உண்மையில் வாணி மீது அவளுக்கு எந்த கோபமும் இல்லை. அவரின் நிலை புரிந்து தான் அவரிடம் அப்படி பேசிவிட்டு வந்தாள். ஆனால் அவரால் எந்த உண்மையும் சொல்ல முடியவில்லையென்றாலும், துஷ்யந்திற்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை மட்டுமாவது தன்னிடம் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. வாணி சொல்லவில்லையென்றாலும் மருத்துவராவது சொல்லியிருக்கலாம் என்று நினைத்தாள்.
ஆனால் அவர்கள் இவளிடம் உண்மையை சொல்லியிருந்தால் மட்டும் என்னவாகியிருக்கும்? நான் உன் மனைவி என்று அவனிடம் அடிக்கடி சொல்லியிருப்பாளா? சொல்லி தான் அவனின் மனைவி இவள் என்று அவனுக்கு தெரிய வேண்டுமா? இந்த மூன்று மாதத்தில் அதை துளி கூட அவன் உணரவில்லையா? அப்படி உணர்ந்திருந்தால் இவள் யார் என்று துஷ்யந்த் தன் மாமாவிடம் கேட்டிருப்பானா? ஏனோ அதை நினைக்கும் போதே அவனுடன் வாழ்ந்த அந்த மூன்று மாத வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமில்லை என்றே தோன்றியது.
எங்கள் திருமணத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்று அண்ணாமலையிடம் ஏன் கூறிவிட்டு வந்தோம் என்று கூட நினைத்தாள். நீ என்ன இதை நாடக திருமணம் என்று சொல்வது? இப்படி ஒரு திருமண வாழ்க்கை எனக்கு தேவையே இல்லை என்று தாலியை கழட்டி அண்ணாமலையின் முகத்தில் வீசிவிட்டு வரும் அளவுக்கு அப்போது அவளுக்கு கோபம் இருந்தது தான் உண்மை. இருந்தும் இந்த தாலி மட்டும் எனக்கு வேண்டும் என்று கேட்டு வாங்கி வந்ததுக்கு இரண்டு காரணங்கள் இருந்தது.
இந்த காலத்தில் இந்த மஞ்சள் கயிற்றுக்கு இத்தனை மதிப்பு கொடுக்க வேண்டுமா? என்பது எப்போதும் கங்காவின் மனதில் இருக்கும் கேள்வி தான். தாலிக்கும் கணவனின் உயிருக்கும் முடிச்சு போட்டு பேசுவதை மூடநம்பிக்கையாக தான் நினைப்பாள். ஆனாலும் கங்காவின் அன்னைக்கு இந்த தாலி விஷயத்தில் நிறையவே நம்பிக்கை உண்டு. வருடம் தவறாமல் வீட்டில் சுமங்கலி பூஜை செய்துவிடுவார். நெற்றியில் குங்குமம் வைக்கும் போதெல்லாம், தாலிக்கும் சேர்த்து தான் குங்குமம் வைப்பார். அவரின் நம்பிக்கை தான் கணவனுக்கு முன் சுமங்கலியாய் அவர் போய் சேர்ந்தார் என்று கூட அவரின் மறைவின் போது அனைவரும் பேசினர். அப்படிப்பட்ட அன்னை ஒருவேளை உயிரோடு இருந்தால் கண்டிப்பாக இவள் கழுத்தில் இருக்கும் தாலியை கழட்ட அனுமதிக்க மாட்டார். அந்த அன்னைக்கு மதிப்பு கொடுக்க தான் அவள் தாலியை கழட்ட மறுத்ததற்கு காரணம்.
அதேபோல் அவள் இந்த தாலி வேண்டும் என்று சொன்னதற்கு இன்னொரு காரணம், அண்ணாமலை இதை நாடக திருமணம் என்று சொல்லலாம்.. துஷ்யந்திற்கு இந்த திருமணம் ஞாபகம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இவளை பொறுத்தவரை அது உண்மை கல்யாணம் தானே, ஒருவேளை தாலியை கழட்டிவிட்டு இந்த திருமணத்தால் வந்த உறவு எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டு வந்தால், அதன்பின் அண்ணாமலை சொல்வது போல் இந்த மூன்று மாதம் துஷ்யந்தோடு வாழ்ந்தது வெறும் பணத்திற்காக மட்டும் தான் என்பதை இவளே ஒத்துக் கொள்ளும்படி ஆகிவிடும்.
