுக்கு இந்த பணம் உதவும், இல்லை உனக்கு தையல் தொழில் தெரியுமாமே, தையல் கடை வச்சுக்கனும்னா கூட வச்சுக்கலாம்.. அது உன் இஷ்டம், இது பத்தாது இன்னும் வேணும்னா கூட கேளு தரேன்..” என்றார் அண்ணாமலை.

“நீங்க என்ன சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியல.. எதுக்கு இப்போ இவ்வளவு பணம் என்கிட்ட கொடுக்கிறீங்க?”

“இந்த பணம் இனி உன்னோட எதிர்காலத்துல உன்னோட தேவைக்கான பணம்.. இதை வாங்கிக்கிட்டு நீ எங்க பையன் வாழ்க்கையில இருந்து போயிடனும்..”

“என்ன பேசறீங்க?” அதிர்ச்சியோடு கேட்டாள்.

“இங்கப் பாரு.. உன்னோட அந்தஸ்து என்ன? நீ எங்க ஆளா? உங்கப்பா அம்மாக்கு சொல்லிக்கிற மாதிரி குடும்பம் இருக்கா.. நீ எங்க வீட்டுக்கு மருமகளா இருக்கற தகுதி உனக்கு இருக்கா.. இதெல்லாம் நல்லவிதமா யோசி, நீ எங்க ராஜாக்கு தகுந்தவ இல்லைங்கிறத மனசுல வச்சிக்க..”

“இதெல்லாம் உங்களுக்கு இப்போ தான் தெரியுமா? முன்னாடியே தெரியும் தான, தெரிஞ்சும் என்னை ஏன் உங்க வீட்டு பையனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சீங்க.. ஏன்னா உங்கப் பையனை சரிப்பண்ண பணக்கார வீட்டு பொண்ணுங்க கிடைக்க மாட்டாங்க.. அதனால அப்போ இந்த கல்யாணத்தை செஞ்சுட்டு, இப்போ உங்க பையன் சரியானதும் விரட்டி விட பார்க்கீறீங்களா?”

“ம்ம் பரவாயில்லையே சரியா புரிஞ்சிக்கிட்ட.. ஆமாம் எங்க பையனை சரியாக்க, அவனை எல்லா விதத்திலேயும் கூட இருந்துப் பார்த்துக்க எங்களுக்கு ஒரு பொண்ணு தேவைப்பட்டுது.. அதுக்கு பணம் கொடுத்து ஒரு பொண்ணை கூட்டிட்டு வர நினைச்சோம். உங்க அத்தைக்கிட்ட கேட்டா கல்யாணம் அது இதுன்னு பேசுச்சு, எங்களுக்கு உன்னை மாதிரி ஒரு பொண்ணு தேவை.. அதனால தான் இந்த நாடக கல்யாணத்தை நடத்தினோம். எப்போ எங்க ராஜா சரியானானோ, அப்பவே இந்த நாடக கல்யாணத்துக்கு ஒரு முடிவு வந்துடுச்சு.. பிரச்சனை பண்ணாம பணத்தை எடுத்துக்கிட்டு போய்டு..

“நாடக கல்யாணமா? எப்படி மனசாட்சி இல்லாமல் இப்படி பேசறீங்க? எனக்கு பணம் தேவைப்பட்டுச்சு தான், என்னோட தங்கையோட உயிரை காப்பாத்தனும்ங்கிற அவசியம் இருந்துச்சு தான்.. அதுக்காக எப்படி வேணும்னாலும் பணம் சம்பாதிக்கனும்னு நான் நினைச்சதே இல்ல. உங்க வீட்டு பையனுக்கு என்னோட உதவி தேவை. எனக்கும் பணம் தேவைங்கிற காரணத்துக்காக தான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். ஆனா இந்த கல்யாணத்தை நாடக கல்யாணம்னு சொல்லி எங்க உறவை நீங்க கொச்சப்படுத்திறீங்க..”

“இங்கப்பாரு நீ ரொம்ப புத்திசாலி பொண்ணா இருக்க.. நான் சொல்ல வர்றத அப்படியே புரிஞ்சிக்கிற.. இதே பக்குவத்தோட எங்க பையன் வாழ்க்கையில உன்னை இருக்க விட மாட்டோம்ங்கிற உண்மையை புரிஞ்சிக்கிட்டு இந்த பணத்தை எடுத்துக்கிட்டு கிளம்பிடு.. வேணும்னா இன்னும் பணம் தேவைப்பட்டாலும் கேளு ஏற்பாடு செஞ்சு தரேன்.. எடுத்துக்கிட்டு அமைதியா விலகிடு..”

“நீங்க சொன்னா நான் விலகிடனுமா? என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாருல்ல, உங்க வீட்டுப் பையன் அவர் வந்து சொல்லட்டும் இது நாடக கல்யாணம்னு, அப்போ நான் விலகுறத பத்தி யோசிக்கிறேன்.”

அதைக்கேட்டு அண்ணாமலை சத்தமாக சிரித்தார். மேனேஜரும் உடன் சேர்ந்து சிரித்தான். வாணி வருத்தமான பாவத்துடன் அங்கே நின்றிருந்தார். கங்கா எதற்கு இந்த சிரிப்பு? என்பது போல் புரியாமல் பார்த்தாள்.

“நாங்க நடந்த கல்யாணத்தை நாடகம்னு சொல்றோம்.. நீ உண்மைன்னு சொல்ற.. ஆனா எங்க ராஜாக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது கூட தெரியாது.. நீ அவனோட பொண்டாட்டி, உங்களுக்கு கல்யாணம் ஆகியிருக்குன்னு கூட அவனுக்கு தெரியாது. உனக்கு ஒன்னு தெரியுமா? ரெண்டு நாள் முன்னாடி நான் இங்க வந்து இறங்கினதுமே, என்னைப் பார்க்க வந்தவன் கேட்ட முதல் கேள்வியே, “மாமா  கங்கா யாரு? அவ ஏன் இங்க இருக்கா? அப்படின்னு தான் கேட்டான். அந்த கேள்விக்கு அவன்கிட்ட நான் என்ன சொன்னேன் தெரியுமா?” என்ற போது,

“துஷ்யந்த் அப்படி கேட்டானா? இவர் சொல்வது உண்மையா? என்ற கேள்விகள் அவள்  மனதில் தோன்றியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.