(Reading time: 20 - 39 minutes)

‘ இன்று நாளே சரி இல்லை’ என்று எண்ணி உள்ளே வந்தால், “என்ன பூமி கிளம்பலையா இன்னும்” என்றார் அம்மா.

“ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகலைமா” என்றாள் எரிச்சலுடன்.

“ஆட்டோவில் போ பூமி. நம்ம ஜோசியர் சொல்லி இருக்கார். உனக்கு நல்ல நேரம் வந்து விட்டது, அதனால் மூன்று செவ்வாய் கிழமை விளக்கு ஏற்றச் சொல்லி இருக்கார், அதனால் கிளம்பு” என்றார்.

பூமியும், ‘எங்கே நல்ல நேரம் வந்தது. காலையில் இருந்து ஒன்றும் சரி இல்லை’ என்று அலுத்துக் கொண்டே கிளம்பினாள்.

கோவிலில் அம்மன் சன்னதியில் விளக்கேற்றி முடித்து, கோவிலை மூன்று சுற்று சுற்றி வந்து அங்கிருந்த மரத்தடி மேடையில்  அமர்ந்த பொழுது, “எப்படிமா இருக்க?” என்றது அருகில் இருந்து ஒரு குரல்.

திரும்பி பாத்தால், ஆதியின் பாட்டி, குழல் மொழி அமர்ந்து இருந்தார். அவரைப் பார்த்ததும் “பாட்டி” என்று அழைத்தபடி அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள் பூமி.

“இப்போ தான் உன்னைப் பற்றி நினைத்துக் கொண்டு இருந்தேன் பூமிஜா” என்றார்.

“என்னைப் பற்றியா, ஏன் பாட்டி?”

“நேற்று ஆசிரமத்தில் உன்னைப் பார்த்ததும், எனக்கு உன்னை ரொம்ப பிடித்துப் போனது. அணிமலரும் உன்னைப் பற்றி உயர்வாகக் கூறினாள். ஆதியின் அம்மாவும், அணிமலரும் ஒன்றாகப் படித்தவர்கள். ஆதியின் அம்மாவின் மறைவுக்குப் பின், நேற்று தான் அவளைப் பார்த்தேன். தொண்டு மனப்பான்மை கொண்டவள். அவளைப் போலவே நீயும் என்று கூறினாள். வாம்மா எங்க வீடு அருகில் தான் இருக்கு” என்றார் பாட்டி.

காலையில் அவனுடன் நடந்த உரையாடலுக்கு பின் அவர்கள் வீட்டிற்கு செல்ல தயக்கமாக இருந்தது பூமிக்கு.

அவளது தயக்கத்தைப் பார்த்து, “எனக்கு துணையாக வாம்மா வீடு வரை, பின் உன்னை நானே உங்க வீட்டிற்கு அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

அவர் இவ்வளவு கேட்ட பின் மறுக்கத் தோன்றாமல், பூமியும் ஆதியின் வீட்டிற்கு சென்றாள் முதல் முறையாக. போயஸ் கார்டனில் இருந்தது அவர்கள் வீடு.  முன்புறம் வீடும், பின்புறம் நீச்சல் குளமும், ஜிம்மும் இருந்தது. நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா என்று என்னும்படி இருந்தது வீடு.

“வாம்மா பூமிஜா” என்றபடி வந்து அமர்ந்தார் ஷங்கர்.

குழல் மொழியும் அவரிடம், “கோவிலில் பார்த்தேங்க பூமியை, அதுதான் கையோடு அழைத்து வந்தேன் நம் வீட்டிற்கு.” என்றார்.

“நேற்று ஆதி அவ்வளவு சொல்லியும், நீ இன்னும் உன் பிடிவாதத்தில் தான் இருக்க, அப்படித் தானே” என்றார்.

“இது என்னோட பிடிவாதம் இல்லைங்க, அந்த கடவுளோட விருப்பம். நானாக தேடிப் போகவில்லை பூமியைப் பார்க்க. அந்த கடவுளே என் கண் முன் காட்டினார்.” என்றார்.

ஒன்றும் புரியவில்லை பூமிக்கு. ‘என்ன பேசுகிறார்கள்? என்னைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் எனக்கு புரியாத வகையில்,’ என்று எண்ணியபடி பாட்டியைப் பார்த்தாள் பூமி.

“நேற்று உன்னைப் பார்த்ததும், எனக்கு ரொம்ப பிடித்துப் போனது பூமி, அணிமலர் வேறு உன்னைப் பற்றி, உன் சேவை மனப்பான்மை பற்றி பேசினாளா, அதனால் உன்னையே எங்க ஆதிக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று  அவனிடம் கேட்டால், நீ ரொம்ப நல்ல பெண்ணாம், உனக்கு நல்ல கணவன் அமைய வேண்டுமாம், அப்படி இப்படி என்று சொல்லிட்டுப் போய்விட்டான். அதைத் தான் உன் தாத்தா இப்படி கூறுகிறார். என்னவோ இவருக்கு இதில் விருப்பம் இல்லாதது போல், நேற்று இவரும் தான் அவனிடம், அவ்வளவு வாக்குவாதம் செய்தார்.” என்றார்.

“ஒ அப்படிப் போகுதா கதை, அது தான் சார் இன்று காலை சரியாக பேசவில்லையா?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள் பூமி.

“சரி நீ வாம்மா உனக்கு வீட்டை சுற்றி காட்டுகிறேன்” என்று அவளை அழைத்துச் சென்றார் குழல்மொழி.

வீடு முழுவதும் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அனைத்திலும் ஒரு செல்வ செழிப்பு தெரிந்தது. மாடிக்கு செல்ல லிஃப்ட் இருந்தது. ஆதியின் உபயோகத்திற்காக என தெரிந்தது. மற்ற அறைகளை காட்டியபடி வந்த குழல் மொழிக்கு ஒரு போன் கால் வர, “நீ உள்ளே போய் பாரும்மா, நான் போன் பேசிட்டு வருகிறேன்.” எனக் கூறி சென்றார்.

அந்த அறைக்குள் சென்று பார்த்த பொழுது, அது ஆதியின் அறை என்று தெரிந்தது. மிக நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டு இருந்தது. வீல்சேரில் இருந்து அவன் எடுக்கும் உயரத்தில் அனைத்தும் இருந்தது. அவன் படுக்கையின்  பக்கவாட்டு டேபிளில் அவனது பெற்றோரின் போட்டோ இருந்தது. அதனை அருகில் சென்று பார்க்க எண்ணி சென்ற பொழுது, அந்த போட்டோவின் அருகில், அவளது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.