(Reading time: 16 - 32 minutes)

“பேஷன்டே வேண்டாம் இவரை வச்சே தீசிஸ் முடிச்சிரலாம் போல” அவன் முக பாவனைகளை கண்டு அவள் முணுமுணுத்தது அவன் செவிகளில் விழத்தான் செய்தது. அவன் இதழோரம் சிறு முறுவலை அவள் கவனிக்கவில்லை.

அவள் தன்னை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்து கொள்ள அவள் இன்னார் தான் என்று என்ன அத்தாட்சி என்று கேட்டான்.

“இது வேறயா. இந்த நாய்ச் சங்கிலியை போட மறந்துட்டேன். ஷப்பா” என்று இப்போது இன்னும் கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுத்துக் கொண்டவள் அவளது அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்தாள்.

“பூர்வி மோகன், பிஹெச்டி ஸ்டுடன்ட் சைகாலஜி” என அடையாள அட்டையை வாசித்தவன், “ரவுண்ட்ஸ் ஆறு மணிக்கு தொடங்கும். மணி இப்போது ஆறரை. நாளைக்கு வா” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென சென்று விட்டான்.

“இது என்ன இன்று போய் நாளை வா , இதுக்காகவா நான் அஞ்சு மணிக்கெல்லாம் அலாரம் வச்சு இந்த குளிரிலும் குளிச்சு முழுகி, கந்த ஷஷ்டி கவசம்  எல்லாம் சொல்லி முடிச்சு பனியில்  பாலே டான்ஸ் ஆடி  ஓடோடி வந்தேன்” அலுத்துக் கொண்டவள் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தினாள்.

அப்போது அவளருகில் வந்த ஒரு பெண்மணி அவள் மிஸ் மோகன் தானே என்று கேட்டு அவளை ஓர் அறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கே நிறைய சோபாக்கள் இருந்தன. வட்ட வட்ட மேசைகளும் சுற்றிலும் நாற்காலிகளும் ஒரு பெரிய தொலைக்காட்சி பெட்டியும் இருந்தது.

அறையின் இன்னொரு பகுதியில் பான்ட்ரி எனப்படும் உணவகம் இருந்தது.

“டாக்டர் ஹெச்எஸ்ஆர் ஆபரேஷன் செய்ய சென்றிருக்கிறார். உங்களை இங்கேயே ப்ரேக்பாஸ்ட் முடித்துக் கொண்டு காத்திருக்கச் சொன்னார்” என்றார் அந்தப் பெண்மணி.

“ஹப்பாடா லேசா பசிக்க வேற செய்யுதே என்ன செய்றதுன்னு யோசிச்சுட்டே இருந்தேன். நல்ல வேளையா இந்த அம்மா புண்ணியம் கட்டிக் கொண்டாங்க” என்று நினைத்துக் கொண்டவள் அந்த பெண்மணிக்கு நன்றி சொன்னாள். வேறு ஏதும் தேவை எனில் அழைக்க சொல்லி அவரது தொலைபேசி எக்ஸ்டென்ஷனை தந்து விட்டு புன்னகையுடன் விடைபெற்றுக் கொண்டார்.

“ஹெச்எஸ்ஆர் இது ஒரு பேரா. இப்படி எல்லாம் பேர் வைப்பாங்களா என்ன. அவரு கழுத்திலும் சங்கிலி தொங்கிக் கொண்டிருந்ததே. ச்சே அதை பார்க்கமால் போய்ட்டோமே” என்று சிறிது நேரம் வருத்தம் கொண்டவள் ஒரு சான்ட்விச் காபியை எடுத்துக் கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

அங்கே வருவோர் போவோரை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள். ஒருவர் தவறாமல் அனைவரும் அவளுக்கு முகமன் கூறினர். இவளும் பதிலுக்கு குட் மார்னிங்  சொல்லி களைத்துப் போனாள்.

“இன்னும் விடியக் கூட இல்லை. அதுக்குள்ளே என்ன குட் மார்னிங்” கொட்டாவியை தட்டி விட்டு அலுப்பாய் சோபாவில் சாய்ந்து கொண்டாள்.

பூர்வி சைக்காலஜி முடித்து பிஹெச்டிக்கு விண்ணப்பித்திருந்தாள். “இதயங்களை குணமாக்கும் இசை MUSIC HEAL HEARTS ” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்ய விருப்பம் கொண்டாள்.

இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் முக்கியமாக அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு  ஆளாவது உண்டு. எவ்வளவு கவுன்சலிங் செய்தாலும்  உயிர் பிழைப்போமா என்ற பயம், சர்ஜரி முடிந்ததும் ஏற்படும் வலி, உபாதைகள் என சில நேரம் டிப்ரஷன், சைகொசிஸ் போன்ற தீவிர மனநோய்க்கு ஆளாவதும் உண்டு.

இசை எவ்வாறு அந்த நோயாளிகளுக்கு இதமளித்து அவர்களின் மனஉளைச்சலை குறைக்கும் சக்தியாக விளங்குகிறது என்பது குறித்த ஆராய்ச்சியை தனது தீசிஸ்ஸாக எடுத்துக் கொண்டாள். இசை மீது தீவிர காதல் உண்டு அவளுக்கு. எனவே தான் இந்த தலைப்பை தேர்வு செய்தாள்.

“இந்த ஹெச்எஸ்ஆர் என்ன பேரோ அவர்  கூட தான் தீசிஸ் செய்யணும்னு சொல்லிட்டாங்களே. ஆரம்பத்திலேயே சுருதி சேரலையே, ஆமா ப்ரொபசர் எல்லாம் இருக்கும் போது இப்போ தான் கார்டியாக் சர்ஜரி படிக்கும் ஸ்டுடன்ட்டை போய் எனக்கு மென்ட்டரா போட்டிருக்காங்க. ஆனா ஆளைப் பார்த்தா ஸ்டுடன்ட் போலவா தெரியுது, அந்த மிடுக்கும் பார்வையும் அப்பப்பா” தனக்குத் தானே பேசிக் கொண்டாள்.

அவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அவன் மென்ட்டராக இருக்க மாட்டானா என பலர் தவமிருக்கிறார்கள் என.

ல்லோராலும் ஹெச் எஸ் ஆர் என்று அழைக்கப்படும் ஹர்ஷவர்தன் சிங் ராத்தோர் கார்டியாக் சர்ஜரியில் சிறப்புப் பயிற்சியில் சேர்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகியிருந்தன.

அன்று மிகவும் சிக்கலான சர்ஜரி  நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொதுவாக மூத்த சர்ஜன் தான் அவ்வாறான சிக்கலான சர்ஜரி செய்வர். அவர்களுக்கு துணை புரிய ஜூனியர் சர்ஜன் முதல்  அசிஸ்டன்டாக இருப்பர். பயிற்சி மாணவர்கள் உடனிருந்து கவனித்துக் கொண்டு இருப்பார்கள். அன்று  உடல் நலமின்மை காரணமாக  அந்த சர்ஜரிக்கு வர வேண்டிய ஜூனியர் சர்ஜன் விடுப்பு எடுத்துக் கொண்டதால் ஹர்ஷா தான் துணை சர்ஜனாக இருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.