(Reading time: 22 - 43 minutes)

"இனி இப்படி பேசி என்னை கோப பட வைக்காத காயத்ரி. உனக்கு படிப்பு சம்பந்தமா என்ன  வேணும்னாலும் கேளு. உன் சித்திக்கு வீட்டுக்கு சம்பந்தமா என்ன வேணும்னாலும் கேட்க சொல்லு. வாங்கி தரேன். அதை விட்டுட்டு இந்த வீட்ல எந்த பொருள் எந்த இடத்துல இருக்கணும்னு நான் தான் முடிவு செய்யணும். அண்டர்ஸ்டாண்ட்.", என்று கண்டிப்புடன் கூறினார் மோகன்.

"ஹ்ம்ம் சரி பா"

"குட், அப்புறம் நீயும், விஷ்ணுவும் ஒரு வாரம் உன் அண்ணண் வீட்ல போய் இருந்துட்டு வாங்க"

இவ்வளவு நேரம் அவர்களின் உரையாடலை மறைந்து நின்று கேட்டு கொண்டிருந்த விசாலம் "என்ன என்ன சொல்றீங்க? அவன் வீட்டுக்கு எதுக்கு என் பிள்ளைங்க போகணும்?", என்று கோபத்துடன் கேட்டு கொண்டே வெளியே வந்தாள்.

"நீ இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தியா? ஆமா, அது என்ன அவன் வீடு. அவனும் உனக்கு மகன் தான?", என்று கேட்டார் மோகன்.

உடனே முகத்தை சிரித்த மாதிரி வைத்து கொண்ட விசாலம் "அதுக்கு சொல்லலைங்க. அவன் என்னையே கண்ட படி திட்டுவான். அவன் வீட்டுக்கு அனுப்புனா ரெண்டு பேரும் வருத்த படுவாங்க. அதான்", என்று இழுத்தாள்

"ஆமா பா சித்தி சொல்றது சரி தான். அவன் நல்லவனே இல்லை பா", என்று சொன்னாள் காயத்ரி.

"காயத்ரி", என்று அதட்டி அழைத்த மோகன்  "அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசுனா பல்லை தட்டிருவேன். ஒழுங்கா அண்ணனு சொல்லு பழகு. அப்புறம் அவன் நல்லவன் இல்லைன்னு நீ கண்டியா? இப்ப என்னை விட நல்ல நிலைமைல இருக்குற அவன் எப்படி கெட்டவனா இருக்க முடியும்? கேப்பார் பேச்சை கேட்டு எதாவது சொல்லி கிட்டு இருந்த? பல்லை தட்டிருவேன் பாத்துக்கோ. ரெண்டு பேரும் இன்னைக்கு சாயங்காலம் கிளம்பி இருங்க. நான் அங்க கொண்டு போய் விடுறேன்", என்று கண்டிப்புடன் சொன்னார் மோகன்.

"எதுக்கு இன்னைக்கு இப்படி எல்லாம் பேசுறீங்க? பாவம் குழந்தைங்க. அவங்களை வற்புறாதீங்க. விஷ்ணு வேற கிரிக்கட் ப்ராக்டிஸ் இருக்குன்னு சொல்லிட்டு இருந்தான்", என்றாள் விசாலாட்சி.'

"நீ சும்மா இரு விசாலம். உனக்கு ஒன்னும் தெரியாது. குழந்தைகளை பொத்தி பொத்தி வளக்க கூடாது. என் மூத்த பையனை சுதந்திரமா வளத்ததுனால தான் அவன் நல்ல நிலைமைல இருக்கான். இப்ப காயத்ரியும் பெரிய பொண்ணாகிட்டா. படிச்சு முடிச்ச உடனே கல்யாணம் செஞ்சு வைக்கணும். அப்ப மனுஷங்களை அவளுக்கு புரிஞ்சிக்க தெரியணும். நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருனு அவளுக்கு கண்டு பிடிக்க தெரிஞ்சிருக்கணும்"

"கல்யாணம் பண்றதுக்கு என்னங்க இப்ப அவசரம்? அப்படியே காயத்ரிக்கு கல்யாணம் பண்ண நினைச்சாலும்  எனக்கு மூணு தம்பிங்க இருக்காங்க. அவங்கள யாருக்காவது கட்டி கொடுத்துட்டா போச்சு"

"வாயை மூடு. என் பிள்ளைங்க கல்யாண விசயத்துல நான் தான் முடிவு எடுப்பேன். உன் கூட பிறந்த தம்பிகளை எல்லாம் நான் மனுசங்க லிஸ்ட்லே வச்சிக்கல. என் பொண்ணுக்கும் ஒரு டேஸ்ட் இருக்கு. அவ மனசு பிரகாரம் தான் நான் மாப்பிள்ளை பாப்பேன். தேவை இல்லாம நீ மூக்கை நுழைச்ச? அப்புறம் நீயும் உன் பிறந்த வீட்டுக்கு போக வேண்டியது தான் விசாலம்"

"இனி காயத்ரி கல்யாணத்தை பத்தி பேச மாட்டேங்க"

"அது. அப்புறம்  விஷ்ணு வேணும்னா அங்க போக வேண்டாம். ஆனா காயத்ரி அவனோட அண்ணண் வீட்டுக்கு போய் தான் ஆகணும். காலேஜ் இப்ப ஸ்டடி லீவ் விட்டுட்டாங்கல்ல? அப்பறம் என்ன? ஷியாமோட பிரண்ட் அவனோட  மனைவி தங்கச்சியை கூட்டிட்டு வந்துருக்கானாம். அவங்க கூட தான் காயத்ரி தங்க போறா.  சாயங்காலம் கிளம்பி இரு. காயத்ரி", என்று சொல்லி விட்டு எழுந்து கொண்டார் மோகன்.

"அதெல்லாம் முடியாது. நான் போக மாட்டேன் பா. அவன் மூஞ்சுல எல்லாம் எனக்கு முழிக்க கூட புடிக்கல", என்று காயத்ரி சொன்ன உடனே அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை அறைந்தார் மோகன்.

அதிர்ச்சியில் கன்னத்தில் கை வைத்து கொண்டு உறைந்து போய் நின்றாள் காயத்ரி. விசாலத்துக்குமே அதிர்ச்சி தான்.

"சொல்லிகிட்டே இருக்கேன்? மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க. இவ இப்படி எல்லாம் பேசுறதுக்கு நீ தான விசாலம் காரணம்?", என்று சொல்லி விசாலத்துக்கும் ஒரு அரை கொடுத்தார்.

"ஒழுங்கா பிள்ளையை வளக்க துப்பில்லை. அதான் இப்படி எதிர்த்து பேசுறா. சாயங்காலம் காயத்ரி கிளம்பி இருக்கணும் அவ்வளவு தான்", என்று சொல்லி விட்டு வெளியே சென்றவர் "இனி என் பிள்ளைங்களை சரியான பாதையில் கொண்டு போயிருவேன்", என்று நிம்மதியாக எண்ணி கொண்டார்.

"எதுவோ சரி இல்லை. என்னோட கணக்கு தப்பா போக போகுதா", என்று நினைத்து கலவரமானாள் விசாலாட்சி.

சாயங்காலம் செல்வத்துக்காக உடைகளை எடுத்து வைக்க சென்ற காயத்ரிக்கு "இந்த அப்பா க்கு என்னவாச்சு? எல்லாம் அந்த அண்ணனால வந்தது", என்று எரிச்சல் வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.