இனி துஷ்யந்தோடு சேரவே முடியவில்லையென்றாலும் பரவாயில்லை. அவன் தான் என் கணவன் என்று மற்றவர்களிடம் சொல்ல முடியாமல் போனாலும் பரவாயில்லை. அவனுடன் வாழ்ந்த இந்த மூன்று மாத வாழ்க்கையே போதும்.. அதுவே வாழ்நாளுக்கும் போதும்.. இனி தன் வாழ்க்கையில் கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. துஷ்யந்தை தவிர வேறொரு ஆடவனை என்றுமே கணவனாகவோ காதலனாகவோ தன் மனதில் நினைத்து பார்க்க முடியாது. அப்படி ஒருவேளை தன் மனம் இன்னொருவனை தேடும் என்றால், அப்போது துஷ்யந்துடனான இந்த மூன்று மாத வாழ்க்கை பணத்திற்காக மட்டுமே வாழ்ந்த வாழ்க்கையாகிவிடும். அப்படி ஒரு அவலநிலைக்கு என்றுமே ஆளாக கூடாது என்று மனதில் உறுதியாக முடிவெடுத்துக் கொண்டாள்.
இனி யமுனாக்காக மட்டுமே தான் வாழ வேண்டும் என்று மனதில் நினைத்த போதே, அடுத்து வாழ்க்கை எப்படி நகர போகிறது என்ற கேள்வி பெரிதாக தெரிந்தது. இனி கனகா அத்தையோடு இருக்கவே கூடாது. ஆரம்பத்தில் அவர்களையும் அண்ணாமலை ஏமாற்றி தான் இருப்பார்.. ஆனால் அவர்களுக்கு இவளுக்கு முன்னரே கண்டிப்பாக விஷயம் தெரிந்து தான் இருக்கும்.. ஆனால் அவர்களின் அமைதியும் அண்ணாமலை சொன்னதையும் வைத்து பார்த்தால், அண்ணாமலை கொடுத்த பணம் அவர்களை அமைதியாக்கிவிட்டது என்பது நன்றாகவே புரிந்தது.
அதனால் இனியும் அவர்களோடு இருந்தால் யமுனாவிற்கும் அது நல்லதல்ல.. ஆனால் இரு பெண்கள் தனியாக வாழ்வது இந்த உலகில் கஷ்டம் தான்.. முன்பானால் அது பெரிய விஷயமாக தெரிந்ததில்லை. ஆனால் அண்ணாமலை, கனகா போன்றவர்களால் ஏமாற்றப்பட்ட பின் தனியாக இந்த உலகத்தில் வாழ்வது அவளுக்கு பெரிய விஷயமாக தான் தெரிந்தது.
ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும்.. கல்லூரி படிப்பை முழுதாக முடிக்க கூட இல்லை. இனி பரிட்சையே ஆறு மாதம் கழித்து தான் எழுத வேண்டும். ஆனால் தற்போதைய நிலைமையை சமாளிக்க வேலை வேண்டும். யமுனாவின் படிப்பு, மருந்து மாத்திரை செலவுக்கு பணம் வேண்டும். தையல் தொழிலையே திரும்ப ஆரம்பிக்கலாம் என்றால், அவளின் வாடிக்கையாளர்கள் எல்லாம் முன்பு குடியிருந்த வீட்டிற்கு அருகில் தான் இருக்கின்றனர். இந்த நிலைமையில் அங்கே செல்லவும் பிடிக்கவில்லை.
அதைவிட யமுனாவின் எதிர்காலம் தான் இப்போது பெரிய கேள்வியாக அவள் முன் தோன்றி பயமுறுத்தியது. கழுத்தில் தாலியோடு கணவன் யாரென்று சொல்லாத நிலையில் இவள் இருக்கையில் அது யமுனாவின் வாழ்க்கையை பாதிக்காதா? கணவன் பார்வைக்கே இவளை தவறாக அறிமுகப்படுத்தப்பட்ட பின், இனி இவள் ஒழுக்கத்தை எத்தனை பேர் எத்தனை விதமாக பேசுவார்கள் என்று சொல்வதிற்கில்லை. இதில் இவளோடு யமுனாவும் இருந்தால், கண்டிப்பாக அவளது எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பது உறுதி. அதற்கு முன்பு இவள் விஷயத்தை யமுனவிடம் எப்படி சொல்வது? இப்படி பல கேள்விகளோடு அடுத்து என்ன? என்ற நிலை புரியாமல் ஏதும் பேருந்தோ வண்டியோ பிடிக்காமல் தளர்ந்த நடையோடு வீட்டை நோக்கிச் சென்றிருந்தவள் காதில் அங்கே அருகில் இருந்த தேவாலயத்தில் மணி அடிக்கும்.சத்தம் கேட்டதும் தான், மதர் ஜெர்மனின் ஞாபகம் அவளுக்கு வந்தது.