(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 15 - மது

AT THE END OF INFINITY

Heart

வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று உறுதியாக தெரியாத போதும் எத்தனை ஆசைகள், எத்தனை கோபங்கள்,  எத்தனை கனவுகள், எத்தனை ஏமாற்றங்கள்,  எத்தனை உறுதிமொழிகள், எத்தனை பொய்யுரைகள், எத்தனை எத்தனைகள்...

தான் இது வரை கடந்து வந்த வாழ்க்கைப் பாதையை சற்று பின்னோக்கிப் பார்த்தாள் ஹரிணி. நமது வாழ்க்கைப் பயணம் முழுவதும் ரோஜா இதழ்கள் தூவிய பூப்பாதையாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறோம். ஆனால் முட்களிலும் கற்களிலும் சடுகுடு ஆடு என்று தள்ளி விட்டுவிடுகிறது வாழ்க்கை. அந்த நேரம் உயிர் ரணமாய் வலித்தது கூட இன்று மறந்து போனதா! மரத்துப் போனதா! வலிகளை கடந்து போய் விடுகின்றன, ஆனாலும் வடுக்கள் நினைவடுக்குகளில் நிரந்தரமாய்.

பயணத்தின் ஓர் திருப்பத்தில் நம் முன் ரோஜாப்பூ பாதை.  இருப்பினும் மரத்துப் போன பாதங்களால் ரோஜாக்களின் மென்மையை உணர முடியாமல் இருக்கிறதே என்று அப்பாதையை மறுப்பதா. பயணம் முழுவதும் அந்த ரோஜாக்கள்  ஓர் இனிய சுகந்தத்தை நாசி வழியே உயிர் ஆழம் வரை  பரப்புமே!  அந்த  இதத்தை அனுபவிக்கலாமே!

இது கலியுகம் தான். பாவங்களும் அக்கிரமங்களும் கொட்டிக் குவிந்திருக்கின்றன தாம். ஆனாலும் ஆங்காங்கே பூக்கள் மலர்கின்றதே, தென்றல் வீசுகின்றதே, சாரல் பொழிகின்றதே, சில நல்ல உள்ளங்களும், தூய ஆன்மாக்களும் நம்முடன் சேர்ந்து பயணம் செய்கின்றனரே.

அவை சிலருக்கு நொடிப்பொழுதுகள் மட்டுமே நீடித்திருக்கலாம். ஆனாலும் அந்த தருணங்கள் பொக்கிஷம் அல்லவா. ஓர் நம்பிக்கை அல்லவா.

இந்தப்  பொக்கிஷத்தை பலர் உணராமலே பயணித்துக் கொண்டிருக்கிறோம். அவளும் அப்படித் தான் இருந்திருப்பாள், ஹர்ஷவர்தன் என்றொருவன் உடன் பயணிக்காமல் போயிருந்தால்.

எதுவும் நிரந்தரம் இல்லை, இதுவும் கடந்து போகும் என்பது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் என்று அனுபவித்திருக்கிறாள். அந்த அனுபவம் அவளை பக்குவப்படுத்தியிருந்தது. ஆனாலும் நேற்று ஹர்ஷா அந்த எமர்ஜன்சி சர்ஜரியின் பின்  உடைந்து போனதும் அவள் பிரின்ஸ் என்று அழைத்த போது உருகிப் போனதும் அவள் மனதிலே நிழலாடிக் கொண்டிருந்தது.

அதே நேரம் அவன் மனதிலும் அதே நினைவுகள் தான் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன.

அன்று மருத்துவப் பட்டம் பெற்றக் கையோடு அவனை ஏர்போர்டில் அனுப்பிய அந்த ஹரிணி தான் இப்போதும் அவன் கண் முன் சிரித்துக் கொண்டிருந்தாள். அந்த சந்தோஷச் சிரிப்பும் உற்சாகத் துள்ளலும் இனி அவள் முகத்தில் எப்போதும் பார்க்கவே போவதில்லை என்று அன்று நினைத்தும் பார்க்கவில்லை தான்.

“ஹரி உன்னை ஒரு சிறந்த கார்டியாக் சர்ஜனா நான் சீக்கிரமே பார்க்கணும்” அவள் சொல்ல அவன் சிரித்தான்.

“சீக்கிரம்னா நாளைக்கேவா, முதலில் நான் சர்ஜரி முடிக்கணும், அப்புறம் கார்டியாக்கில் ஸ்பெஷலைஸ் செய்யணும், அப்புறம் ப்ராக்டீஸ் செய்யணும் ஹப்பாடா நினைச்சாலே மலைப்பா இருக்கே. நான் அதுக்குள்ளே கிழவன் ஆகிடுவேன்” அவன் கேலி போல சொன்னாலும் உண்மையும் அது தான். படித்து முடிக்கவே இன்னும் ஐந்து ஆண்டுகள் பிடிக்கும். அதன் பின்பும் அந்தந்த துறையில் சிறந்து விளங்க இன்னும் சில ஆண்டுகள் ஆகிவிடுமே.

“அதெல்லாம் மத்தவங்களுக்கு. உனக்கு இல்ல. யூ ஆர் பார்ன் டு பி எ கார்டியாக் சர்ஜன்” அவள் சொல்ல சொல்ல அவனுக்குள் நம்பிக்கை ஊற்றாய் பெருக்கெடுத்தது.

சிரித்தபடியே கையசைத்து அவனுக்கு விடை கொடுத்தாள்.

தற்குள் பூமி சூரியனை மூன்று முறை சுற்றி வந்துவிட்டதா எனும் படி காலம் அதி விரைவாக சுழன்றது.

ஹரிணி இரண்டு வருடங்கள் வேலை செய்து விட்டு மயக்க மருந்தியலில் மேற்படிப்பு சேர்ந்திருந்தாள்.

ஹர்ஷா சர்ஜரியில் பட்டம் பெற்று கிளீவ்லேன்ட் க்ளினிக்கில் கார்டியாக் சர்ஜரி சிறப்பு பயிற்சியில் சேர்ந்திருந்தான்.

ஹவுஸ் சர்ஜன் பயிற்சியே மேல் எனும் படி  முப்பது ஆறு மணி நேர பணி எல்லாம்  சர்வ சாதாரணம் ஆனது.

ஹரிணி ஹர்ஷா இருவரும் தினம் தினம் உரையாடிக் கொள்ளவில்லை தான். சில சமயம் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் அவர்கள் உரையாடுவார்கள். அதுவும் ஒரு சில மணித்துளிகளே. இருப்பினும் காலமும் தூரமும் அவர்களிடையே இடைவெளியை ஏற்படுத்த முடியமால்  திணறித் தான் போயின.

இதய அறுவை சிகிச்சைத் துறையில்  உலகத்தில் தலை சிறந்த க்ளீவ்லான்ட் க்ளினிக்கில் ஹர்ஷாவிற்கு இடம் கிடைத்தது குறித்து ஹரிணி டாக்டர் பாண்டிதுரை மீனலோசினி இருவரிடமும் நேரில் சென்று தெரிவித்தாள்.ஹர்ஷவர்தன் அவர்களுக்கு மெயில் செய்திருந்ததை தெரிவித்து அவர்கள் இருவரையும் குறித்து மிகுந்த பெருமை கொள்வதாக வாழ்த்தினர்.

ஹரிணி சாரதாவை அடிக்கடி தொடர்பு கொண்டு நலம் விசாரிக்க ஸ்வாதிகாவும் ஹரிணியுடனும் அவள் சகோதரிகளுடனும் அளவளாவிக் கொண்டிருப்பாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.