(Reading time: 29 - 57 minutes)

“இல்ல நீங்க என்னை பயமுறுத்த அப்படி சொல்றீங்க.. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல..” என்று தன்னையே தைரியப்படுத்திக் கொண்டு பேசினாள்.

“வார்த்தையால சொன்னா நீ நம்பமாட்ட.. இரு விடியோ வந்தா தெரியும்.. அப்பவும் இப்படியே நீ சொல்லிக்கிட்டு இருக்கியான்னு பார்ப்போம் என்று திமிராக பேசினார். அவர் சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் அவர் போனில் எம்.எம்.எஸ் வந்ததற்கான அறிகுறி வந்தது. உடனே சிரித்தப்படியே அதை எடுத்து பார்த்தவர்,

“சொன்னா நம்பலல்ல.. இப்போ பாரு” என்று அந்த வீடியோவை காட்டினார். அதில் யமுனா வெளியில் துணி காய வைக்க வந்தவள், பின் வீட்டிற்குள் சென்றுவிட்டாள். அவளுக்கு தெரியாமல் இவர்கள் ரகசியமாக இந்த வீடியோவை எடுத்திருக்க வேண்டும். அதைப் பார்த்த பின்பும் அவளால் தைரியமாக பேச முடியவில்லை. தன் தங்கையா? இல்லை தன் வாழ்க்கையா? என்று யோசித்துப் பார்த்தால், இந்த நேரம் தன் தங்கை தான் அவளுக்கு முக்கியமாக பட்டது.

“சரி நான் சம்மதிக்கிறேன். எந்த பிரச்சனையும் செய்யாம உங்க பையனோட வாழ்க்கையிலிருந்து விலகிப் போய்ட்றேன். தயவு செஞ்சு அவங்களையெல்லாம் அங்க இருந்து போக சொல்லிடுங்க..”

“நம்பலாமா? நீ உண்மையை தானே சொல்ற.. இப்போதைக்கு உன் தங்கச்சிய காப்பாத்த இப்படி பேசிட்டு, அடுத்து ராஜா வந்ததும் அவன்கிட்ட நியாயம் கேக்கறன்னு நீ கல்யாணத்தை பத்தி சொல்ல மாட்டன்னு என்ன நிச்சயம்.. ஆனா அப்படியெல்லாம் நீ யோசிச்சிருந்தா அத இப்பவே உன்னோட மனசுல இருந்து நீக்கிடு.. ஏன்னா எங்க ராஜாக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சுது அதுக்குப்பிறகு அவன்கூட வாழ நீயும் இருக்கமாட்ட, நீ போயிட்டா உன்னோட தங்கச்சி அனாதை ஆகிடுவால்ல, அதனால அவளையும் உன்னோட அனுப்பிடுவேன். சும்மா பூச்சாண்டி காட்றேன்னு நினைக்காத.. என்  நினைப்புக்கு மீறி நடந்தா, அப்புறம் கொலை பண்ணக் கூட நான் தயங்க மாட்டேன்.”

“கண்டிப்பா நான் உண்மையை சொல்ல மாட்டேன். நான் உயிரா நினைக்கிற என் தங்கச்சி மேலயும், இனி உங்க பையன் தான் என் வாழ்க்கைன்னு நினைச்சு ஏத்துக்கிட்ட அவர் கட்டின இந்த தாலி மேல சத்தியமா சொல்றேன். இனி உங்க வீட்டு பையன் தான் என்னோட கணவன்னு என்னோட வாயால நான் சொல்லவே மாட்டேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் என்னோட வாய்ல இருந்து அந்த வார்த்தை வராது.. அவருக்கு இந்த கல்யாணம் ஞாபகம் இல்லாம இருக்கலாம். ஆனா நான் தான் அவரோட மனைவின்னு தெரிஞ்சா அவர் என்னை கைவிட மாட்டார்னு நீங்க என்னை மிரட்டறத வச்சே எனக்கு புரியுது. அந்த ஒரு விஷயமே எனக்கு போதும். நான் அதை நினைச்சே சந்தோஷப்பட்டுக்கிறேன் போதுமா?”

“ம்ம் இப்போ நீ எடுத்த முடிவுல இருந்து பின்வாங்காம இருந்தா உனக்கு நல்லது. சரி இந்த பணத்தை எடுத்துக்கோ.. இது போதுமா? இல்லை இன்னும் வேணுமா? சங்கடப்படாம கேட்டு வாங்கிக்க..”

“இல்ல வேண்டாம்.. எனக்கு இந்த பணம் வேண்டாம். இதுக்கும் மேல உங்கக்கிட்ட பணம் வாங்கினா, நானே என்னை கேவலப்படுத்திக்கிட்டது போல ஆகிடும்.. நான் என் தங்கச்சிக்க்காக பணம் வாங்கினாலும், துஷ்யந்தோட நடந்தது உண்மை கல்யாணம் தான், அதை மனசுல வச்சிக்கிட்டு தான் நான்  துஷ்யந்தோட இருந்தேன்.  இப்போ அதை நிரூபிக்க சாட்சி வேணும்னா இல்லாம இருக்கலாம். ஆனா எங்க கல்யாணத்துக்கு அம்மனும் அந்த இயற்கையும் சாட்சியா இருந்தது. கண்டிப்பா எங்களுக்கு நடந்த கல்யாணத்துக்கு அங்கிகாரம் கிடைக்கும். இப்போதைக்கு இந்த தாலி என்னோட கழுத்துல இருக்க நீங்க அனுமதி கொடுத்தா போதும்..”

