(Reading time: 20 - 39 minutes)

தொடர்கதை - என் அருகில் நீ இருந்தும்!!! - 09 - பூஜா பாண்டியன்

En arugil nee irunthum

ந்த அறையில் அவனைப் பார்த்ததும், வேலைக்கு, தான் ஏன் நிராகரிக்கப்பட்டாள் என, தெள்ளத் தெளிவாகப் புரிந்தது பூமிக்கு.  அதற்குள் அவனே...

“உன்னை யார் உள்ளே விட்டது? என்றான் குரலை உயர்த்தாமலே  கோபமாக.

“என்னைப் பார்க்காமலே என்னை நிராகரித்தது யார் என்று பார்த்து நியாயம் கேட்க  வந்தேன். நீங்கள் தானா! அப்பொழுது நியாயம் கிடைத்த மாதிரி தான்” என்றாள்

“உன்னை மாதிரி பெண்ணுக்கு எல்லாம் இந்த வேலை எதற்கு? அது தான் கைவசம் வேறு வேலை வைத்து இருக்கிறாயே, ஒரு லட்சம் செக் வாங்கும் அளவிற்கு, மார்டன் மகாலஷ்மி தான் போல” என்றான் ஒரு ஏளனத்துடன். 

சாதாரணமாக இப்படி எல்லாம் யாரையும் இளக்காரமாக பேசும் ஆள் இல்லை ஆதித்யா. ஆனால் அன்று ஒரு முக்கியமான வெளிநாட்டு வாடிக்கையாளரை பார்க்க அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சென்றிருந்த பொழுது, முதலில் பூமியை பார்த்து அசந்து தான் போனான். அந்த இடத்திற்க்கு சம்பந்தமே இல்லாமல் மிக எளிமையாக, அந்த எளிமையில் மிக எழிலாக, அவன் கற்பனை  செய்திருந்த ஒரு உருவமாக, வைத்த கண்ணை எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த பொழுது, அவளின் நடவடிக்கை சந்தேகத்தை கிளப்பியது.

ஆட்களே இல்லாத அந்த உணவகத்தில், முதலில் அமர்ந்த இடத்தில் இருந்து எழுந்து மறைந்து அமர்ந்து கொண்டாள்.  வந்த அந்த பணக்கார மனிதனிடம் சிரித்து பேசியபடி செக்கை வாங்கிக் கொண்டாள். இரண்டு டேபிளே தள்ளி இருந்ததால் அவர் சொன்ன ஒரு லட்சதிற்கான காசோலை என்பதும் தெரிந்தது. அப்பொழுது கொஞ்சம் சந்தேகம் வந்தாலும், அடுத்து அவனது டேபிளிலேயே வந்து அமர்ந்து தன்னை, அவளது ப்ஃயான்சி என்ற பொழுது கோபத்தின் உச்சிக்கே சென்றான் ஆதி.

சாதாரணமாக சில பெரிய இடத்து பார்டிகளில் இப்படிப் பட்ட பெண்களை பார்க்கும் பொழுது, அவனுக்கு பெரிதாக ஏதும் தோன்றியது கூட கிடையாது. ஆனால் சில நிமிடங்களே ஆனாலும் மனதிற்கு நெருக்கமாக வந்த பெண் இப்படிப்பட்ட பெண்ணா? என்ற பொழுது, சகித்துக் கொள்ளவே முடியவில்லை ஆதியால். அதனாலேயே வார்த்தைகளும் சூடாகவே வந்து விழுந்தது.

அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு வெகுண்டு எழுந்தாள் பூமி. ‘அன்று எதோ அவனுக்கு வலை வீசுகிறேன் என்றான். இன்று அவளே தப்பான பெண்’ என்பது போல் பேசுகிறானே என்று.

“அது என்ன, என்னை மாதிரி பெண்?  என்னைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? ஒரு பெண்ணைப் பற்றி பேசும் முன் என்ன, எது என்று தெரிந்து பேச மாட்டீர்களா?” என்று கோபத்தில் கொதித்தாள் பூமி.

“வேலை இல்லை என்று சொன்ன பின்பும், CEO அறைக்கு வந்து பேசுபவளை என்னவென்று நினைப்பது? உதட்டோர சிரிப்புடன் கேட்டான் ஆதி.

“பார்ப்பதற்கு கொஞ்சம் வெள்ளையும், சொள்ளையுமா இருந்தா போதுமே, எல்லா பெண்களும் தங்கள் பின்னால் அலைவதாக நினைப்பு தான்.....”

“ம்ம்ம்..... அப்புறம்!!! “ என்றான் ஆதி.

“என்ன அப்புறம், சப்பரம்?”

“என்னைப் பற்றி வர்ணிக்க ஆரம்பித்தாயே முழுவதும் சொல்லி முடி” என்றான் புன்சிரிப்பு மாறாமல்.

“உங்களைத் தானே நல்லா வர்ணிக்கலாம். தலையில் ரெண்டு கொம்பு மட்டும் தான் பாக்கி, அதுவும்  இருந்தால், சாத்தான் ஐ.டி கம்பெனி நடத்துவது போல் இருக்கும்”

“நான் சாத்தான் இல்லை என்று நிருபிக்க இரண்டு நிமிடம் போதும். என்னோட ஸ்டாப்ஸ் ரெண்டு பேரை கூப்பிட்டு கேட்டாலே தெரிந்துவிடும். நீ நல்ல பெண் என்பதை நிரூபிக்க?” என்று அவள் நல்ல பெண் தான் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அவளிடம் கேட்டான் ஆதி.

“உங்களுக்காக எல்லாம் நான் அக்னி பிரவேசம் செய்து, நான் நல்ல பெண் என்று நிருபிக்க, எனக்கு எந்த அவசியமும் இல்லை. பூமிஜா என்பதே, சீதா தேவியின் மறு பெயர் தான்” என்றபடி அங்கிருந்து கோபமாகக் கிளம்பிச் சென்றாள் பூமி.

கோபத்தில் சிவந்த அவள் முகத்தை பார்த்த பொழுது, தான் கணித்தது தவறோ என்று முதலில் வருத்தமாக இருந்தாலும், அது தவறாக இருக்கும் பட்சத்தில், அவனது மனம் மகிழவும் செய்தது. 

அடுத்து வந்த வாரத்தில், அணிமலர் அவளை போனில் அழைத்து “நமது ஆசிரமத்திற்கு இருந்த பண கஷ்டம் எல்லாம் நீங்கி விட்டது. ஒரு பெரிய நிறுவனம் நமது ஆசிரமத்தை தத்து எடுத்துக் கொள்ளப் போகிறார்கள். நாளை அதற்க்கான லீகல் வேலைகள் உள்ளது. சாட்சி கையெழுத்து போட நீயும் வந்தால் நன்றாக இருக்கும் பூமி” என்றார் மகிழ்ச்சியான குரலில்.

அவரது குரலில் இருந்த மகிழ்ச்சி பூமிஜாவையும் தொற்றிக் கொண்டது. “கண்டிப்பாக நாளை வருகிறேன் அம்மா” என்றாள்.

நினைத்தாலே  நிம்மதியாக இருந்தது. இனிமேல் குழந்தைகளுக்காக என்று கண்டவனிடமும் சென்று பணம் வசூலிக்க வேண்டியதில்லை. ‘இதில் பணம் கொடுக்காதவன் கூட எவ்வளவு ஏளனமாக பேசினான்’ என்று ஆதியை நினைத்தாள். ‘இடியட்’ என்று  வாய்க்குள் முனங்கவும் செய்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.