(Reading time: 20 - 39 minutes)

அதனை எடுத்து பார்த்த பொழுது தெரிந்தது, இரண்டு வாரங்களுக்கு முன், அவனது கம்பெனியில் நேர்முக தேர்விற்கு பதிவு செய்த பொழுது, கொடுத்த போட்டோ என்று. அதைப் பார்த்ததும் சில் என்று பனி மழையே பெய்தது போல் இருந்தது பூமிக்கு. ‘அப்படி என்றால் அவனுக்கும் என்னை பிடிக்கும் என்று தானே பொருள்.’

‘நான் நன்றாக இருக்கவேண்டும் என்று தான் என்னை விட்டு விலக நினைக்கிறான். அவன் அருகில் இருந்தால் தான் நான் நன்றாக இருப்பேன் என்பதை அவனுக்கு எப்படி புரியவைப்பது.  அவனை எப்படி சம்மதிக்க வைப்பது என்று யோசித்தபடி,  தனது வீட்டிற்க்கு கிளம்பிச் சென்றாள்  பூமி.

அதன் பின் வந்த ஆறு மாதங்களில் ஏதேதோ சாக்கு வைத்து, அவர்கள் வீட்டிற்கு சென்று வந்தாள். முதலில் அவன் இல்லாத நேரங்களிலும், பின்பு அவன் வீட்டில் இருக்கும் ஞாயிற்றுகிழமைகளிலும். ஆசிரம கணக்குகளை காட்டுகிறேன் என்று அவனுடன் பேசவும் ஆரம்பித்தாள்.

ஆதியும் முதலில் அவளை தவிர்த்தாலும், பின்பு அவளுடன் பேசுவதே சுகமாக இருக்க, பேச மட்டும் தானே செய்கிறோம் என்று, அவளுடன் நன்கு பழகவும் செய்தான். “வேலையில் சேர்ந்து கொள்கிறாயா?” என்று கேட்கும் அளவிற்கு.

ஆனால் பூமி அதை மறுத்துவிட்டாள். அவனாக அவனது விருப்பத்தை சொல்வான் என்று எதிர்பார்த்து, அலுத்துப் போன பூமி,  ‘நாமே ஏதாவது செய்தால் தான் உண்டு’ என்று எண்ணி பாட்டியிடம் வந்து,

“பாட்டி இன்று முழுவதும் நான் உங்களுடன் தான் இருக்க போகிறேன்” என்று இன்ப அதிர்ச்சியை கொடுத்தாள் குழல்மொழிக்கு.

“உன் வாழ்நாள் முழுவதும் எங்களுடன் இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் விரும்புகிறோம் பூமிமா. ஆதி மட்டும் சம்மதித்து விட்டால் போதும்.” என்றார் பாசத்துடன் அவள் தலை கோதி.

“அவரை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. அவரை இன்று கொஞ்சம் சீக்கிரம் வீட்டிற்கு வரச் சொல்லுங்கள் பாட்டி.” என்றாள் பூமி.

“கண்டிப்பா சொல்றேன் பூமி.” என்றபடி போனை எடுத்து ஆதியுடன் பேசினார். பின் பூமியிடம் “அவன் வரேன்னு சொல்லிட்டான் பூமி. உனக்கு ஏதாவது வேண்டுமா?, வாங்கி வரச் சொல்லவா?” என்றார்.

அதைக் கேட்டு, அவர்கள் வீட்டின் பின் புறம் இருந்த நீச்சல் குளத்தை சுற்றி இருந்த இடத்தைப் பார்த்து வந்த பூமி , “எனக்கு கொஞ்சம் மெழுகுவர்த்திகள் வேண்டும் பாட்டி” என்றாள்.

“நீச்சல் குளம் பக்கத்தில் ஒரு ஸ்டோர் ரூம்மில்  இருக்குமா.” என்றபடி அங்கு வேலைக்கு இருந்த நிர்மலாவை அழைத்து அதனை எடுத்துக் கொடுக்கச் சொன்னார்.

