(Reading time: 29 - 57 minutes)

நீ ஒரு தப்பான தொழில் செய்யற பொண்ணு.. உனக்கு தேவை பணம், அதுக்காக தான் நீ அவன் கூட இருக்கன்னு சொன்னேன். அவனும் அதை அப்படியே நம்பிட்டான். ஏன் மாமா இப்படி செஞ்சீட்டீங்கன்னு என்மேல கோபப்பட்டான். சீக்கிரம் உனக்கு செட்டில் பண்ணி அனுப்ப சொன்னான். அதுவும் அவன் இல்லாத நேரம் அனுப்பிட்டா நல்லதுன்னு சொன்னான்.” என்று சொல்லி திரும்பவும் வாய்விட்டு சிரித்தார்.

அவர் சொல்வதை அவளால் நம்பமுடியவில்லை. துஷ்யந்திற்கு நடந்த திருமணம் நினைவில் இல்லையா? அது எப்படி சாத்தியமாகும். அப்படியே இருந்தாலும் நான் யார் என்று இவரிடம் கேட்டிருப்பானா? புரியாமல் குழம்பினாள். “இல்லை பொய் சொல்றீங்க.. எப்படி அவருக்கு எங்க கல்யாணம் ஞாபகம் இல்லாம போகும்..”

“ஏன்னா அப்போ அவனுக்கு போதை பழக்கம் மட்டுமில்ல, கொஞ்சம் மனரீதியான பிரச்சனையும் இருந்துச்சு, அப்போ அவன் என்ன செய்யறான்னு அவனுக்கே தெரியாது. அதுமட்டுமில்லாம அவனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க போதை மருந்து கொடுத்து தான் உட்கார வச்சிருந்தோம்.. அப்போ நடந்தது எதுவும் அவனுக்கு ஞாபகம் இருக்காது.. உனக்கு நான் சொல்றதுல நம்பிக்கை இல்லன்னா, இதோ வாணிக்கிட்ட கேளேன்.. அவளுக்கும் இது தெரியும்” என்று அவர் வாணியை காட்டி சொன்னதும், கங்கா வாணியை பார்க்க, அவர் குற்ற உணர்வில் அவள் முகத்தை பார்க்காமல் தலை குனிந்தப்படியே ஆம் என்று தலையை ஆட்டினார்.

வாணி சொன்ன பின்பும் அவளால் அது பொய்யாக இருக்கும் என்று நினைக்க முடியவில்லை. துஷ்யந்திற்கு திருமணம் ஞாபகத்தில் இல்லை என்பதை அவள் மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. நான் யார் என்று அவன் கேட்டிருப்பானா? ஒருப்பக்கம் அதை அவளால் நம்ப முடியவில்லை.. ஆனால் இரண்டு நாட்களாக அவன் நடவடிக்கையில் வந்த மாற்றம் அப்படி இருக்குமோ? என்றும் யோசிக்க வைத்தது. இரண்டு நாட்களாக இவளிடம் அவனுக்கு தேவைப்படது என்ன? என்பதை சிந்தித்து பார்த்த போது, என்னைப் பற்றி இவர் சொன்னதை நம்பி இருந்தானா? அதனால் தான் அவனுக்கு என்னிடம் இதுமட்டும் தான் தேவை என்பது போல் நடந்துக் கொண்டானா? என்று யோசித்த போது உடம்பெல்லாம் கூசியது.

ஆனால் அதே நேரம் அவன் ஸ்பரிசம் வேறு எதையோ உணர்த்தியது. கொஞ்ச நேரத்திற்கு முன்பு கிளம்பும் போது கூட அவன் இவளை அணைத்த போது, அவனின் எதிர்பார்ப்பு, அவன் தேவை நான் நினைத்தது போல் அல்ல என்று தான் நினைக்க தோன்றியது. மொத்தத்தில் அவள் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. ஆனாலும் மனம் தளராமல் அண்ணாமலையிடம் தைரியமாகவே பேசினாள்.

“நீங்க சொல்ற மாதிரி எங்களுக்கு நடந்த கல்யாணம் அவருக்கு ஞாபகம் இல்லாமல் இருக்கலாம். ஆனால்  கல்யாணம் நடந்தது தானே! அவருக்கு தெரியலன்னாலும் எனக்கு தெரியும் தானே! நான் அவர்க்கிட்ட,  நான் அவர் மனைவின்னு சொல்றேன். அப்புறம் அவர் என்னை ஏத்துக்கிடடு தானே ஆகணும்..” என்றதும் அண்ணாமலை கோபமாக எழுந்தார். அவருக்கு நன்றாகவே தெரியும், கங்கா அவன் மனைவி என்று துஷ்யந்திற்கு தெரிந்தால் அதன்பின் அவளை அவன் விட்டுவிட மாட்டான் என்று, அவனுக்கு இது தெரியாமல் இருக்க வேண்டும். என்ன செய்வது?