“அரை பவுன் தாலி தானே அது உன்கிட்ட இருக்கறதால எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. உனக்கு பணம் வேண்டாம்னு சொன்னா எங்களுக்கு தான் லாபம்.. நீ இதுக்கு மேல எந்த பிரச்சனையும் செய்ய மாட்டேன்னு நினைக்கிறேன். அதுக்கும் மேல எல்லாம் உன் கையில் இருக்கு..” என்று மிரட்டி அவளை அனுப்பி வைத்தார்.

இருந்தாலும் அவர் நினைத்தது போல அனைத்தும் நடக்க வேண்டுமே என்று பயமாகவும் இருந்தது. கங்கா இனி துஷ்யந்தன் வாழ்க்கையில் வரவே கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தார். இருந்தும் அனைத்து காரியத்திற்கும் உடன் இருந்த மேனேஜரிடம்,

“முத்து எல்லாம் சரியா நடக்குமாடா? இந்த பொண்ணு திரும்ப ஏதும் பிரச்சினை செய்யாதே” என்று ஒருமுறை கேட்டுக் கொண்டார்.

“என்ன முதலாளி என்னை நம்பி தானே இந்த காரியத்துல இறங்கினீங்க.. நான் கவனமில்லாம இருப்பேனா? இந்த பொண்ணு இனி நம்ம தம்பி வாழ்க்கையில வரவே முடியாத அளவுக்கு எல்லாம் பண்ணி வச்சிருக்கேன். இனி எல்லாம் கனகா பார்த்துக்கும்.. நாம கவலைப்படவே வேண்டாம். இருக்கற பண கஷ்டத்துல அந்த பொண்ணு பணம் வேண்டாம்னு சொன்னதும் நல்லதுக்கு தான். நீங்க இனி தம்பியை நினைச்சு கவலையே பட வேண்டாம் முதலாளி..” என்று அவன் சொன்னதில் அண்ணாமலை கொஞ்சம் நிம்மதி ஆனார்.

மூன்று மாதங்கள் உபயோகித்த பொருட்களெல்லாம் இங்கேயே விட்டுவிட்டு ஒன்றுமே கையில் எடுத்துக் கொள்ளாமல் கங்கா புறப்பட்டாள். அவள் எஸ்டேட் பங்களா வாசலை அடையும் போது வாணி அவளை நோக்கி ஓடி வந்தார்.

“கங்கா நில்லும்மா..” என்ற குரலுக்கு அவளும் நின்றாள். அவள் அருகில் வந்தவரோ,

“கங்கா.. என்னை மன்னிச்சிடுன்னு சொல்றதுக்கு கூட எனக்கு அருகதை இல்லம்மா.. உனக்கு அநியாயம் நடக்குதுன்னு தெரிஞ்சும் மௌனமா இருக்க வேண்டியதா போச்சு.. எனக்கு என்ன ஆனாலும் நான் கவலைப்பட மாட்டேன்ம்மா.. ஆனா என் தங்கச்சி, ஒன்னுவிட்ட தம்பி இவங்க எல்லோரும் இருக்கும் இடம் துஷ்யந்த் தம்பியோட மாமாக்கு தெரியும்.. நீ வாய திறந்தா அவங்களுக்கு ஆபத்துன்னு மிரட்டறப்போ, என்னால ஒன்னும் பண்ண முடியலம்மா..”

“புரியுதும்மா.. எனக்கு உங்க மேல கோபமெல்லாம் இல்ல.. நம்ம உயிரை விட நம்ம கூட இருக்கவங்க உயிருக்காக கவலைப்பட வேண்டியிருக்கே.. நாம சாதாரண மனுஷங்க, நம்மால இவங்க கிட்ட மோத முடியாதுங்கிறது தான் உண்மை. அப்படி மோதினா ஒன்னு உயிர் போகும், இல்லை மானம் போகும்.. நான் உங்களை தப்பா எடுத்துப்பன்னு நீங்க நினைச்சு கவலைப்பட வேண்டாம். நான் இங்க இருந்த ஆரம்ப காலத்துல நீங்க இல்லன்னா நான் என்னவாகியிருப்பேனோ.. அதை நான் மறக்க மாட்டேன்ம்மா..”

“உன்னோட இந்த பேச்சு உன் நல்ல மனசை காட்டுது.. நீ அந்த ஆளுக்கிட்ட சொன்னது உண்மை தான், உன்னோட கல்யாணம் அந்த அம்மன் சன்னிதானத்துல நடந்திருக்கு.. கண்டிப்பா உன்னோட கல்யாணத்துக்கான அங்கீகாரம் கிடைக்கும்.. ஆனா அதுக்கு நீ கொஞ்ச நாள் பொறுக்கனும்.. காத்திருக்கனும்.. அவ்வளவு தான் என்னோட வாழ்க்கை போச்சுன்னு மனசை தளர விட்டுடாத கங்கா..” என்ற அவரின் பேச்சை கேட்டு அவள் விரக்தியில் புன்னகைத்தாள்.

அவர் ஆறுதலுக்காக சொல்லும் வார்த்தையாக தான் அதை அவள் நினைத்தாள். ஆனால் வாணி அதை ஒரு காரணத்தோடு தான் கூறினார். பின் அவரிடம் ஒரு தலையசைவில் விடைப்பெற்று சென்றாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.