அந்த ஸ்டோர் ரூமிற்கு சென்று பார்த்த பூமி அங்கு துணியால் ஆன ஊஞ்சல் இருப்பதைப் பார்த்து அதையும் எடுத்து அங்கு மாட்டச் சொன்னாள்.

அதன் பின் அவளும், அங்கிருந்த வேலயாட்களுமாக சேர்ந்து அந்த இடத்தையே அழகாக மாற்றி அமைத்தனர். ‘மாலை வருவதாக’ குழல்மொழியிடம் கூறி வீட்டிற்கு சென்றாள் பூமி.

மாலை அம்மாவிடம், “ஆசிரமத்தை தத்து எடுத்த வயதான தம்பதிகள் வீட்டில் ஒரு விருந்து உள்ளது” என்று கூறி சிபிளாக தன்னை அலங்கரித்துக் கொண்டு பேபி பிங்க் நிறத்தில் காட்டன் சேலை அணிந்து கிளம்பினாள் பூமி.

ஆதியின் வீட்டை அடைந்ததும், “பாட்டி அவர் வந்தால் ஒன்றும் சொல்லாதீர்கள்” என்று கூறி பின் பக்கம் சென்று மெழுகுவர்த்திகளை ஏற்ற ஆரம்பித்தாள். அந்த இடமே பிரகாசமாக மாறியது.

பாட்டியும் தன் பங்கிற்கு, வேலை ஆட்கள் அனைவருக்கும் லீவு கொடுத்து அனுப்பினார். ஆதி வந்ததும் “நானும் உன் தாத்தாவும் கோவிலுக்கு சென்று வருகிறோம்” என்று கிளம்பிச் சென்றார்.

ஆதியும் எப்பொழுதும் போல் தனது அறைக்கு சென்று உடை மாற்றி, அவனது லாப்டாப்பை எடுக்க நகர்ந்த பொழுது, ஜன்னல் வழியே பின் பக்கம் வெளிச்சம் தெரிவதைக் கண்டு ஜன்னலின் அருகே சென்று பார்த்தான். எதோ கார்த்திகை தீபம் போல் அந்த இடமே ஜொலிக்கவே வீல்சேரில் அந்த இடத்தை அடைந்தான். நீச்சல் குளத்தை சுற்றி அங்கு சென்ற பொழுது, அங்கிருந்த துணி ஊஞ்சலில் பூமிஜா அழகாக ஆடிக் கொண்டிருந்தாள்.

“என்ன பூமீ இன்று உன் பிறந்த நாளா? இப்படி மெழுகுவர்த்திகளுக்கு நடுவில் அமர்ந்து இருக்க?”  என்றான் அவள் ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் அழகைப்  பார்த்து மயங்கிப்போய்.

“இன்னும் பேபி லெவலிலேயே யோசிக்கரீன்களே ஆதி. சாதாரணமா இதை நீங்க தான் செய்து இருக்கணும். நாம ரெண்டு பெரும் சந்தித்து ஆறு மாதம் ஆகின்றது. அதற்கான ஒரு கொண்டாட்டம் தான் இது.”

“ஆறு மாதம் ஆகிவிட்டதா? நாட்கள் போனதே தெரியல பூமி.”

“அதை தெரிஞ்சு கொள்ள தான் இந்த ஏற்பாடு.” என்று கூறியபடி ஊஞ்சலில் இருந்து எழுந்து, பக்கத்தில் டேபிளில் இருந்த ஒரு சிகப்பு ரோஜாவை எடுத்து, அவன் சேரின் முன் மண்டியிட்டு அமர்ந்தாள்.

“நம்மோட இந்த ஏழாவது ஜென்மத்திலும் உங்களோட இணைய விரும்புகிறேன் ஆதி. நாம திருமணம் செய்து கொள்ளலாமா?” என்றபடி அந்த சிகப்பு ரோஜாவை அவனிடம் நீட்டினாள் பூமி.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.