(Reading time: 22 - 43 minutes)

"இப்ப எதுக்கு இவ போட்டோவை பாத்துட்டு இருக்கா?", என்று நினைத்து கொண்டு தூரமாகவே இருந்து வேடிக்கை பார்த்தார்.

அப்போது காயத்ரி அங்கு வந்தாள். அப்போது விசாலம் முகம் இன்னும் சீரியஸாக மாறுவது போல் அவருக்கு தோன்றியது. அது மட்டும் இல்லாமல் விசாலம் கண்களில் கண்ணீரும் வந்திருந்தது.

"காயத்ரியை பார்த்த உடனே கண்ணீர் வந்துடுச்சா?", என்று வியந்தவர்  அப்படியே நின்று பார்த்து கொண்டிருந்தார்.

"என்ன ஆச்சு சித்தி? இப்ப எதுக்கு அம்மாவோட போட்டோவை பாத்து அழுதுட்டு இருக்கீங்க?", என்று கேட்டாள் காயத்ரி.

"ஒன்னும் இல்லை காயத்ரி. எப்பவும் போல தான்", என்று சலிப்புடன் கூறினாள் விசாலாட்சி.

"அந்த போட்டோவை பாத்தா தான் உங்களுக்கு கஷ்டமா இருக்குல்ல? அப்பறம் எதுக்கு இங்க மாட்டி வச்சிருக்கீங்க? பூஜை அறையில வைக்க வேண்டியது தான சித்தி?"

"என்ன செய்ய? நானும் உங்க அப்பா கிட்ட இந்த போட்டோவை இங்க இருந்து எடுக்கணும்னு பல தடவை சொல்லிட்டேன். அவர் கேட்டா தான?"

"நான் சொல்றேன் சித்தி. அம்மா போட்டோவை எடுத்துட்டு நம்ம குடும்பமா இருக்குற போட்டோவை மாட்டலாம்"

"அப்படி மாட்டுனா திஷ்டி பட்டுடும் செல்லம். இங்க என்னோட போட்டோவை பெருசா எடுத்து மாட்டுனா நல்லா இருக்கும்"

"சரி தான் சித்தி. நான் அப்பா கிட்ட சொல்லி மாத்த சொல்றேன். முன்னாடியே சொல்லிருக்கணும். நாளைக்கே  சொல்லுறேன் சரியா?", என்று சொல்லி விட்டு போன பிறகு விசாலாட்சி போலி கண்ணீரை துடைத்து விட்டு ஒரு மார்கமாக சிரித்தாள்.

அதை பார்த்ததும் மோகனுக்கு அனைத்தும் விளங்கியது. "என்னோட மனைவி போட்டோவை எடுத்துட்டு உன் போட்டோ அங்க இருக்கணும்னு நினைக்கிறியா? என்னை மன்னிச்சிரு சாவித்ரி. இவளோட  தந்திரம் தெரியாம நம்ம பையனை இது வரைக்கும் கஷ்ட படுத்திட்டேனே?", என்று எண்ணி கொண்டு தன் லாயரை அழைத்தார்.

"சொத்து அனைத்தையும் மூணு பாகமாக பிரிச்சிரு விஜேஷ். காயத்ரி சொத்துக்கு கார்டியனா ஷியாம் பேரை போட்டுரு.  அது மட்டும் இல்லாம லாக்கர்ல உள்ள தங்க நகை எல்லாத்தையும் ரெண்டு பாகமா பிரிச்சு விசாலாட்சி, காயத்ரினு ரெண்டு அக்கௌன்ட் ஓபன் பண்ணி போட்டு விட்டுரு. எல்லாம் ரெடி பண்ணி ஆபிஸ் எடுத்துட்டு வா ", என்று சொல்லி விட்டு வைத்து விட்டார்.

அதுக்கு பின்னர் தான் நிம்மதியாக படுக்க சென்றார். காலை எழுந்து குளித்து முடித்து மோகன் கீழே வரும் போது காயத்ரி அவரிடம் பேசுவதுக்காக காத்திருந்தாள். அது எதுக்கு என்று புரிந்தவரும் அமைதியாக உணவை விழுங்கினார்.

"அப்பா", என்று ஆரம்பித்தாள் காயத்ரி.

"என்ன பாப்பா? எதாவது வேணுமா?"

"அதெல்லாம் வேண்டாம். இங்க ஹால்ல இருக்குற அம்மா போட்டோவை எடுத்துறலாம் பா. அதுக்கு பதிலா நம்ம சித்தி போட்டோ வைக்கலாம். அம்மா போட்டோ கண்ணுக்கு முன்னாடி இருக்குறது எல்லாருக்குமே கஷ்டமா தான பா இருக்கும்?"

"ஓ, உன் அம்மா போட்டோ இங்க இருக்குறது உனக்கு கஷ்டமா இருக்கா? எனக்கு தினமும் வீட்டை விட்டு வெளிய போகும் போதும் வரும் போதும் அவ வழி அனுப்புற மாதிரியும், வரவேற்க்குற மாதிரியும் இருக்குது. உனக்கு அப்படி இல்லையா?"

"அது வந்து பா...",

"சரி பரவால்ல. கஷ்டமா இருக்குன்னா மாத்திர வேண்டியது தான். இதை என்னோட ரூம்ல மாட்டிட்டு விசாலம் போட்டோவை இங்க மாட்டிறலாம் சரியா?"

"அப்பா? உங்க ரூம்ல அம்மாவோட போட்டோ மாட்ட போறீங்களா? அது சித்தியை ரொம்ப நோகடிக்கும் பா"

"அப்படின்னா நான் தனி ரூம்ல இருந்துட்டு அங்க என் சாவித்ரி போட்டோவை மாட்டிக்கிறேன் சரியா? எனக்கு தினமும் உங்க அம்மாவை பாக்கணும் பாப்பா"

"அப்பா, இப்படி பேசினா எப்படி பா?"

"என்ன எப்படிப்பா? காயத்ரி நீ சின்ன பொண்ணு. என்னோட உணர்வுகளோட தயவு செஞ்சு விளையாடாத. எங்கயும் என் சாவித்ரி போட்டோவை மாட்டா கூடாதுன்னு சொன்னா என்ன செய்றது? உனக்கு வேணும்னா உன் அம்மா முகம் மறந்திருக்கலாம். ஆனா எனக்கு என் மனைவி முகம் மறக்காது. அவ எனக்கு முக்கியம். நான் வாழ்க்கையில நல்ல நிலைமைக்கு வர காரணமே என் சாவித்ரியோட காதலும் திறமையும் தான். அவ போட்டோ இந்த இடத்துல தான் இருக்கும்"

"அது வந்து பா.. சித்தி..."

"என்ன சித்தி? அவ தான் உனக்கு சொல்லி கொடுத்தாளா? ஏய் விசாலம் இங்க வாடி"

"ஐயோ இல்லை பா. நான் தான் சொன்னேன்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.