(Reading time: 16 - 32 minutes)

ரு நாள் சாரதாவும் ஸ்வாதிகாவும் ஹரிணியை சந்திக்க சென்னை வந்தனர்.

“யேல் பல்கலைகழகத்தில் எம்பிஏ படிக்க யுஎஸ்  போறேன் விதுக்கா. அதான் உங்களை பார்த்து சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்” ஸ்வாதிகா கொஞ்சும் தமிழில் பேசவும் ஹரிணி ஆச்சரியம் கொண்டாள்.

“ஷாஸா கிட்ட சொல்லிடாதீங்க. நான் நேரில் போய் ஆச்சரியப்படுத்த போகிறேன்” என்றவள் சாரதாவிடம் தமிழ் கற்றுக் கொண்டதைத் தெரிவித்தாள்.

அந்த  மூன்று வருடங்களில் இரண்டே முறை தான் ஹர்ஷா இந்தியா வந்திருந்தான். அதுவும் அவனது மூத்த சகோதரிகளின் திருமணத்திற்கு.

ஹரிணி குடும்பத்தினருக்கு சாரதா அழைப்பு விடுத்திருந்த போதிலும் அச்சமயம் நீண்ட பயணம் எல்லோராலும் முடியாது என்றபடியால் வாழ்த்துக்களை மட்டும் அனுப்பினர்.

ராஜா விஷ்ணுவர்தன் வயோதிகம் காரணமாக தளர்ந்து போயிருந்தார். ஹர்ஷாவின் திருமணத்தையும் விரைவில் நடத்தி விடலாம் என்று சாரதாவிடம் ஆலோசித்தார்.

மகனின் மனதில் என்ன இருக்கிறது என்று சரியாக தெரியாத போது என்ன சொல்வது என்று தெரியாமல் சாரதா குழப்பம் அடைந்தார்.

அவன் ஹரிணியை மணக்க விரும்பினால் அதற்கு ராஜா விஷ்ணுவர்தன் தடை ஏதும் சொல்லப்போவதில்லை. வாழ்க்கை தான் அவருக்கு ஏற்கனவே பாடம் கற்பித்திருந்ததே. ஆனாலும் ராணி ஸ்வாதிகாவை ஹர்ஷாவிற்கு மணம் முடிக்கவே விரும்பினார்.

அது குறித்து அவர் மூத்த மருமகளிடம் மறுபடியும் ஆலோசனை செய்ய இருவரின் மேற்படிப்பு முடிந்ததும் திருமணத்தை நடத்தி விடலாம் என்று அவரின் சகோதரர் தெரிவித்ததாக சொன்னார்.

எப்படியும் இன்னும் படிப்பு முடிய இரண்டு வருடங்கள் இருக்கின்றன. அதன் பிறகு ஒரு முடிவிற்கு வரலாம் என்று ஆலோசித்தனர்.

ஹரிணிக்கு மயக்க மருந்தியல் மிகவும் பிடித்துப் போயிருந்தது. டாக்டர் மீனலோசினி அவளுக்கு நிறைய அறிவுரைகளை வழங்கினார். அவளது சகோதரிகள் மூவரும் தங்களது படிப்பினை முடித்து நல்ல வேலையில் சேர்ந்திருந்தனர். பாரதியை கட்டாயமாக விருப்ப ஓய்வு பெறச் செய்தாள். வாழ்க்கை அதன் போக்கில் செல்ல அனைவரும் அதில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

டிசம்பர் மாதம். பூமி கனமான வெண்பனிப் போர்வையை போர்த்திக் கொண்டிருந்தது. அந்த நடுங்கும் குளிருக்கு பயந்து பகலவன் கூட உதிக்கமால் முரண்டு செய்து கொண்டிருந்தது.

“ஆறு மணிக்கெல்லாம் வார்டில் இருக்க வேண்டுமாம். ஒரு நியாயம் வேண்டாம்” அலுத்துக் கொண்டே குளிரில் இருந்து பாதுகாக்க கனமான கோட்டினை அணிந்து கொண்டு விரைந்தாள் அவள்.

அன்று தான் அவளுக்கு அங்கு முதல் நாள். இந்த ஊர், இந்தப் பனி எல்லாமே அவளுக்குப் புதிது.

“அத்தனை இடங்களில் விண்ணப்பித்து இருந்தேன். இருந்திருந்தும் இங்கு தானா நான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” அவள் மனதிலே அலுத்துக் கொண்டாள். ஆனால் விரைவிலேயே அது ஒரு வரம் என்று அவள் உணரத் தான் போகிறாள்.

ஆனால் இப்போதோ ஓட்டமும் நடையுமாக மருத்துவமனைக்கு விரைந்தாள்.

வார்டில் நுழைந்தவள் அங்கே இருந்த அறையில் அவளது கோட்டினை கழற்றி வைத்து விட்டு வெள்ளைக் கோட்டை அணிந்து கொண்டாள். விரைந்து நர்சிங் சூப்பர்வைசரிடம் சென்று அவளை அறிமுகம் செய்து கொண்டு ரவுண்ட்ஸ் எப்போது தொடங்கும் என்று கேட்டாள்.

ரவுண்ட்ஸ் முடிந்து பத்து நிமிடம் ஆயிற்று என்று நர்சிங் சூப்பர்வைசர் சொல்ல ஒரு முறை கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள்.

“முருகா!!! முதல் நாளே இப்படி ஆகிருச்சே, ரவுண்ட்ஸ்னா ஒரு அரை மணி நேரமாவது நடக்கும். நாம அப்படியே சேர்ந்து கொள்ளலாம்னு பார்த்தா எவனவன் ரவுண்ட்ஸ் நடத்தியது என்று தெரியவில்லையே” அவள் மனதிலே பேசிக் கொள்வதாய் தான் நினைத்தாள். ஆனால் அவள் எண்ணியதை அவள் உதடுகள் மொழிந்து விட்டதை சற்று தாமதமாக தான் உணர்ந்தாள். அது அடிக்கடி நடக்கும் ஒன்று தானே. இங்கே யாருக்கு தமிழ் தெரியப் போகிறது என்று அலட்சியமாக இருந்தாள்.

அப்போது அவளுக்குப் பின்னிருந்து கணீர் என ஒரு குரல் ஒலித்தது.

“ஆஹா என்ன ஒரு ராஜ கம்பீரமான குரல்” என்று மெய்மறந்து போயிருந்தாள் அவள்.

நர்சிங் சூப்பர்வைசர் “ஒகே டாக்டர் ஹெச்எஸ்ஆர்” எனவும் சட்டென சுய உணர்வு அடைந்தவள் திரும்பிப் பார்க்க அதற்குள் குரலுக்குச் சொந்தக்காரன் இருபது அடி கடந்திருந்தான்.

“ஐயோ இவரு தான் டாக்டர் ஹெச்எஸ்ஆரா. அவரிடம் தானே நான் ரிபோர்ட் செய்யணும்” ஒரே ஓட்டமாக சென்று அவன் முன் சென்று வழியை மறைத்து நின்று கொண்டு மூச்சு வாங்கினாள்.

அவன் ஏதும் பேசவில்லை. யார் நீ என புருவங்களை சற்றே உயர்த்திப் பார்வையாலேயே கேட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.