“இங்கப்பாரு உனக்கு நடந்தது நாடக கல்யாணம் தான்.. அதை உண்மைன்னு சொல்லிக்கிட்டு இங்க நின்னு சட்டம் பேசிக்கிட்டு இருக்காத, எங்க பையன் என்னோட பேச்சை கேட்பானா? இல்லை உன் பேச்சையா? நீ நடந்த கல்யாணம் உண்மைன்னு சொல்றியே, அதுக்கு உன்கிட்ட ஆதாரம் இருக்கா?” என்றுக் கேட்டதும் கங்கா வாணியை பார்த்தாள். அதை புரிந்தவராக,

“இங்கப்பாரு என்னை மீறி யாரும் உனக்கும் எங்க வீட்டு பையனுக்கும் கல்யாணம் நடந்ததுன்னு வந்து சாட்சி சொல்ல மாட்டாங்க.. ஏன் உன்னோட அத்தை அந்த பொம்பள கனகா கூட சொல்லமாட்டா.. அவ வாயை தொறக்காத படி நாங்க செஞ்சுட்டோம்.. அப்புறம் அந்த ஐயர் இந்த ஊரு இல்ல.. அப்படியே அவரை நீ தேடி கூட்டிட்டு வந்தாலும், அவர் உனக்கு ஆதரவா சொல்வாருன்னு எதிர்பார்க்காத.. அதனால எங்களுக்கு எதிரா நீ எதுவும் செய்ய முடியாது. அதனால பிரச்சனை பண்ணனும்ணு நினைக்காம, இந்த பணத்தை வாங்கிக்கிட்டு பேசாம போய்டு அதுதான் உனக்கு நல்லது..”

“இல்ல நான் போக மாட்டேன்.. என் கழுத்துல தாலி கட்டினவர் வந்து சொல்லட்டும் அப்போ நான் போறேன்..”

“சுமூகமாக இந்த பிரச்சனையை முடிச்சு வைப்போம்னு பார்த்தா நீ கேக்க மாட்டல்ல.. அமைதியா கிடைச்சது லாபம்ணு போனா உனக்கு நல்லது.. இல்லன்னா அப்புறம் என் நாம இவங்களை எதிர்த்தோம்னு நீ நினைக்கிற அளவுக்கு செஞ்சுடுவேன்..”

“என்ன மிரட்டி பார்க்கிறீங்களா? நான் உங்க மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.. நீங்க என்னை கொன்னா கூட பரவாயில்ல..”

“அதெல்லாம் தேவையில்லைன்னு பார்த்தேன்.. ஆனா நீ ஓவரா போற.. இதுக்கும் மேல உன்னை பேசாம செய்ற வழி எனக்கு தெரியும்..” என்றவர் யாருக்கோ அலைபேசியில் தொடர்பு கொண்டார். அங்கு அழைப்பு இன்னும் ஏற்கபடாமல் இருக்க, அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டார். சில நொடிகளுக்கு பிறகு அழைப்பு ஏற்கப்பட்டு, “ஹலோ..” என்று ஒரு ஆண்குரல் கேட்டது.

“ஏய் பாண்டி.. எங்கடா இருக்க?”

“நீங்க வாட்ச் பண்ண சொன்ன வீட்டுக்கு முன்ன தாங்க ஐயா இருக்கோம்..”

“இருக்கோம்னா எத்தனை பேரு இருக்கீங்க?”

“நாங்க ஒரு அஞ்சு பேர் இருக்கோமுங்க..”

“சரி அங்க என்ன நிலவரம்?”

“நீங்க வாட்ச் பண்ண சொன்ன வீட்ல ஒரு பொண்ணும் ஒரு பொம்பளையும் இருக்காங்க.. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் அந்த பொம்பள வெளியப் போச்சு.. அந்த பொண்ணு மட்டும் தனியா இருக்கு.. பக்கத்து வீடெல்லாம் பூட்டிக் கிடக்கு.. யாரும் இல்ல போல.. அந்த பொண்ணு இப்போக் கூட குப்பைக் கொட்ட வெளிய வந்துச்சுங்க..” என்றதும், “சரி திரும்ப அந்த பொண்ணு வந்தா வீடியோ எடுத்து என் போனுக்கு அனுப்புங்க..” என்று சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தவர்,

“இவ்வளவு நேரம் அவனுங்க எந்த பொண்ணை பத்தி பேசறானுங்க தெரியுமா? உன்னோட தங்கச்சிய பத்தி தான்.. காலையில் 7 மணியிலிருந்து ரெண்டுப்பேரும் உங்க வீட்ட தான் கண்காணிச்சிக்கிட்டு இருக்காங்க..” என்று அண்ணாமலை கூறியதில் கங்காவின் உடல் நடுங்கியது.

“எப்போ நான் சொன்னாலும் உள்ள போயிடுவானுங்க, பாவம் உன் தங்கச்சி தனியா இருக்கு.. பக்கத்து வீட்ல வேற ஆள் இல்ல.. உன் தங்கச்சி இப்போ தான் உடம்பு சரியாகி வந்திருக்கு.. உயிருக்கு ஆபத்துன்னா பரவாயில்ல, ஆனா அங்க இருக்கவனுங்க பொம்மைக்கு சேலை கட்டடினாலே முறைச்சு பார்ப்பானுங்க.. ஒன்னுக்கு அஞ்சு பேர் நினைச்சு பாரு உன்னோட தங்கச்சி தாங்குவாளா?” என்று இரக்கமே இல்லாமல் கேட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.